full screen background image

“ஹன்ஸிகா என்னைவிட சிறப்பாக நடித்திருக்கிறார்…” – ஜெயம் ரவி ஒப்புதல்..!

“ஹன்ஸிகா என்னைவிட சிறப்பாக நடித்திருக்கிறார்…” – ஜெயம் ரவி ஒப்புதல்..!

கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம் விநியோகஸ்தர்களின் கணக்குப்படி வெற்றிக் கோட்டை நிச்சயம் எட்டிவிடும் என்கிறார்கள்.

இந்த வெற்றியை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கொண்டாடினார்கள் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், மற்றும் படத்தை வாங்கி வெளியிட்ட காஸ்மோ வில்லேஜ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிவக்குமார், ஹீரோவான ஜெயம் ரவி, இயக்குநர் லஷ்மண் ஆகியோர் பகிர்ந்து கொண்டார்கள்.

விநியோகஸ்தர் சிவக்குமார் பேசும்போது, “என்னோட முதல் வெளியீடான ‘நாய்கள் ஜாக்கிரதை’ திரைப்படம் நான் எதிர்பார்க்காத வெற்றியை எனக்கு பெற்று தந்தது, இதுலயே எனக்கு திரையுலகம் மேல நம்பிக்கை வந்துவிட்டது. இந்த ரோமியோ ஜூலியட் படத்தைப் பற்றி 3 மாதத்துக்கு முன்பேயே  கேள்விப்பட்டு எப்படியாவது நாம்தான் ரிலீஸ் செய்ய வேண்டும்னு நினைச்சிட்டு இருந்தேன், அதன்படியே நந்தகோபால் சாரிடம் பேசி படத்தை என் பேனரில் ரிலீஸ் செய்தேன்

தற்போது இப்படத்தின் ரிசல்ட் உங்கள் அனைவருக்கும் தெரியும். மனசுக்கு நிம்மதியா சந்தோஷமாவும் இருக்கு, இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்தது எனக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன். ஜெயம் ரவி ஸார் அடுத்து எனக்கும் கால்ஷீட் கொடுத்தால் அவரை வைத்தும் படம் தயாரிப்பேன்.” என்று கூறினார்.

படத்தின் இயக்குநர் லஷ்மண் பேசும்போது, “பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் சேர்ந்து அறிமுக இயக்குநரான என்னை வெற்றியடைய வைத்தது சந்தோஷமா இருக்கு, எத்தனையோ இயக்குநர்கள் ஜெயம் ரவி சார் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள், ஆனால் அறிமுக இயக்குநரான என்னை அழைத்து எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த ரவி சார் மற்றும் அவருடைய அப்பாவான எடிட்டர் மோகன் சாருக்கு என் நன்றி. நான் வணங்கும் கடவுளுக்கு அடுத்தபடியா இவர்கள் இருவரையும்தான் பார்க்கிறேன்…” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் பேசும்போது, “ரோமியோ ஜூலியட்’ படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கிய மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை எடுத்து முடித்த பிறகு அதனை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய காத்திருந்த எனக்கு பல கஷ்டங்கள் வந்தது, ஆனால் தற்போது இந்த வெற்றியை பார்த்த பிறகு அந்த கஷ்டங்களெல்லாம் எனக்கு மறைந்துவிட்டது.

‘ரோமியோ ஜூலியட்’ படத்திற்காக உழைத்த இயக்குநர் ல‌ஷ்மண் மற்றும் ஜெயம் ரவி, ஹன்சிகா, இமான் மற்றும் படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, “நான் சரியான ஹிட் கொடுத்து ரொம்ப வருஷமாச்சு, இந்த வருஷம் எப்படியும் மக்கள் பாராட்டும்படி ஒரு ஹிட் கொடுக்கனும்னு நினைச்சேன். அது இந்த ரோமியோ ஜூலியட் மூலம் நடந்திருக்கு.

இந்தப் படத்துக்கு ரசிகர்கள் கொடுக்கும் அமோக ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது. அதோடு விமர்சனங்களும் மிகவும் ஆதரவாக வந்துகொண்டிருக்கின்றன. பத்திரிகைகளும், ரசிகர்களும்தாம் எப்போதும் என்னுடைய பலம் என்பது இப்போதும் நிருபணமாகியிருக்கிறது.

ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு நான் மிகவும் சிரமப்பட்டேன், ஒருநாள்கூட ஓய்வெடுக்காமல் உழைத்திருக்கிறேன், மாதம் ஒரு படம் வெளியாகும் அளவு வேலை செய்திருக்கிறேன். இப்போது இந்தப் படத்தின் வெற்றி எனக்கு ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது.

படத்தின் தயாரிப்பாளரான நந்தகோபால் இந்த படத்தை விரும்பி தயாரித்தார். இப்போ இந்த படம் வெற்றி அடைந்திருக்குன்னா அதற்கு தயாரிப்பாளர் நந்தகோபால் இந்த படத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் முக்கிய காரணம். படம் ரிலீசுக்கு முன்பே எங்களுக்கு படத்தின் வெற்றிக்கான வைபரேஷன் தெரிஞ்சுது.

இந்தப் படம் மக்கள் மத்தியில் அதிகமா பேச காரணமான இசையமைப்பாளர் இமானுக்கும் என் நன்றி. அடுத்ததா படத்தை வாங்கி வெளியிட்ட காஸ்மோ வில்லேஜ் சிவக்குமார் ஸாருக்கும் என் நன்றி, நிஜமாவே இவர் லக்கிமேன்தாங்க இவர் எந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறாரோ அந்த படம் கண்டிப்பா ஹிட்டு என்ற பெயரை எடுத்துட்டாரு.

இந்தப் படத்தை இயக்கிய லட்சுமண் என்னுடைய சகோதரர் போன்றவர், மிகவும் திறமைசாலி. என் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார், முதல் படத்திலேயே வெற்றியும் பெற்றிருக்கிறார். என் மூலமாக இப்படி ஒரு இயக்குநர் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்திருக்கிறார் என்பதில் எனக்கும் சந்தோசம்தான்.

இந்தப் படத்தில் ஹன்சிகா என்னைவிட நன்றாக நடித்திருக்கிறார். ஹன்சிகாவைப் பற்றிப் பேசும்போது நான் உற்சாகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். பொதுவாக எந்தப் படத்தின் விளம்பரத்திற்காகப் பேசுகிறோமோ, அந்தப் பட நாயகியைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது இயல்புதான். அதுபோலத்தான் இது..!

அடுத்து என்னுடைய படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் நானும், நயன்தாராவும் நடிக்கும் ‘தனியொருவன்’ படம்.. ‘பூலோகம்’ தயாராகியிருக்கிறது, சுராஜ் இயக்கத்தில் த்ரிஷா, அஞ்சலியோடு நடித்திருக்கும் ‘அப்பாடக்கர்’ தயாராகி வருகிறது. மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஒரு சக்திராஜன் என்ற இயக்குநரின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளேன்..” என்றார்.

Our Score