full screen background image

“விமானத்தில் வராத ‘கொரோனா’ தியேட்டரில் மட்டும்தான் வருமா…?” – திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் கேள்வி.

“விமானத்தில் வராத ‘கொரோனா’ தியேட்டரில் மட்டும்தான் வருமா…?” – திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் கேள்வி.

“விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா..?” என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ‘ரோகிணி’ ஆர்.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ரோகிணி பன்னீர்செல்வம் “தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்..?” என்று கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் பேசும்போது,  “கொரோனா லாக்டவுன்  தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன. திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர்.

என்ன செய்யப் போகிறோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை. இந்த லாக் டவுனால் ஒவ்வொரு திரையரங்கத்திற்கும் 25 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம்  மொத்தமாக 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் படத் தயாரிப்புகள் இல்லாமல் சினிமா சார்பான இழப்பு என்றால் 3000 கோடி ரூபாய்  இருக்கும் என்று கூறுகிறார்கள். 

இப்போது விமானங்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்து விட்டன. விமானத்தில் நெருக்கமாக அமர்ந்துதான் பயணம் செய்கிறார்கள். விமானத்தில் அவ்வளவு நெருக்கமாகப் பயணம் செய்யும்போது வராத கொரோனா திரையரங்கில் மட்டும் எப்படி வந்து விடும் என்று நினைக்கிறார்கள்…?

திரையரங்கத்தில் ஏதாவது மாற்றம் செய்யச் சொன்னால் அதைச் செய்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழகஅரசைக் கேட்டுக் கொள்கிறோம். அதற்கான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்…” என்றார்.

சமீபமாக பல தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ச்சியாக OTT-யில் வெளியாவது பற்றிக் கேட்டபோது,

“மக்கள் திரையரங்கத்திற்கு வந்து படம் பார்க்கத்தான் விரும்புவார்கள். அதுதான் அவர்களுக்குத்  திருப்தி அளிக்கும். திரையரங்கத்தில் படம் பார்க்கும்போது வரும் திருப்தி வேறு எந்த தளத்திலும் கிடைக்காது. வேறு வழியில்லாமல் இப்போது OTT-யில் பார்க்கலாம். ஆனால் அதுவே  ஒரு நிரந்தரமான தீர்வு அல்ல. திரையரங்கில் படம் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் இரண்டாவது முறை வேண்டுமானாலும் OTT-யில் பார்க்கலாம். இதில் ஒரு முழு திருப்தி கிடைக்காது.

சமீபத்தில் OTT-யில் வெளியான இரண்டு தமிழ்ப் படங்களும் தோல்வி அடைந்துள்ளன. நெட்ப்ளிக்ஸில் வெளியான படங்களும் படுதோல்வி. தமிழில் மட்டுமல்ல.. இந்தியில் வெளியான படங்களும் படுதோல்வி அடைந்து இருக்கின்றன. 

திரையரங்கங்கள்தான் சினிமாவிற்கான ஒரே தளம் என்பது எல்லாருக்கும் தெரியும். மக்கள் OTT-யை ஆதரிக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.” என்றார்.

“திரையரங்கம் கிடைக்காத சிறு படங்களுக்கு OTT ஒரு வாய்ப்பாக இருக்கிறது  என்று ஒரு பேச்சு இருக்கிறதே…?” என்று கேட்டபோது,

“சிறு படங்களுக்குத் திரையரங்கங்கள் கிடைப்பதில்லை என்று சொல்வது தவறான கருத்து.  பல நாட்களாக இந்தப் பொய்யைச் சொல்லி வருகிறார்கள். இது மிகவும் தவறான கருத்து.

தமிழ்நாட்டில்  1070 திரையரங்குகள்தான் உள்ளன. சென்ற ஆண்டு வெளியான 240  படங்களில் 200 படங்கள் சிறு படங்கள்தான். நேரடித் தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்குப் படங்கள், நேரடி ஆங்கிலப் படங்கள், ஆங்கில டப்பிங் படங்கள், மலையாள, இந்திப் படங்கள் என்று பல வகைப் படங்களும் வெளியாகி உள்ளன.

இப்படியிருக்கும்போது திரையரங்கம் கிடைக்கவில்லை என்பது பொருத்தமில்லாத வாதம்தானே…?  இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக திரையரங்குகளை அதிகரிக்க வேண்டும். பெரிய திரையரங்குகளை இரண்டாகவோ.. மூன்றாகவோ மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அரசிடம் வேண்டுகோள் விடுத்து சில ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம்…” என்றார்.

“OTT-யில் தங்களது தயாரிப்பு படங்களை வெளியிட்ட சிவகுமார் குடும்பத்தினரின் அடுத்தப் படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்று உங்களது சங்கத்தினர் முடிவெடுத்திருப்பதாக பேசப்படுகிறது. அது பற்றி இப்போதைய நிலைமை என்ன..?” என்ற கேள்விக்குப் பதிலளித்த ரோகிணி பன்னீர்செல்வம்,

“OTT-யில் அவர்கள் படம் வெளியிட முடிவெடுத்தபோது, ‘அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து திரையரங்குகள் கொடுக்க மாட்டோம்’ என்று நாங்கள் சொல்லவில்லை. ‘எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் இப்படிச் செய்யும்போது அவர்களது அடுத்தடுத்த படங்களையும் அதிலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும்’ என்றுதான் சொன்னோம். இப்போதும் இதுதான் எங்களுடைய நிலைமை..” என்றார்.

Our Score