பல்வேறு படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட் மாஸ்டர். அவர் ஒரு நடிகராகச் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் முற்றிலும் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் புதிய படம் ‘டிங் டாங்’.
We All Production, R.R.Pictures ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.
இந்தப் படத்தில் நான்கு கதாநாயகர்களும், நான்கு கதாநாயகிகளும் நடிக்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய மொழிகளில் பிரபலமான முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் நடன இயக்குநர் ராபர்ட் முக்கியமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார். படத் தொகுப்பை ராம்நாத் கவனிக்கிறார். நடன இயக்கம் – வினோத், சண்டை இயக்குநர் – வீரா, தயாரிப்பு ராபர்ட் ராக். இப்படத்தை நடன இயக்குநரும், ராபர்ட்டின் சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார்.
சஸ்பென்ஸ் திரில்லர் ரகமாக உருவாகும் இந்தப் படம், பல்வேறு வணிக அம்சங்களுடன் நகைச்சுவையும் கலந்து உருவாகிறது.
இந்த ‘டிங் டாங்’ படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக்கை நடன இயக்குநர் பிரபுதேவா வெளியிட்டார்.

இந்தப் படம் பற்றி படத்தின் இயக்குநர் ஜே.எம். பேசும்போது, “எனது இயக்கத்தில் ஏற்கெனவே ‘ஒண்டிக்கு ஒண்டி ‘ என்ற படம் வெளியாகி உள்ளது. இரண்டாவது படமாக இந்த ‘டிங் டாங் ‘உருவாகிறது.
‘டிங் டாங்’ என்றாலே கடிகாரம் என்பது அனைவருக்கும் நினைவில் வரும். அதுபோல்தான் இப்படத்தின் கதையும் காலத்தினை மையமாக வைத்து உருவாகிறது.
இந்தப் படம் ஒரு வித்தியாசமான திரில்லர் படமாக இருக்கும். படத்தில் என் சகோதரர் ராபர்ட் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எங்கள் மரியாதைக்குரிய பிரபு தேவா மாஸ்டர் வெளியிட்டது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. தென் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் உயர்ந்த இடத்தில் இன்று அவர் இருக்கிறார். நானும், ராபர்ட்டும் பல படங்களில் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றி இருக்கின்றோம். எங்களுக்கு எல்லா வகையிலும் குருவாக அவர் இருக்கிறார். அப்படிப்பட்டவர் இன்று எங்கள் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருப்பது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.
இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். இன்று பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது…” என்றார் இயக்குநர்.









