‘ஆர்.கே.நகர்’ திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது..!

‘ஆர்.கே.நகர்’ திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது..!

ஏற்கெனவே ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை ‘அமேஸான் பிரைம் வீடியோ’ நிறுவனத்திற்கு ஒளிபரப்ப கொடுத்த சர்ச்சையே ஓய்வதற்குள்ளாக அடுத்ததாக ‘ஆர்.கே.நகர்’ என்னும் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமலேயே நேரடியாக ‘நெட்பிளிக்ஸ்’ என்னும் மின் திரையில் ஒளிபரப்பாகிவிட்டது.

இந்த ‘ஆர்.கே.நகர்’ திரைப்படத்தை பிளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.ராஜலட்சுமி உடன் இணைந்து ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சனா அல்தாஃப், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் டி.சிவா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். 

கங்கை அமரன், பொன்ராஜ் மற்றும் பார்த்தி பாஸ்கர் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு பிரேம்ஜி அமரன் இசை அமைத்திருக்கிறார். கல்யாண் நடனம் அமைத்திருக்கிறார்.

“இத்திரைப்படம் அரசியல் நையாண்டியை முன் வைத்து தயாராகியுள்ளது. நாயகன் வைபவ் எமோஷன் மற்றும்  நகைச்சுவை கலந்த தனது இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறாராம். அவரது இயல்பான நடிப்பு அவர் ஏற்றுள்ள கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக அமைந்துள்ளதாம். மறுபுறம், நடிகர் சம்பத்தின் கதாபாத்திரமும், நடிப்பும் படத்தின் கூடுதல் சிறப்பம்சம்” என்றார் தயாரிப்பாளர்.

படம் சென்சாரில் 'U/A' சான்றிதழை பெற்று ரிலீஸூக்காக வெகு நாட்களாகக் காத்திருந்தது. பல முறை வெளியீட்டு தேதி அறிவித்த பின்பும் பல்வேறு காரணங்களால் வெளிவராமல் போயிருக்கிறது.

இந்தச் சூழலில் இனிமேலும் இது போன்ற சின்னப் படங்களுக்கு திரையரங்குகளில் பெரிதாக எதிர்பார்ப்பும், ஆதரவும் கிடைக்காது என்று நினைத்து படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை நெட்பிளிக்ஸில் வெளியிட கொடுத்துவிட்டார்கள்.

ஏற்கெனவே கடந்த டிசம்பரம் மாதமே நெட்பிளிக்ஸில் படம் வெளியாகிறது என்ற அறிவிக்கப்பட்டது. ஆனால், உடனேயே இந்தச் செய்தி பத்திரிகைகளில் பரவியவுடன் ஏதோ ஒரு காரணத்தால் அப்போது உடனடியாக அது நீக்கப்பட்டது.

ஆனால், இப்போது நிஜமாகவே படம் நெட்பிளிக்ஸ் மின் திரையில் வெளியாகிவிட்டது. ஏதோ குறைந்தபட்ச தொகையாவது உடனடியாக கிடைக்கிறதே என்றெண்ணத்தில் இந்தத் தயாரிப்பாளர்கள் செய்துவிட்டார்கள்போலும்.

படத்தைத் தயாரித்து வெளியிட முடியாமல் கையில் வைத்துக் கொண்டு அல்லாடும் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இதனைப் பின்பற்றி மின் திரைகளில் திரையிட்டு.. போட்ட பணம் கிடைத்தாலே போதும் என்கிற மனதோடு செயல்பட்டால் அவர்களுக்கும் நல்லது.. திரைப்படத் துறைக்கும் நல்லது..!