full screen background image

ரிச்சர்டு கெர் முத்தம் கொடுத்த விவகாரம்-ஷில்பா ஷெட்டி விடுதலை..!

ரிச்சர்டு கெர் முத்தம் கொடுத்த விவகாரம்-ஷில்பா ஷெட்டி விடுதலை..!

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2007-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் நகரில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அப்போதைய ஐ.நா. சபையின் எய்ட்ஸ் நோய்க்கான சிறப்பு தூதுவராக இருந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது திடீரென்று நடிகர் ரிச்சர்டு கெர், நடிகை ஷில்பா ஷெட்டியை கட்டியணைத்து முத்தமிட்டார். இந்த நிகழ்வு அப்போது நாடு முழுவதும் பலத்த சர்ச்சையைக் கிளப்பியது என்றாலும் நடிகர், நடிகை இருவருமே இதை மிகவும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பொது மேடையில் இருவரும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் ஒரு சர்ச்சை கிளம்பியது. ரிச்சர்டு கெர் முத்தமிட்டாலும் ஷில்பா ஷெட்டி அதைத் தடுக்காமல் இருந்தது தவறு என்று சொல்லி பலரும் அவர் மீது குற்றம் சுமத்தினார்கள்.

இது குறித்து ரிச்சர்டு கெர் மீதும், ஷில்பா ஷெட்டி மீதும் ராஜஸ்தான் ஆல்வார் நகர் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. பின்பு 2017-ம் ஆண்டு இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில், “உண்மையில் ஷில்பா ஷெட்டி குற்றவாளி அல்ல. பாதிக்கப்பட்ட நபர். முதல் குற்றவாளியான ரிச்சர்டு கெர்ரினால் வலுக்கட்டாயமாக அவர் முத்தமிடப்பட்டுள்ளார். எனவே அவர் மீதான வழக்கினை ரத்து செய்வதாக” நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும்,” எந்தவிதமான கற்பனையின் மூலமும் ஒருவரை சதிகாரராகவோ அல்லது குற்றவாளியாகவோ ஆக்கக் கூடாது..” என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Our Score