full screen background image

“இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தருக்கு சிலை அமைக்க வேண்டும்”-தமிழக அரசுக்கு கோரிக்கை

“இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தருக்கு சிலை அமைக்க வேண்டும்”-தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த இயக்குநரும், ‘இயக்குநர் சிகரம்’ என்று போற்றப்படுபவருமான கே.பாலசந்தருக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், அவரது ரசிகர்களும் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கே.பாலசந்தரின் மகளும், கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “தாதா சாகேப் பால்கே’, ‘பத்மஸ்ரீ’, ‘டாக்டர்’, ‘இயக்குநர் சிகரம்’ அமரர் கே.பாலசந்தரின் இறந்த நாளான டிசம்பர் 23-ம் தேதியை தமிழக அரசு நினைவு நாளாக அறிவிக்க வேண்டும்.

அமரர் கே.பாலசந்தர் வாழ்ந்து வந்த சாலையில் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சாலையின் பெயரை மாற்றி ‘கே.பாலசந்தர்’ சாலை என்று பெயர் சூட்ட வேண்டும்.

அமரர் கே.பாலசந்தரின் சிலையை நாங்களே தயார் செய்வதால் மைலாப்பூர் தொகுதியில் அமைந்துள்ள நாகேஸ்வரராவ் பூங்கா அல்லது ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அருகில் இருக்கும் பூங்காவில் அந்த சிலையை நிறுவ அனுமதியளிக்க வேண்டும்..” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே கோரிக்கைகளை கே.பாலசந்தரின் ரசிகர்கள் சங்கத்தினரும் தமிழக அரசிடம் முன் வைத்துள்ளனர்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனையும் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகள் விரைவில் நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்த உள்ளதாக அந்தச் சங்கத்தின் செயலாளரான பாபு தெரிவித்துள்ளார்.

இதற்காக தமிழ்த் திரையுலகத்தில் இருக்கும் முக்கியப் புள்ளிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம்.

Our Score