full screen background image

‘ரெமோ’ படத்தின் திருட்டு விசிடி வெளியாகாமல் தடுக்க புதிய திட்டம்..! 

‘ரெமோ’ படத்தின் திருட்டு விசிடி வெளியாகாமல் தடுக்க புதிய திட்டம்..! 

திரைப்பட தயாரிப்பு துறையில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம், ஒரு படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஆர்.டி.ராஜா.

இவர் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ரெமோ’ திரைப்படம், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத் என தமிழ் திரையுலகின் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் வலுவான கதையம்சத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘ரெமோ’ திரைப்படமானது  அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ரசிகர்களின் உள்ளத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறது.

‘ரெமோ’, வியாபார ரீதியாக மிக பெரிய வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. தற்போது ‘ரெமோ’ படத்திற்காக நாள்தோறும்  வித்தியாசமான யோசனைகளை செயல்படுத்திவரும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, படத்தின் திருட்டு விசிடி வெளியாகாமல் எப்படி தடுப்பது என்று யோசித்து இதற்காக புதியதொரு திட்டத்தை செயல்படுத்தவுள்ளார். 

வரும் தசரா விடுமுறை நாட்களில் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தரும் வண்ணமாக அக்டோபர் 7-ம் தேதியன்று வெளியாக இருக்கிறது ‘ரெமோ’.

பொதுவாக ஒரு திரைப்படம் அதன் வெளியீட்டு தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே வெளிநாடுகளில் வெளியிடப்படும். ஆனால் தற்போது ‘ரெமோ’ படத்தின் பாதுகாப்பு கருதி, அதை சற்றே மாற்றி இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

ஒரு நாள் முன்னதாக நாம் வெளிநாடுகளில் திரைப்படத்தை வெளியிடுவதால், வெகு சுலபமாக அந்த படத்தின் திருட்டு வி.சி.டி. அசுர வேகத்தில் தயாராகி இந்தியாவிற்குள்ளேயே வந்துவிடுகிறது.

ஆனால் ஒரே நாளில், ஒரே சமயத்தில் இந்தியா உட்பட மற்ற வெளிநாடுகளிலும் திரைப்படத்தை வெளியிட்டால், அப்படி நடக்க வாய்ப்புகள் குறைவு. எனவே, இந்த ‘ரெமோ’ திரைப்படம் இந்தியாவில் வெளியாகும் அதே நாளில்தான் வெளிநாடுகளிலும் வெளியாகவுள்ளதாம். இதனால் நேர கணக்குப்படி இந்தியாவில் வெளியான மறுநாள்தான், பெரும்பாலான நாடுகளில் ‘ரெமோ’ திரைப்படம் வெளியாகுமாம்.

இதன் விளைவாக வெளிநாடுகளில் உருவாக்கப்படும் திருட்டு விசிடிக்கள் இந்தியாவிற்குள் வந்தடைய எப்படியும் 4 அல்லது 5 நாட்கள் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருட்டு வி.சி.டியை ஒழிக்க தமிழ் திரையுலக பிரபலங்கள் சொன்ன பல சிறப்பான யோசனைகளில்  இதுவும் ஒன்றாம்.

பரீட்சார்த்தமான இந்த யோசனையை ‘ரெமோ’ படத்தில் பயன்படுத்திப் பார்த்து அதன் ரிசல்ட் எப்படியிருக்கிறது என்பதை பார்த்த பின்பே, மற்றைய தயாரிப்பாளர்களும் இதனை பின்பற்றுவார்களா.. இல்லையா என்பது தெரிய வரும்..!

Our Score