இந்தப் படத்தை எல்லோ பியர் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் இசையமைத்து படத்தை தயாரித்துள்ளார்.
படத்தில் சுனைனா கதையின் நாயகியாக ‘ரெஜினா’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஆனந்த் நாக், ரித்து மந்த்ரா, விவேக் பிரசன்னா, நிவாஸ் ஆதித்தன், கஜராஜ், பவா செல்லத்துரை, பாக்ஸர் தீனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
கிராமி விருது வென்ற, டபுள் பேஸ்-இல் இசையமைக்கும் வல்லமை படைத்தவர்களில் ஒருவரான கிறிஸ்டி வாசித்து இருக்கிறார். இவருடன் ஜோண்ட் என்பவரும் வாசித்திருக்கிறார். இவர் ஜாஸ் பாணியில் வல்லமை வாய்ந்தவர்.
பாடல்களுக்கான வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R எழுதியுள்ளனர். பவி K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் படத் தொகுப்பு செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் செய்கிறார். பத்திரிகை தொடர்பு – ஜான்சன்.
இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார், மலையாள இயக்குநரான டோமின் டி சில்வா. இவர், மலையாளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ‘பைப்பின் சுவத்திலே பிராணயம்’ மற்றும் ‘ஸ்டார்’ படங்களை இயக்குகியவர்.
இப்படம் பெண்களை மையமாகக் கொண்ட ‘ஸ்டைலிஷ் திரில்லராக’ வந்திருக்கிறது. ஒரு சாதாரண இல்லத்தரசியாக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் செய்யத் துணிந்தால் என்னவாகும் என்பதுதான் இந்தப் படம்.
ஒரு திரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இந்தப் படம், தனது கணவரை கொன்றவர்களை பழிக்குப் பழி வாங்கும் ஒரு சாதாரணமான ஒரு இளம் பெண்ணின் கதையில் அமைந்துள்ளது.
‘ரெஜினா’ என்ற சுனைனாவின் கணவர் ஒரு வங்கியில் இளநிலை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். ஒரு நாள் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அந்த வங்கிக்குள் நுழைந்து பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். இதைத் தடுக்க சென்ற ரெஜினாவின் கணவரை கொலை செய்துவிட்டுத் தப்பியோடுகிறார்கள்.
தனது கணவரின் இறப்புக்கு நீதி கேட்டு நெடும் போராட்டம் நடத்துகிறார் ரெஜினா. லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் பல முறை ஏறி, இறங்கியும் யார் கொலையாளிகள் என்பது ரெஜினாவுக்குத் தெரியாமலேயே இருக்கிறது.
பொறுத்தது போதும் பொங்கியெழு பாணியில் ஒரு நாள் வீறுகொண்டெழும் ரெஜினா அமைதியான, அடக்கமான, சாந்தமான முகத்தோடு அந்த ஊரில் இருந்து கிளம்பி கோவா வருகிறார். அங்கே கடற்கரையோரம் ஹோட்டல் நடத்தி வரும் ரித்து மந்த்ராவின் ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறார்.
ரித்துவின் கணவன் ஒரு அடிதடி கேஸில் சிக்கி ஜெயிலில் இருக்கிறான். தனிமையில் இருக்கும் ரித்துவிடம் இனிமையாகப் பேசி நெருக்கமாகும் ரெஜினா மந்திராவுக்குள் இருக்கும் பெண்ணியத்தைத் தூண்டிவிடுகிறாள்.
இதனால் ஜெயிலில் இருந்து வீடு திரும்பும் மந்த்ராவின் கணவனுக்கும், அவளுக்கும் இடையில் சண்டை மூள்கிறது. தம்பதிகளுக்குள் இந்தப் பிரிவு வந்த சில நாட்களில் மந்த்ராவையும், அவளது குழந்தையையும் கூட்டிக் கொண்டு கேரள, தமிழ்நாடு எல்லையில் மலைப் பகுதியில் இருக்கும் ஒரு பிரதேசத்திற்கு அழைத்து வருகிறாள் ரெஜினா.
இதன் பின்பு மீண்டும் கோவாவுக்கு வந்து மந்த்ராவின் கணவனை சந்திக்கும் ரெஜினா அவனது மனைவியான மந்த்ராவை தான் கடத்தி வைத்திருப்பதாகவும், தன் கணவனைக் கொன்றவர்களை அடையாளம் காட்டினால் மட்டுமே அவளை விடுவிக்க முடியும் என்று பேரம் பேசுகிறாள். செய்வதறியாமல் திகைத்து நிற்கிறான் மந்த்ராவின் கணவன்.
அடுத்து நடப்பது என்ன..? ரெஜினாவின் கணவனின் கொலைக்கும், மந்திராவின் கணவனுக்கும் என்ன தொடர்பு..? இறுதியில் கொலையாளிகளை ரெஜினா கண்டறிந்தாளா..? மந்த்ரா என்னவானாள்..? என்பதெல்லாம் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
சுனைனாவுக்கு கம் பேக் படமாக இது அமைந்துள்ளது. ரெஜினா என்ற கதாப்பாத்திரத்தை கடைசிவரையிலும் வாழ்ந்திருக்கிறார். தாங்கியிருக்கிறார். வசன உச்சரிப்பு, ஆங்கில வசனங்களை உச்சரித்த ஸ்டைல், மந்த்ராவுடன் காட்டும் நெருக்கம்.. கண் கவர் ஆடைகளில் பாடும்விதம், நடை, உடை, பாவனையில் காட்டும் ஸ்டைல்.. போலீஸ் ஸ்டேஷனில் காட்டும் கெத்து, கிளைமாக்ஸில் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் “ரெஸ்பெக்ட் வேணும்” என்று கேட்டுவிட்டு தனது கடைசிப் பழி தீர்ப்பை செய்வது என்று அனைத்திலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் சுனைனா. பாராட்டுக்கள்.
ரித்து மந்த்ராவின் மந்தாரமான உடல் அழகும், கவர்ச்சியான உடல் வாகும், ஈர்ப்பான முகமும் அவர் வரும் காட்சிகளில் கண்களை அகல மறுக்கிறது. இவருடைய கணவராக நடித்தவர் பதற்றத்தையும், ஏமாற்றத்தையும், பரிதவிப்பையும் மிகச் சரியாகக் காண்பித்திருக்கிறார்.
தீனாவின் அசத்தலான வில்லன் நடிப்பை படத்தின் மிகப் பெரிய பலமாக சொல்லலாம். தனது உயிரை தானே பணயம் வைத்து அவர் பேசுகின்ற காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார் தீனா. மேலும் முன்னாள் மாவோயிஸ்ட் போராளியாக பவா செல்லத்துரை சில காட்சிகளில் வந்து போயிருக்கிறார். ரெஜினாவுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் காட்சியில் முகம் காட்டாமலேயே தன்னைக் காட்டியிருக்கிறார் பவா.
தொழில் நுட்பத்தில் கேமிராவும், இசையும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுள்ளன. கடைசிவரையிலும் ஒளிப்பதிவு பல வித்தைகளைக் காட்டியிருக்கிறது. பின்னணி இசை காதைக் கிழிக்காமல், ஆனால் பதற்ற உணர்வைக் கொட்டியிருக்கிறது. பாடல்களில் தீனா கோஷ்டி ஆடிப் பாடும் பாடல் மனதில் நிற்கிறது.
கலை இயக்குநர் தனது கலைத் திறமையை பல ஊர்களில், பல இடங்களில் நடைபெற்றிருக்கும் படப்பிடிப்புத் தளங்களில் காட்டியிருக்கிறார். தீனாவின் இருப்பிடமாகக் காட்டியிருப்பது வித்தியாசமானதாக இருந்தது.
இயக்கத்தில் இயக்குநர் எந்தக் குறையும் வைக்கவில்லை என்றாலும் குறிப்பால் உணர்த்துவதைப் போல ஹாலிவுட் ஸ்டைலில் சில காட்சிகளை வைத்திருப்பதும், அளவுக்கு அதிகமான ஆங்கில வார்த்தைகள் பிரயோகித்திருப்பதும் படத்தை பி அண்ட் சி நேயர்களுக்கு புரியாமல் போய்விடும் அபாயம் உண்டு.
சில, பல லாஜிக் எல்லை மீறல்கள் இருந்தாலும் அதையெல்லாம் கேட்க மறந்த நிலைமைக்கு நம்மைத் தள்ளிக் கொண்டு போய் படத்தை முழுமையாகப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். இந்த இயக்கத் திறமையை நாம் பெரிதும் பாராட்டுகிறோம்.
ரெஜினா – சஸ்பென்ஸ், திரில்லரில் இதுவும் ஒரு வகைதான்..!
RATING : 3.5 / 5









