full screen background image

அழகிய கண்ணே – சினிமா விமர்சனம்

அழகிய கண்ணே – சினிமா விமர்சனம்

மாஸ்டர் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் தயாரிப்பு நிறுவனமான ‘எஸ்தல் எண்டர்டெய்னர்’ இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தின் தலைவருமான திண்டுக்கல் I.லியோனியின் மகன் லியோ சிவக்குமார், இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார்.

மேலும் இயக்குநர்கள் பிரபு சாலமன், ராஜ் கபூர், ஆண்ட்ரூஸ், அமுதவாணன், சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, N.R.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். காடன் படத்தின் ஒளிப்பதிவாளரான A.R.அசோக்குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவரான சங்கத் தமிழன் செய்துள்ளார். நடன இயக்குநராக ராதிகா மாஸ்டரும், படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை இளையராஜா செல்வமும் கவனித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய R.விஜயகுமார் இயக்கியிருக்கிறார்.

இதுவும் ஒரு வகையான ஆணவக் கொலை பற்றிய படம்தான். இதுவரையிலும் ஆணவக் கொலைகளை செய்வது, செய்தது, செய்து கொண்டிருப்பதெல்லாம் தேவர்கள், கவுண்டர்கள் என்றுதான் படங்களில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக பிராமணர்கள் ஆணவக் கொலையை செய்வதாகக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் நாயகனான சிவா சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய எதிர் வீட்டில் இருக்கும் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் நாயகி சஞ்சிதா. இருவரும் காதலிக்கிறார்கள். சஞ்சிதாவின் வீட்டில் அவருடைய சித்தியின் தம்பிக்கு சஞ்சிதாவை திருமணம் செய்து வைக்க எண்ணுகிறார்கள்.

இந்த நேரத்தில் இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராக சேர்வதற்காக சென்னை செல்கிறார் நாயகன். அங்கே படத்தில் பணியாற்றி வருகிறார் சிவா. இந்த நேரத்தில் சஞ்சிதாவும் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை கிடைத்து வந்துவிடுகிறார்.

சென்னையில் காதலர்கள் இருவரும் தினமும் சந்தித்துப் பேசி தங்களது காதலை வளர்த்துக் கொள்கிறார்கள். ஊரில் இருந்து சஞ்சிதாவுக்கு திருமண நெருக்கடி ஏற்பட்டதால் காதலர்கள் இருவரும் ஊருக்கே வந்து தங்களது காதலை தத்தமது குடும்பத்தாரிடம் வெளிப்படுத்துகிறார்கள்.

நாயகனின் குடும்பத்தார் இதை ஏற்றுக் கொண்டாலும் சஞ்சிதாவின் சித்தி சஞ்சிதாவை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார். இதனால் சென்னைக்கு வந்த காதலர்கள் திருமணம் செய்து கொண்டு சென்னையில் குடியேறுகிறார்கள்.

திருமணம் முடிந்து 1 ஆண்டுக்குப் பிறகு குழந்தையும் பிறந்த பிறகும் சஞ்சிதாவின் சித்தியின் தம்பி சஞ்சிதாவின் மீது கொலை வெறியாக இருக்கிறான். உடன் இருப்பவர்கள் தூபம் போட்டுவிட இவர்களை ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்து திட்டம் தீட்டுகிறான்.

அத்திட்டம்தான் என்ன.. இந்த சதித் திட்டத்தில் இருந்து நாயகனும், நாயகியும் தப்பித்தார்களா.. இல்லையா.. என்பதுதான் இந்த அழகிய கண்ணே படத்தின் திரைக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் புதுமுகம் லியோ சிவக்குமார் அறிமுக நடிகராகவே தெரியவில்லை. சாதாரணமான ஒரு யதார்த்த வகையிலான ஹீரோ எப்படியிருப்பாரோ அதன்படியேதான் கடைசிவரையிலும் வலம் வந்திருக்கிறார்.

எந்தெந்த கோணங்களிலெல்லாம் அழகாகத் தெரிவாரோ அந்தக் கோணத்திலேயே இவரை நடிக்க வைத்து அழகுபடுத்தியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளரும், இயக்குநரும். டைமிங் சென்ஸாக பேசுவதிலும், இயல்பாக பேசுவதிலும் சிவா முதல் படத்திலேயே தேறியிருக்கிறார். பாராட்டுக்கள்..!

நாயகியான சஞ்சிதா ஷெட்டிக்கு இதுவொரு முக்கியமான படமாகும். இதுவரையிலும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மிக அதிகமான குளோஸப் காட்சிகளை வைத்து, அவருடைய அழகு முகத்தை நிறைய நேரம் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

குழந்தையைக் காணாமல் தேடும் அந்த 2 நிமிடக் காட்சியில் நம்மையும் பதைபதைப்புக்குள்ளாக்கிவிட்டார் சஞ்சிதா. அதேபோல் இறுதிக் காட்சியில் படத்தின் ஜீவனையே தனது அழுகை நடிப்பில் கொணர்ந்து நம்மை கண் கலங்க வைத்துவிட்டார். பாராட்டுக்கள்.

ஒரு டீசண்ட்டான, அறிவார்ந்த இயக்குநராக பிரபு சாலமன் தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். அவசரத்தனத்தால் சண்டையிட்டு வந்திருக்கும் தனது சீடர்களுக்கு அவர் சொல்லும் அறிவுரை இன்றைய இளம் துணை இயக்குநர்கள் அனைவருக்குமானதுதான்.

அமுதவாணன், ஆண்ட்ரூஸ் இருவரும் அந்தந்தக் காட்சிகளில் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார்கள். ஐயராத்து மைனராக நடித்திருக்கும் அந்தக் கனவானும் தனது கனமான உடம்பை வைத்து மிரட்டியிருக்கிறார்.

சிவாவின் தங்கையாக நடித்தவர் தனது தேர்ந்த நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும் தனித்துத் தெரிகிறார். நாயகனின் அம்மாவான சுஜாதா, நாயகியின் அப்பாவாக நடித்தவர், சித்தி என்று அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

படம் சின்ன பட்ஜெட் படம் என்றாலும் ஒளிப்பதிவாளர் எந்தக் குறையும் இல்லாமல் படத்தை ஒளிப்படுத்தியிருக்கிறார். ரகுநந்தனின் இசையமைப்பில் பாடல்கள் கேட்கும் ரகம். இறுதிக் காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசை வயிற்றைப் பிசைகிறது. ஹோட்டல் பாரில் நாயகன் போடும் சண்டையை மிக யதார்த்தமாக வடிவமைத்திருக்கும் சண்டை இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்..!

இயக்குநரின் சிறந்த இயக்கத் திறமைக்கு எடுத்துக்காட்டாய் நாயகனும், நாயகியும் அவரவர் வீட்டில் தங்களது காதலை எடுத்துச் சொல்லும் காட்சிகளை சொல்லலாம். இதேபோல் பல காட்சிகளை மிக யதார்த்தமாக காண்பித்திருக்கிறார் இயக்குநர்.

தனது முதல் படத்தையே  தனது குரு சீனி ராமசாமியின் சாயலிலேயே இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநரான ஆர்.விஜயகுமார். சிறப்பான கதை, திரைக்கதையில், குழப்பமில்லாத நேர்க்கோட்டில் சென்று முடிகிறது திரைப்படம்.

வழக்கமான பழி வாங்கல் கதைதான் என்றாலும் அதிலும் திரைக்கதை, கதை மாந்தர்கள். சொல்லிய விதம்.. இவற்றில் வித்தியாசத்தைக் காட்டி ஜெயித்திருக்கிறார் இயக்குநர் விஜயகுமார்.

அழகிய கண்ணே – படத்தின் தலைப்பு போலவேதான் படமும் இருக்கிறது..!

RATING : 3.5  / 5

 

Our Score