தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக் களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், ‘குட் நைட்’, ‘லவ்வர்’ மற்றும் இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிப் படமான ‘’டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.
நடிகர்கள்
அபிஷன் ஜீவிந்த் – சத்யசீலன் ( சத்யா )
அனஸ்வரா ராஜன் – மோனிஷா
தேனி முருகன் – சத்யாவின் அப்பா
“கலைமாமணி” சரவணன் – சாமிநாதன் சார்
ஹரிஷ் குமார் – தினேஷ்
காவ்யா அனில் – அனிஷா
சச்சின் நாச்சியப்பன் – பாலாஜி
சாச்சனா – சந்தியா
R.J. ஆனந்தி – சத்யாவின் அக்கா
டிம்பிள் கண்ணா – விநோதினி
சித்தார்த் – ஜாஃபர்
தொழில்நுட்ப குழு
எழுத்து , இயக்கம் – மதன்
தயாரிப்பு – சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான்
இசை – ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு (DOP) – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
எடிட்டிங் – சுரேஷ் குமார்
கலை இயக்கம் – ராஜ் கமல்
இணை தயாரிப்பாளர் – விஜய் எம்.பி
நிர்வாக தயாரிப்பாளர் – A. பாலமுருகன்
பாடல் வரிகள் – மோகன் ராஜன், உமா தேவி, மதன்
நடன அமைப்பு – சந்தோஷ்
சண்டை பயிற்சி – PC ஸ்டண்ட்ஸ் (கார்த்திக்)
உடை வடிவமைப்பு – பிரியா ரவி
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – சரத் J. சாமுவேல்
ஸ்டில்ஸ் – மணியன்
பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் – ஜோஸ் கிறிஸ்டோ
பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்த “வித் லவ் (With Love)” படத்தில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கிய இயக்குநரான அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்திருக்கிறார். ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி” ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
உண்மையான காதலை சொல்லும் காதல் திரைப்படங்கள் என்றும் தோல்வியை தொட்டதில்லை. அதுவும் தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களாக இருந்தாலும் அதில் உருவாகும் காதல் அல்லது ஏற்கனவே இருக்கின்ற காதல்…. இந்த இரண்டு விஷயங்களும் நிச்சயமாக இடம் பிடித்திருக்கும்.
மிக இளம் வயதில் பள்ளி பருவத்தில் மாணவன், அல்லது மாணவி… இவர்கள் மீதான பார்வை இனம் புரியாத ஒரு உணர்வை தோற்றுவிக்கும். இது உண்மையான காதல் அல்ல. வெறும் இன்பாச்சுவேஷன் என்பார்கள். அதாவது உடல் ரீதியான ஒரு ஈர்ப்பு மட்டுமே.. அந்த ஈர்ப்பு நிச்சயமாக காதல் அல்ல..
அதற்குப் பின் அவனுக்கோ அல்லது அவளுக்கோ எத்தனையோ காதலர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் வந்து வந்து போயிருந்தாலும் முதல் காதல் என்றுமே ஸ்பெஷல்தான். அதை இப்போதைய மூத்தவர்கள் வயதானவர்கள் சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் மனிதர்கள் என்றாலும் அவர்களால் மறக்க முடியாது.
அப்படி ஒரு காதலைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் பள்ளி பருவ காதலன், காதலியை தேடிச் செல்கின்ற ஒரு வித்தியாசமான காதல் களம்தான் இந்தப் படம்.
படத்தின் நாயகனான சத்யசீலன் என்ற அபிஷேக்குக்கு அவருடைய அக்கா பல இடங்களில் கல்யாணத்துக்காக பெண் பார்த்து வருகிறார். அன்றைக்கும் ஒரு பெண்ணை காபி ஷாப்பில் சந்திக்கும்படி அகத்கா வற்புறுத்துகிறார்.
பல பெண்களை பார்த்தும் தனக்குப் பிடிக்காமல் போனதால் மன வருத்தத்தில் இருக்கும் ஹீரோ இன்றைக்கு தன்னுடைய அக்காவின் வற்புறுத்தலுக்காக காபி ஷாப்புக்கு வருகிறார். அதேபோல் ஹீரோயின் மோனிஷாவும் தன்னுடைய குடும்பத்தினர் பார்த்துக் கொடுத்திருக்கும் மாப்பிள்ளையான அபிஷந்தை பார்க்க காபி ஷாப்புக்கு வருகிறார்.
இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்கு ஒரு உண்மை புலப்படுகிறது. அவர்கள் இருவருமே ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்று..! மோனிஷா பத்தாம் வகுப்பு படித்தபோது, அபிஷந்த் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்கிறார்.
அப்போது அவர்கள் இருவருமே காதலில் விழுந்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அதே சமயம் சந்தர்ப்பவசமாக தெரிந்தோ தெரியாமலோ இருவரின் காதலும் தோல்வியடைந்துள்ளது. இந்தத் தோல்விக்குக் காரணமே இவர்கள் இருவரால்தான் என்கின்ற உண்மையும் தெரிய வருகிறது.
பழைய காதலை மறக்க முடியாமல் இருக்கும் இருவரும், நம்முடைய பழைய காதலன், காதலியைத் தேடி செல்வோம். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நம் பார்த்துவிட்டு அதன் பின்பு நம்முடைய திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று மோனிஷா சொல்ல ஹீரோ சத்யாவும் அதை ஏற்றுக் கொள்கிறார்.
இப்போது இவர்கள் இருவரும் தங்கள் படித்த ஊருக்கும், அந்தப் பள்ளிக்கும் செல்கிறார்கள். தன்னுடைய காதலியை அபிஷந்த் தேட தன்னுடைய காதலனை மோனிஷாவும் தேடுகிறார்.
இந்தத் தேடுதல் வேட்டை கடைசியில் என்ன ஆனது? அவரவர் காதலன், காதலியை இருவரும் சந்தித்தார்களா… இல்லையா? இவர்களுடைய திருமணம் நடந்ததா… இல்லையா? என்பதுதான் இந்த சுவையான காதல் படத்தின் கதை.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்கின்ற ஒரு அருமையான திரைப்படத்தை கொடுத்த இயக்குநரான அபிஷன் ஜீவிந்த் இந்தப் படத்தில் ஹீரோ சத்யசீலனாக நடித்திருக்கிறார்.
இளம் வயதில் கொஞ்சம் அப்பாவியாகவும் இருக்கிறார். எதிர்காலம் பற்றிய கவலையுடன் இப்போது திருமணம் மட்டுமே அவருடைய மனக்கண்ணில் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் சந்தித்த ஹீரோயின் அனஸ்வரா ரொம்பவே முற்போக்காக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார் அபிஷந்த். அனஸ்வராவின் ஆலோசனைபடியே காதலியைத் தேடி அலையும்போது படம் பார்க்கும் ரசிகர்களே அந்த சத்யசீலனாக மாறுகிறார்கள். அந்த அளவுக்கு ஈர்ப்பு தன்மையோடு நடித்திருக்கிறார் அபிஷந்த்.
அவருடைய உடல்வாகுக்கும், தோற்றத்திற்கும் பிளஸ் டூ ஸ்டூடண்ட் என்கின்ற அந்தக் கதாபாத்திரதில் கச்சிதமாகப் பொருந்துகிறார். மிக அழகாகவும் நடித்திருக்கிறார் அபிஷந்த்.
ஹீரோயினை பார்த்த உடனேயே அந்த அழகில் கொஞ்சம் சிக்கி திணறி கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பிக்கும் அபிஷந்தின் துவக்கக் காட்சிகள் நம்மை பெரிதும் கவருகின்றன.
இப்போது ஹீரோவாக இருப்பதைவிடவும், பள்ளி பருவத்து ஹீரோவாக நம்மை வெகுவாக கவர்கிறார் அபிஷந்த். மிக இயல்பான நடிப்பை காண்பித்திருக்கும் இவரை ஒரு வருடமாக காத்திருந்து நடிக்க வைத்த அபிஷந்தின் சீடரான இயக்குநர் மதனை நாம் வெகுவாக பாராட்டலாம்.
பள்ளிப் பருவத்து சத்யா தன்னுடைய காதலி ஒரு முறை திரும்பி பார்க்கமாட்டாளா என்று ஏக்கத்துடன் பார்ப்பதும், அவ்வப்பொழுது அவர்கள் இருவரும் சந்திக்கின்ற காட்சிகள்… பேசுகின்ற நிகழ்வுகள், ஆசிரியரிடம் அடி வாங்கி விட்டு வந்து உட்கார்ந்தவுடன் “வலிக்குதா?” என்று அனஸ்வரா கேட்கும்போது அபிஷந்த் காட்டுகின்ற அந்த ஒரு துள்ளல்.. ஒரு சந்தோஷம்.. இதையெல்லாம் படம் பார்த்த ரசிகர்களும் அனுபவித்திருக்கிறார்கள் என்பதால் அந்த காட்சியில் அவ்வளவு இயற்கையாக இருந்தது.
கடைசியாக தன்னுடைய பள்ளிப் பருவ காதலியை சந்தித்து பேசும்போது. வார்த்தையே வராமல் திகைத்துப் போய் ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருக்கும் அபிஷந்தை பார்த்து ஆஹா என்று சொல்ல வைக்கும் அளவுக்கு அவரை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
இறுதியில் ஹீரோயினிடம் அறைமேல் அறை வாங்கிவிட்டு தன் மனதில் இருக்கின்ற காதலை சொல்ல முடியாமல் தவிக்கும்பொழுது “அட போய்யா” என்று கொஞ்சம் கோபம்தான் நமக்கு வருகிறது.
மலையாளத்து மான் குட்டியான அனஸ்வரா ராஜன் தன்னுடைய ஹீரோயின் கதாபாத்திரத்தை ரசித்து செய்திருக்கிறார். அதிலும் ஹீரோவை முதன்முறையாக ஹோட்டலில் சந்தித்து அவர் பேசுகின்ற ஒவ்வொரு பேச்சும் அழகு. எந்தக் கோணத்தில் பார்த்தால் அவர் அழகாக இருப்பாரோ அதே கோணத்திலேயே அவரை படமாக்கி நம் மனதை கொள்ளை கொண்டுவிட்டார் இயக்குநர்.
இருவரும் அவரவர் காதலும் காதலியை தேடுகின்ற வேட்டையில் ஒருவர் மாற்றி ஒருவர் அவ்வப்பொழுது காலை வாரி விடுவதும் தவறான ஒன்றை சொல்லி டென்ஷன்படுத்துவதுமாக இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் நடிப்பில் அபிஷந்தைவிடவும், அனஸ்வரா ஒரு படி மேலே சென்று இருக்கிறார்.
அனுஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காவியா அனில், கொஞ்ச நேரமே என்றாலும் நம் மனதை கொள்ளை கொள்கிறார். அவருடைய அறிமுகக் கட்சியில் இருந்து அவ்வப்பொழுது அவரை பார்க்கின்ற அந்த தருணத்திலெல்லாம் கேமராவுக்கேற்ற அழகியாகவே தெரிகிறார். அவருடைய நடிப்பும் மிக இயல்பாக இருந்தது.
ஒரு குழந்தை ஓடி விளையாடிக் கொண்டிருக்க… இன்னொரு குழந்தை வயிற்றில் இருக்கும் சூழலில் ஐ லவ் யூ என்று கடைசி வரையில் சொல்லாமலேயே மனதுக்குள் பூட்டி வைத்துக்கொண்ட ஹீரோவிடம் அந்த ஐ லவ் யூ என்ற வார்த்தையை வாங்குவதற்காக காவியா பேசுகின்ற அந்த டீசண்டான பேச்சு ரசிகர்களை ரொம்பவே கவர்கிறது. இதற்காகவே நாம் காவியாவிற்கு ஒரு “ஐ லவ் யூ” சொல்லி விடலாம்.
மேலும் பள்ளிப் பருவ காலத்தில் ஹீரோவின் நண்பர்களாக நடித்திருக்கும் சித்தார்த், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் மூவருமே ஒரு அழகான நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள், இப்படி ஒரு நண்பர்கள் நமக்கு கிடைப்பது நிச்சயம் பெரிய வரம்தான். அதேபோல் நாயகியின் பள்ளி தோழிகளாக நடித்திருக்கும் சாச்சனா மற்றும் டிம்பிள் கண்ணா இருவருமே நாயகிக்கு உதவுவதுபோல நடித்து திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்கள்.
ஒரு நேர்மையான பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் சரவணன் ஹீரோவை நன்கு ஞாபகம் வைத்திருந்து கடைசியில் ஹீரோவை சந்தித்து எதுவுமே நடக்கவில்லை என்று அந்த தாக்குதலை மறந்து விட்டு, மறைத்துவிட்டு… இதுவும் கடந்து போகும் என்று ஹீரோவை சமாதானப்படுத்தும் காட்சியில், அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் சூப்பர் என்றே சொல்லலாம்.
கடைசிவரையில் பிசினஸ் செய்தே தீருவேன் என்று நினைத்த ஹீரோவின் அப்பா அதை எதற்காக செய்தேன் என்பதை மருத்துவமனையில் சொல்லும்பொழுது நம் மனதும் இளகிவிட்டது. எத்தனையோ படங்களில் நடித்திருக்கும் தேனி முருகன், இந்தப் படத்தில் இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் திரை உலகில் எதிர்காலத்தில் நன்கு பேசப்பட கூடிய நடிகராக மாறிவிட்டார்.
ஹீரோவின் அக்காவும், மாமாவுமாக நடித்தவர்கள் ஹீரோவை புரிந்து கொள்ள முடியாமல் இவனை வைத்து என்னதான் செய்வது என்று அடிக்கடி புலம்புகின்ற காட்சிகளில் நம் வீட்டிலும் ஒரு அக்கா, மாமா இருந்திருந்தால், இப்படித்தான் பேசியிருப்பார்களோ என்ற ஒரு சந்தோஷம் நமக்கு ஏற்படுகிறது.
கதை, திரைக்கதை, வசனத்திலும், இயக்கத்திலும் இந்த படம் மிகச் சிறப்பாக வந்திருக்க, தொழில் நுட்ப வல்லுனர்களும் தங்களுடைய பணியை அவ்வளவு அழகாக கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் தான் யார் என்பதை பல திரைப்படங்களில் பதிவு செய்தவர். இந்தப் படத்திலும் மிக அழகான ஒரு ஒளிப்பதிவினை கடைசிவரையிலும் கொடுத்திருக்கிறார்.
பள்ளி பருவ காட்சிகளை படமாக்குகின்றபொழுது ஹீரோ, ஹீரோயின் இருவரையுமே அதிகமாக போக்கஸ் செய்து அவர்களின் சின்ன சின்ன நுணுக்கமான அசைவுகள், உடல் மொழி வசனங்களை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
சான் ரோல்டன் தன்னுடைய இசையில் பாடல்களை, பாடல் வரிகளை எளிமையான வார்த்தைகளினால் நிரப்பியிருந்தாலும் பாடல்கள் ஒரு முறை மட்டுமே கேட்கும்படியாக அமைந்தது என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால், பின்னணி இசையில் ஒரு லவ் மூடை படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் நமக்கு கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
பட தொகுப்பாளரோ பள்ளிப் பருவ காட்சிகளில் நிறைய சஸ்பென்ஸ்களை வைத்திருந்து… கடைசியாக ஒன்றன்பின் ஒன்றாக உடைக்கின்ற வகையில் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதையை கொஞ்சம் போரடிக்காமல் அந்தக் காட்சிகளை எல்லாம் மிக அழகாக தொகுத்து அளித்திருக்கிறார்.
ஏற்கனவே தமிழில் காதலுக்காக வந்து கொண்டாடப்பட்ட ‘ஆட்டோகிராப்’, ‘96’ என்ற படங்களின் திரைக்கதை அனுபவங்களும் இத்திரைப்படத்தில் வந்திருக்கிறது.
இருந்தாலும் பழைய காதலியை காதலனை தேடிச் செல்லும் ஒரு புதிய உத்தியோடு இப்போதைய இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் திரைக்கதை அமைத்து வசனங்களை எழுதி இப்போதைய யூத்துக்களை கவர்வதுபோல படத்தை உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் மதன். அவருக்கு நமது பாராட்டுக்கள்.
பள்ளிப் பருவ காதல் ஒரு எதிர் பாலின ஈர்ப்பு மட்டுமே என்று நாம் சொல்லிக் கொண்டே இருந்தாலும் அந்தக் காதல் நம்மால் மறக்க முடியாதது அல்லவா… அதை கடந்து போகும் தைரியமும் அறிவும் உள்ளவர்கள் மிக எளிதாக கடந்து செல்கிறார்கள். ஆனால் தாங்க முடியாதவர்கள்தான் தங்களை அழித்துக் கொள்கிறார்கள்.
இப்போதைய இளைஞர்களிடத்தில் அதிகமாக இருக்கும் அந்த தாக்கத்தை இந்தப் படத்தின் கதை, திரைக்கதையில் அழகாக சொல்லி அடுத்த வாழ்க்கையை தேடி ஓடுங்கள் கிடைத்தவுடன் அமைதியாக அதிலேயே வாழ்க்கையை அனுபவியுங்கள் என்று அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
ஆனாலும் இப்போதைய காலகட்ட இளைஞர்கள் இப்படித்தான் என்று காட்டுவதுபோல ஹீரோவும், ஹீரோயினும் இணைந்து மது அருந்துகின்ற காட்சியும், படுக்கையில் இருவரும் வீழ்ந்திருக்கும் காட்சியும் இந்தத் திரைக்கதைக்குப் பொருத்தமில்லாத காட்சிகளாக அமைந்துவிட்டது. இந்த இரண்டையும் இயக்குநர் வைக்காமல் இருந்திருக்கலாம். இந்த இரண்டு காட்சிகளுக்காக மட்டுமே இயக்குநரை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
காதல் பற்றிய திரைப்படங்கள் எத்தனையோ வந்து கொண்டே இருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள்தான் நம் மனதை தொடுகின்றன. அந்த வகையில் ‘96’ என்ற திரைப்படத்திற்கு பிறகு நம்மை மீண்டும் பள்ளிப் பருவ காலத்திற்கு இழுத்துச் செல்லும் திரைப்படம்தான் இந்த ‘வித் லவ்’ திரைப்படம்.
காதலர்கள் வரலாம்.. மாறலாம்… ஆனால் காதல் மட்டுமே என்றும் மாறாதது என்பது இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் புரியும்.
காதல் தோல்விகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் நிச்சயம் நம்முடைய தமிழ் சினிமா ரசிகர்களையும், இளைஞர்களையும், இளைஞர்களையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
RATING : 4 / 5









