full screen background image

“இது ஆக்சன், திரில்லர் கலந்த காதல் கதை” – ‘ரசவாதி’ படம் பற்றி இயக்குநர் சாந்தகுமார்..!

“இது ஆக்சன், திரில்லர் கலந்த காதல் கதை” – ‘ரசவாதி’ படம் பற்றி இயக்குநர் சாந்தகுமார்..!

திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரை மொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார்.

அவர் இயக்கத்தில் வெளியான ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது.

அவர் இயக்குநராக அறிமுகமான ‘மௌன குரு’ படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. மற்றும் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது.

அவரது இரண்டாவது வெளியீடான ‘மகாமுனி’ 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது. இந்தப் படத்தில் இருந்து பல வசனங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலானது.  

தற்போது இவரது அடுத்தப் படைப்பாக உருவாகியிருக்கும் ‘ரசவாதி – தி அல்கெமிஸ்ட்’, ஒரு காதல் ஆக்‌ஷன்-க்ரைம் த்ரில்லர் கலந்த படமாகும். 

சாந்தகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான டி.என்.ஏ. மெக்கானிக் கம்பெனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல பரிச்சயமான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு – சரவணன், இளவரசு, சிவகுமார், படத் தொகுப்பு –  வி.ஜே.சாபு ஜோசப், நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், கலை இயக்கம் – சிவராஜ், ஒலிப்பதிவு – சேது, நிர்வாகத் தயாரிப்பாளர் – எஸ்.பிரேம், பாடல்கள் – யுகபாரதி, ஒலிக் கலவை – தபஸ் நாயக், உரையாடல் பதிவாளர் எம்.எஸ்.ஜெயசுதா, சண்டை இயக்கம் – ஆக்சன் பிரகாஷ், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, புகைப்படங்கள் – ஆனந்த், பெருமாள் செல்வம், உடைகள் – மினு சித்ராங்கனி.ஜே. 

இத்திரைப்படம் வரும் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த ரசவாதம் படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனத்தின் சார்பில் பி.சக்திவேலன் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இதையொட்டி இயக்குநர் சாந்தகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்துத் தனது புதிய திரைப்படமான ‘ரசவாதம்’ பற்றிய பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

சாந்தகுமார் பேசும்போது, “மெளனகுரு படத்தை முடித்துவிட்டு ‘மகாமுனி’ படத்தின் திரைக்கதை எழுதுவதற்காக கொடைக்கானலில் ஒரு வாரம் தங்கலாம் என்று சென்றேன். ஆனால், அங்கு ஐந்து மாதங்கள் தங்கியிருந்தேன். அங்கு நான் தங்கியிருந்த நாட்களில் எனக்குக் கிடைத்த அனுபவத்தின் மூலம் எழுதப்பட்ட கதைதான் இது.

சித்தர்கள், மகான்கள் சொன்ன விஷயத்தை தாண்டிய ஒரு பார்வைதான் இந்த ‘ரசவாதி’ திரைப்படம். இந்தப் படத்தில், ஐந்து முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அந்தக் கதாபாத்திரங்களின் பயணத்தை சொல்வதுதான் இந்தப் படத்தின் கதை.

ரசவாதி’ என்பது கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் கண் முன்னே கொண்டு வரக் கூடிய விஷயம். உறவுகளை மையமாக வைத்து காதல், கோபம், பழி வாங்கல், இழப்பு என்ற பல்வேறு உணர்வுகளையும் இத்திரைப்படம் கடந்து செல்கிறது.

கொடைக்கானலில் 30 வயதான ஒரு சித்த மருத்துவர் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது.

அந்த சமயத்தில் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்காக இந்த மலைப் பகுதியில் வந்திறங்கும் புதிய பெண் ஒருத்தியை சந்திக்கிறார். அவளுடைய நட்பினால் சித்த மருத்துவருக்குக் கடந்த கால கஷ்டங்கள் தீரும் நேரத்தில், அங்கிருக்கும் உள்ளூர் இன்ஸ்பெக்டரால் சில பிரச்சினைகளை சந்திக்கிறார். அது என்ன என்பதும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும்தான் இந்தப் படத்தின் கதை.

இந்த ‘ரசவாதி’ படத்தில் ஆக்‌ஷன், த்ரில்லர், ரொமென்ஸ் என அனைத்தும் இருக்கிறது. ‘மௌனகுரு’, ‘மகாகமுனி’ படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் இருக்காது. ஏனென்றால், என் கதைக்கு அவைகள் இதுவரை தேவைப்பட்டதில்லை.  ஆனால், இந்த கதையில் அதிகமான ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறது. இந்தக் கதைக்கு அது தேவைப்பட்டது.

இந்தப் படத்தில் நாயகன் அர்ஜுன் தாஸ் சித்த மருத்துவராக நடித்திருக்கிறார். இந்தக் கதைக்கு, அர்ஜுன் தாஸ் சரியாக இருப்பார் என்று, தோன்றியதால்தான் அவரை நாயகனாக தேர்ந்தெடுத்தேன். அவருக்கு அழுத்தமான கதாபாத்திரம். ஏற்கனவே அவர் இது போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இது வேறு மாதிரியாக இருக்கும். நாயகன் ‘சித்த மருத்துவர்’ என்பதால், இது சித்த மருத்துவம் தொடர்பான படம் அல்ல. இது ஒரு ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த காதல் கதைதான்.

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில், மலையாள நடிகர் சுஜித் சங்கர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவர், இதுவரை இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. அவருடைய நடிப்பு எல்லோராலும் கவனிக்கும்படி இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவரது நடிப்பை பார்த்து கை தட்டினார்கள். திரையிலும் அது பிரதிபலிக்கும்.

எழுத்தாளர் ‘பவுலோ கோய்லோ’ எழுதிய ‘அல்கெமிஸ்ட்’ என்ற பெயரில் நாவல் ஒன்று இருக்கிறது. அதன் மொழி பெயர்ப்பும் தமிழில் இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தின் கதைக்கும் அந்த நாவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சினிமாவில் இதுவரை அல்கெமிஸ்ட்’ என்ற தலைப்பினை வேறு யாரும் பயன்படுத்ததால், நான் அதை பயன்படுத்தியிருக்கிறேன்.

எனது ஒவ்வொரு படத்திற்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன் என்று பலரும் கேட்கிறார்கள். நான் கதை எழுதவோ, திரைக்கதை எழுதவோ அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதில்லை. படம் தொடர்பான நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட சில விசயங்களால்தான் இடைவெளி ஏற்படுகிறது. இனி அந்த இடைவெளி அதிகம் இருக்காது. இந்த ‘ரசவாதி’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எனது அடுத்த படத்தை தொடங்கிவிடுவேன். அதற்கான கதையும் ரெடியாக இருக்கிறது.

நான் தயாரிப்பாளராக உருவெடுத்ததற்கு காரணம் இதில் கிடைக்கும் சுதந்திரம்தான். சுதந்திரமாக இயங்கலாம் என்ற நினைப்பில்தான் தயாரிப்பில் இறங்கினேன். எழுத்துப் பணியை முடித்துவிட்டு, படப்பிடிப்புக்கு செல்வதால், எவ்வளவு நாட்களில் படத்தை முடிப்பேன் என்பது எனக்கு முன்பே தெரிந்துவிடும். அதனால் தயாரிப்பாளராக எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை.

50 நாட்களில் இந்த ரசவாதி’ படத்தை முடித்துவிட்டேன். இனிமேலும் தயாரிப்பாளராக தொடர்வேனா என்றால் அது எனக்கு தெரியாது. ஆனால் நான் எழுதுவதையும், இயக்குவதையும்தான் விரும்புகிறேன். அதை தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பேன்…” என்றார்.

இந்த ’ரசவாதி’ திரைப்படம் வரும் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் பி.சக்திவேலன் தமிழகம் முழுவதும் படத்தை வெளியிடுகிறார்.

Our Score