ரஞ்சித்-பிரியாராமன் டைவர்ஸ்..!

ரஞ்சித்-பிரியாராமன் டைவர்ஸ்..!

அடுத்த டைவர்ஸ் ஜோடிகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள் ரஞ்சித்– பிரியாராமன் ஜோடி.

‘பொன் விலங்கு’, ‘சிந்து நதி பூ’, ‘மறுமலர்ச்சி’, ‘பாண்டவர் பூமி’ உள்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். இவரும், ‘வள்ளி’, ‘சூரியவம்சம்’ உள்பட பல படங்களில் நடித்த பிரியா ராமனும் ‘நேசம் புதுசு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள்.

அப்போது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1999–ம் ஆண்டு ஜூன் மாதம் 16–ந் தேதி அவரவர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆதித்யா(வயது 7), ஆகாஷ்(3) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு பிரியாராமன் நடிக்கவில்லை. ரஞ்சித் மட்டுமே அவ்வப்போது நடித்து வந்தார். அவருக்கும் ஹீரோ வாய்ப்புகள் கிடைக்காமல்போக தானே சொந்தமாக படத்தைத் தயாரித்தார். ‘பீஷ்மர்’ என்ற அந்தப் படம் சுமாராகவே சென்றது. ஆனால் இந்தத் தம்பதிகள் இந்த ஒரு படத்தில் அதுவரை சம்பாதித்ததில் பெரும் பகுதியை இழந்துவிட்டார்கள். அந்தப் படத்தை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு நன்றாக இருந்தது என்கிறார்கள் தமிழ்ச் சினிமா ரசிகர்கள்.

இதன் பின்பு கிடைக்கின்ற வாய்ப்புகளில் நடித்து வந்தார் ரஞ்சித். நிறைய மலையாளப் படங்களில்கூட நடித்துக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டு நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின்போது ஜோடியாக வந்து வாக்களித்துச் சென்றார்கள். யார் கண் பட்டதோ தெரியவில்லை. இப்போது டைவர்ஸாம்..

இருவருக்குமிடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம். இதற்கு விவாகரத்தே ஒரே வழி என்று முடிவு செய்து தாம்பரத்தில் உள்ள கோர்ட்டில் விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு செய்திருக்கிறார்கள். இருவரும் ஒருமித்த கருத்தோடு மனு செய்ததால், கடந்த 6–ந் தேதி இருவருக்கும் விவாகரத்து அளிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து பற்றிய பேட்டியளித்திருக்கும் நடிகர் ரஞ்சித், ‘‘எங்கள் இருவருக்குமிடையே ஒரு வருடத்துக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரண்டு பேருக்கும் இடையே வேறு வேறு திசைகள், வேறு வேறு பயணங்கள் இருப்பதை புரிந்து கொண்டோம். அதனால், கோர்ட்டு மூலம் சுமுகமாக பிரிவது என்று முடிவு செய்தோம். குழந்தைகள் இருவரும் பிரியாராமனிடமே இருக்கும். ஒரு தாயால் மட்டுமே குழந்தைகளை நன்றாக பராமரிக்க முடியும். நாங்கள் இருவரும் கணவன்–மனைவி உறவில் இருந்து விடுபட்டாலும், நல்ல நண்பர்களாக இருப்போம். சிறந்த தோழன்– தோழியாக வாழ்ந்து காட்டுவோம்..’’ என்று சொல்லியிருக்கிறார்.

இன்னிக்கு ரேஞ்ச்சுல… நாட்டுல.. கல்யாணம் பண்றதும், டைவர்ஸ் பண்றதும் அவ்ளோ ஈஸியா போச்சு..!

Our Score