ராம்கோபால்வர்மாவின் படங்களைவிடவும் அவரது பேச்சுக்களும், செயல்களும்தான் அதிகம் விமர்சிக்கப்பட்டுள்ளன.
“பெண்களை படுக்கையில் பயன்படுத்த மட்டும்தான் எனக்குப் பிடிக்கும்…” என்று சொன்னதிலிருந்து “தமிழகத்து தலைமைச் செயலாகமாக பரப்பன அக்ரஹாரம் இருப்பது கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்…” என்று கடந்த வாரம் சொன்னதுவரையிலும் ரொம்பவே தைரியக்காரர்தான் இந்த ராம்கோபால்வர்மா.
சமீபத்திய தன்னுடைய படங்கள் அனைத்திலும் கவர்ச்சியையும், ஆபாசத்தையும் அளவுக்கதிகமாக திணித்தே வருகிறார் ராம்கோபால்வர்மா. ஏனென்றுதான் தெரியவில்லை..!
கடைசியாக அவர் இயக்கிய ‘ஐஸ்கிரீம்-2’ படமும் அப்படித்தான். இப்போது அசுர வேகத்தில் அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘சாவித்திரி’ படத்தில் பள்ளி மாணவர்களின் விடலைத்தனமான காதல், செக்ஸ் சேட்டைகளை மையமாக வைத்து எடுத்திருக்கிறாராம்..
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டவுடன் எதிர்பார்த்ததுபோலவே ஆந்திரா முழுவதும் ரகளைகள் துவங்கவிட்டன.. பள்ளி மாணவன் தனது ஆசிரியையை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது போன்ற ஸ்டில்களும் வெளியாக பலரது கண்டனத்தையும் எதிர்கொண்டுள்ளார் ராம்கோபால்வர்மா.
சிறுவர் நல உரிமைகளுக்கான மாநில மனித உரிமை ஆணையம் இது குறித்து ராம்கோபால்வர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் எட்டாம் தேதிக்குள் இதற்குள் பதிலளிக்கும்படி சொல்லியிருக்கிறதாம்..
ராம்கோபால்வர்மாவோ வழக்கப்படி, “என் வாழ்க்கையில் நா்ன் சந்தித்த சில விஷயங்களைத்தான் இதில் காட்டவுள்ளேன். எனக்கென்று உள்ள படைப்புரிமையில் தலையிட வேறு யாருக்கும் உரிமையில்லை..” என்று சொல்லியிருக்கிறார்..
இதை வைச்சே படத்தை ஓட்டிருவாங்கப்பா..!