full screen background image

“என் கவிதையை என் அனுமதியி்லலாமல் எப்படி பயன்படுத்தலாம்…?”-தெலுங்கு இயக்குநரை கண்டித்த பிரகாஷ்ராஜ்..!

“என் கவிதையை என் அனுமதியி்லலாமல் எப்படி பயன்படுத்தலாம்…?”-தெலுங்கு இயக்குநரை கண்டித்த பிரகாஷ்ராஜ்..!

‘ஆகடு’ படத்தில் தன் கவிதையை தன் அனுமதியில்லாமல் இயக்குநர் சீனு வைட்லா பயன்படுத்தியிருக்கிறார் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றஞ்சாட்டி பேசியுள்ளது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராம்சரண்தேஜா, காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘Govindudu Andarivadele’ என்ற தெலுங்கு படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஹைதரபாத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் சென்ற மாதம் மகேஷ்பாபு, தமன்னா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் சீனு வைட்லா இயக்கத்தில் வெளியான ‘ஆகடு’ படம் பற்றியும் பேசினார்.

இந்த ‘ஆகடு’ படத்தில் முதலில் பிரகாஷ்ராஜும் நடித்தார். ஒரு நாள் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநர் ஒருவரை தகாத முறையில் திட்டியதாக பிரகாஷ்ராஜ் மீது இயக்குநர் சீனு வைட்லா புகார் எழுப்பினார். தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது.  பின்பு ‘ஆகடு’ படத்தில் பிரகாஷ்ராஜுக்கு பதிலாக ஹிந்தி நடிகர் சோனு சூட் நடித்தார்.

அப்போது பிரகாஷ்ராஜ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் சீனு வைட்லாவை கண்டித்தும், விமர்சித்தும் பேசினார். அக்கூட்டத்தில் தன்னுடைய எதிர்ப்பை ஒரு கவிதை மூலமாகவும் தெரியப்படுத்தினார்.

“என்னை கல்லால் அடிக்காதே…

அதை பிடித்துக்கொண்டு

வீடு கட்டி விடுவேன்.

என்னை எரித்து விட வேண்டுமென

தீ வைக்காதே ; வீட்டிற்கு விளக்காக்கி கொள்வேன்.

என்னை சினிமா துறையில் இருந்து

விரட்டிவிட வேண்டும் என எண்ணாதே..

நான் சேர வேண்டிய இடத்திற்கு

விரைவாக சேர்ந்து விடுவேன்.

தயவு செய்து சொல்கிறேன்..

என்னை கொல்ல விஷம் வைக்காதே…

விழுங்கி, நீலகண்டனாகி விடுவேன்…”

என்று கவிதை வடிவில் இயக்குநர் சீனு வைட்லாவை கண்டித்திருந்தார்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜின் இந்தக் கவிதையை, ‘ஆகடு’ படத்தில் அவருக்கு பதிலாக நடித்த இந்தி நடிகர் சோனுசூத் என்பவர் பேசுவது போல காட்சி இடம் பெற்று இருந்தது. இதைக் கேள்விப்பட்டு பிரகாஷ்ராஜ் இன்னும் சூடாகிப் போனார்.

இது குறித்து ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘Govindudu Andarivadele’ தெலுங்கு படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ்ராஜ் அந்தப் படத்தைவிட்டுவிட்டு ‘ஆகடு’ படம் பற்றியே பேசித் தள்ளிவிட்டார்.

“என்னை படத்தில் இருந்து நீக்கிய டைரக்டர் எனது அனுமதியின்றி எனது கவிதையை மட்டும் எப்படி உபயோகிக்கலாம்? அது கவிதை அல்ல. எனது வேதனை. கவிதை பிடித்திருந்ததால் உபயோகித்ததாக டைரக்டர் கூறுவது கொடுமை. எனது அனுமதியுடன்தான் அதை பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆகடு படம் தோல்வி அடைந்தால் அதற்கு டைரக்டர்தான் காரணம். நடிகர் மகேஷ்பாபுவின் படத்திற்கு மக்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். அனைவருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இயக்குனரைச் சார்ந்தது. ஆனால் அதில் இருந்து இயக்குநர் சீனு வைட்லா தவறி விட்டார். அவர் தனது அகங்காரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்…” என்று சீறித் தள்ளியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

‘ஆகடு’ படத்திலேயே அந்த கவிதை வாசிப்பு ஒண்ணுதான் சூப்பரா இருக்குன்னு படம் பார்த்த ரசிகர்கள் சொல்றாங்க.. படம் தோல்வியென்று தெலுங்குலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..!

பிரகாஷ்ராஜின் இந்த பேட்டிக்கு இயக்குநர் சீனு வைட்லா தெரிவித்துள்ள பதில் இந்தப் பதிவில் உள்ளது.

Our Score