‘உரியடி’ திரைப்படத்தின் மூலம் படத் தயாரிப்பில் தடம் பதித்த சூப்பர் டாக்கீஸ்’ சமீர் பரத் ராம், தற்பொழுது ‘காக்கா முட்டை’ புகழ் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு இணை தயாரிப்பாளராகவும், லைகா நிறுவனத்துடன் இணைந்து ‘பன்னிக்குட்டி’, இயக்குநர் பாலு சர்மா இயக்கத்தில் ‘உணர்வுகள் தொடர்கதை, மற்றும் இயக்குநர் தர்புகா சிவா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத திரைப்படம் என பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
தயாரிப்பாளர் சமீர் பரத் ராம் தற்போது அவதார் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ரவி குமாரசுவாமி மற்றும் சிவகுமார் குமாரசுவாமி இருவருடன் இணைந்து புதிய திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் நாயகனாக ‘விஜய் டிவி’ புகழ் ராமர் நடிக்கிறார். நாயகியாக கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி நடிக்கிறார். இவர் இன்னொரு புகழ் பெற்ற நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரியாவார்.
ஜபீஸ் கே.கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். தயாரிப்பு மேற்ப்பார்வை – ராஜா பக்கிரிசாமி.
‘தமிழ் இனி’ குறும்படத்தின் மூலம் கலைஞர் தொலைக்காட்சி நடத்திய ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரின் மனிதிலும் ஒருங்கே இடம் பிடித்த மணி ராம், இப்படத்தின் இயக்குநராக உயர்ந்திருக்கிறார்.
மேலும், திரைப்படத்தின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால், அமெரிக்காவின் தொழிற் நுட்ப தலைநகரான சிலிகான் பள்ளத்தாக்கில் இருந்து, தனது கனவை நனவாக்க தமிழ் திரையுலகில் தடம் பதித்திருக்கிறார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பல முகங்கள் இருக்கிறது. இந்த கற்பனை-காமெடி-திரில்லர் படம் ஒவ்வொரு மனிதனும் தன்னை மறைத்து கொள்ளும் பல்வேறு முகமூடிகளை கற்பனையும் நகைச்சுவையும் கலந்து திரில்லிங்காக படம் பிடித்து காட்டுகிறது.
இந்நிலையில் ஒரு முகமூடி கலைந்தால், அதன் எதிர்வினை மற்றும் பதில்களையும் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் நம் கண் முன் படைக்கிறது.
இப்படக் குழு நட்சத்திரங்கள் மற்றும் தொழிற் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்த கற்பனை-காமெடி-திரில்லர் திரைப்படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் புகழ் பெற்ற மேற்கிந்திய கிரிக்கெட் வீரரான ஆல்வின் காளிச்சரண் கலந்து கொண்டு படத்தினை துவக்கி வைத்தார்.