full screen background image

மகாமுனி – சினிமா விமர்சனம்

மகாமுனி – சினிமா விமர்சனம்

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்திருக்கிறார். இந்துஜா, மஹிமா நம்பியார் என்று இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் ரோகிணி, ஜெயப்பிரகாஷ், இளவரசு, காளி வெங்கட், அருள்தாஸ், தீபா, மதன்குமார், ஜி.எம்.சுந்தர், தங்கமணி பிரபு, சூப்பர்குட் சுப்ரமணி, யோகி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசை – S.S.தமன், ஒளிப்பதிவு – அருள் பத்மநாபன், படத் தொகுப்பு – V.J.சாபு ஜோசப், கலை இயக்கம் – ரெம்போம் பால்ராஜ், சண்டை இயக்கம் – ஆக்ஷன் பிரகாஷ், பாடல்கள் – முத்துலிங்கம், கிருஷ்ணமூர்த்தி தனுசுகோடி, மக்கள் தொடர்பு – B.யுவராஜ், எழுத்து, இயக்கம் – சாந்த குமார், தயாரிப்பாளர் – K.E.ஞானவேல் ராஜா, தயாரிப்பு நிறுவனம் – ஸ்டூடியோ க்ரீன், வெளியீடு – தருண் பிக்சர்ஸ்.

2010-ம் ஆண்டு வெளிவந்த ‘மெளன குரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார்தான் இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

தன் வினை தன்னைச் சுடும் என்பதையும், கத்தியெடுத்தவன் கத்தியால்தான் அழிவான் என்பதையும் இயற்கை, மதம், கடவுள், நாடு, நேர்மை, நீதி, நியாயம் கலந்து ஒரு காக்டாயிலாக இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார்.

ஆர்யா இதில் மகா, முனி என்று இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மகாவும், முனியும் இரட்டையர்கள். இவர்களின் தந்தை இவர்களின் சின்ன வயதிலேயே இறந்துவிட்டதால் தாயுடன் இருந்திருக்கிறார்கள்.

மன நலம் பாதித்த இவர்களின் தாய் ஒரு நாள் இவர்களைவிட்டுவிட்டு செல்ல… இருவரும் அனாதையாகிறார்கள். வாழ்க்கையோட்டத்தில் ஒருவர் காஞ்சிபுரத்திலும், இன்னொருவர் ஈரோட்டு பக்கத்திலும் வாழ்கிறார்கள்.

‘மகாலிங்கம்’ என்னும் மகா காஞ்சிபுரத்தில் வசிக்கிறார். ஒரு எளிய மனிதன். கால்டாக்சி டிரைவர். இவருடைய மனைவி விஜி என்னும் இந்துஜா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பையன் உண்டு.

காஞ்சிபுரத்தில் ஒரு கட்சியின் முக்கியப் பிரமுகர் இளவரசு. இவரது மனைவி தீபா. மகா, இளவரசுவுக்காக சில குற்றச் செயல்களில் ஈடுபட்டவர். கொலைகளையும் செய்திருக்கிறார்.

ஒரு நாள் சவாரி முடிந்து வீடு திரும்பும்போது ஐந்தாண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய அண்ணனை கொலை செய்தமைக்காக மகாவை முடிக்க ஆள் அனுப்புகிறார் லோக்கல் ரவுடியான அருள்தாஸ். ஆனால் அதில் கத்திக்குத்து பட்டு தப்பித்து வருகிறார் மகா. இது அவரது மனைவிக்குத் தெரிய வர.. “இந்தப் பொழப்பே வேண்டாம். வேறு எங்காவது போய் பிழைத்துக் கொள்ளலாம்…” என்கிறார் விஜி.

ஏற்கெனவே செய்த அஸைண்மெண்ட்டுக்காக 4 லட்சம் ரூபாய் பாக்கியை இளவரசு தர வேண்டியிருப்பதால், அதை வாங்கிக் கொண்டு இந்த ஊரைவிட்டுப் போகலாம் என்று விஜியை சமாதானம் செய்கிறார் மகா.

அந்தப் பணத்தைக் கேட்பதற்குள்ளாக மகாவுக்கு அடுத்த அசைன்மெண்ட்டை தருகிறார் இளவரசு. இளவரசுவின் கட்சியில் இருந்து வேறு கட்சிக்குப் போன ‘சூப்பர் குட்’ சுப்ரமணி இளவரசுவின் வீட்டின் மிக அருகிலேயே மேடை போட்டு இளவரசுவையும், அவரது மனைவியையும் வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்க்கிறார். இதைக் கேட்டு டென்ஷனான இளவரசுவின் மனைவி தீபா நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

மனைவியின் கோபத்தை அடக்குவதற்காக ‘சூப்பர் குட்’ சுப்ரமணியைத் தூக்கி வரும்படி மகாவிடம் சொல்கிறார் இளவரசு. மகாவும் அதைக் கச்சிதமாகச் செய்கிறார். ஆனால் மாவட்டச் செயலாளரின் அட்வைஸ்படி ‘சூப்பர் குட்’ சுப்ரமணியை கொலை செய்துவிடுகிறார் இளவரசு.

போலீஸ் மோப்பம் பிடித்து அருகில் வந்து நிற்கும்போது தன்னுடைய அரசியல் புத்தியோடு மகாவைக் கை காட்டுகிறார் இளவரசு. போலீஸ் மகாவைத் தேடத் துவங்க அவர் மனைவியுடன் எஸ்கேப்பாக பார்க்கிறார்.

இதே நேரம் ஈரோடு அருகேயுள்ள ஒரு கிராமம். அங்கே ‘முனி ராஜ்’ என்கிற முனி தனது வளர்ப்புத் தாய் ரோகிணியுடன் வசித்து வருகிறார். ஆற்றங்கரையோரமாக.. இயற்கை உரங்களை போட்டு வளர்த்த செடி, கொடிகளுடன் சுத்தபத்தமான பக்திமானாக காட்சியளிக்கிறார் முனி. பகல் பொழுதுகளில் டூடோரியல் செண்டரில் டியூஷனும் எடுக்கிறார் முனி.

அதே ஊரில் வசிக்கும் பெரும் பண்ணையார் ஜெயப்பிரகாஷ். இவருக்கும் இளவரசுவுக்கும் தொழில் ரீதியாக நட்பு உண்டு. ஜெயப்பிரகாஷின் மகளான மஹிமா நம்பியார் சென்னையில் எம்.ஏ. ஜர்னலிஸம் படிப்பவர். அப்பாவைப் பிடிக்காத மகள். வீட்டு்க்கும் அடங்காத மகள்.

பிராஜெக்ட் வேலையை முடிக்க வேண்டி ஹாஸ்டலில் இருந்து வீடு திரும்பிய மஹிமாவின் கண்ணில் படுகிறார் முனி. முனியின் அன்பான, அறிவான நடத்தை அவரைக் கவர்கிறது. முனி நடத்தும் லைப்ரரிக்கு அடிக்கடி சென்று வருகிறார் மஹிமா. இதை ஜெயப்பிரகாஷின் நெருங்கிய நண்பரின் மகன் பார்த்துவிட்டு மஹிமா, முனியை காதலிக்கிறாள் என்று போட்டுக் கொடுக்கிறார்.

இதை நம்பிய ஜெயப்பிரகாஷ் தந்திரமாக முனியை கொலை செய்யப் பார்க்கிறார். பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் முனி.

இதே நேரம் மகாவும் சென்னையில் இருந்து போலீஸாரால் துரத்தப்பட்டு ஈரோட்டுக்கு வருகிறார். அங்கே இளவரசு சொன்னது போல ஜெயப்பிரகாஷை சந்திக்க வருகிறார். வந்த இடத்தில் ஜெயப்பிரகாஷூடன் மகாவுக்கு மோதல் ஏற்பட அவரைச் சுட்டுக் கொல்கிறார். மேலும் ஜெயப்பிரகாஷின் ஆட்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு ஒரு துப்பாக்கிக் குண்டையும் தோள்பட்டையில் தாங்கிக் கொண்டு தப்பியோடுகிறார் மகா.

ஈரோட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ‘முனி’யை ‘மகா’ என்று போலீஸார் நினைக்க.. மகாவோ தனது மனைவி, மகனைப் பார்க்க சென்னைக்கு ஓடுகிறார். இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்த ‘மகா முனி’யின் திரைக்கதை.

எட்டு நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனது இரண்டாவது படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் சாந்தகுமார் இதிலும் தனது அற்புதமான இயக்கத் திறமையைக் காட்டியிருக்கிறார்.

அரசியல், சாதி வன்மம், இயற்கை அழிப்பு, கடவுள் நம்பிக்கை.. புத்தகங்கள்.. படிப்பு..  என்று பலவற்றையும் இந்த ஒரே படத்தில் கலந்து கொடுத்திருக்கிறார் சாந்தகுமார்.

ஆர்யாவுக்கு நிச்சயமாக இது முக்கியமான திரைப்படம். அவருடைய படங்களில் ‘நான் கடவுளு’க்கு பிறகு இந்தப் படம் அவரைப் பற்றிப் பேசும் படமாக இருக்கப் போகிறது.

‘மகா’, ‘முனி’ இருவரின் கேரக்டர் ஸ்கெட்ச்சையுமே அமைதியின் திருவுருவமாக காட்டியிருக்கிறார்கள். ‘மகா’வை அமைதியாக இருந்து கொலை செய்பவராகவும், ‘முனி’யை அதே அமைதியோடு வள்ளலாரையும், விவேகானந்தரையும் பின்பற்றுபவராகவும் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

உடல் மொழி, டயலாக் டெலிவரி, நடிப்பு, முகத்தில் காட்டும் உணர்ச்சி பாவங்கள்.. எல்லாவற்றிலும் ஆர்யா வித்தியாசமாகத் தெரிகிறார். ‘விஜி..’ ‘விஜி..’ என்று தனது மனைவியிடம் கெஞ்சுவதும்.. தனது இயலாமையை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கும் இடத்திலும்.. இளவரசுவிடம் பணத்தைத் திருப்பிக் கேட்க தயங்கும் நடிப்பிலும் அப்பாவியாய் இயல்பாய் நடித்திருக்கிறார் ஆர்யா.

இரட்டையர்கள் என்பதால் இருவருக்கும் ஒரே மாதிரியான குண நலன்கள்தான். ஆனால் பாச உணர்ச்சியின் அடிப்படையில் எது சரி… எது தவறு.. என்பதை புரிந்து கொள்ளாமல் ‘மகா’ இருப்பதையும், தன்னை வளர்த்தெடுத்த தாயான ரோகிணியின் வளர்ப்பினாலேயே பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து வரும் ‘முனி’யாகவும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் ஆர்யா.

தனது மகனை அடித்ததற்காக பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் “அந்த ஆசிரியைக்கு என்ன பிரச்சினையோ தெரியலை.  அவங்களைக் கூப்பிட்டு கண்டிச்சு வைங்க…” என்று தன்மையாகச் சொல்லிவிட்டு வருமிடத்தில் இதுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் பார்த்திராத ஒரு திரைக்கதையை நமக்குக் காட்டியிருக்கிறார் இயக்குநர். நடிப்பும் அப்படியே..!

இதேபோல் ‘முனி’யும் தன் பங்குக்கு தன்னைத் திட்டமிட்டுக் கொல்லப் பார்க்கிறார்கள் என்பதே புரியாத நிலையில் “ஆஸ்பத்திரிக்குப் போகணும்..” என்று திரும்பத் திரும்பச் சொல்லுமிடத்தில் நடிப்பில் ஒரு காத தூரத்தைத் தொட்டேவிட்டார் ஆர்யா. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

இறந்தது ஒருவன். ஆனால் அவன் பெயரில் உயிருடன் இருப்பது இன்னொருவனாக வித்தியாசத்தை கிளைமாக்ஸில்தான் காட்டியிருக்கிறார்கள். ‘மகா’, ‘முனி’யாக மாறியிருப்பதை அந்த படகுக் காட்சியிலேயே அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். வெல்டன் இயக்குநரே..!

நாயகிகளில் இந்துஜா மிகப் பெரிய அளவுக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். கணவனின் இயலாமையைச் சுட்டிக் காட்டும் மனைவியாகவும், தனது புடவை செலக்சன்களை குத்திக் காட்டியவுடன் அதற்குப் பதில் சொல்லும்விதத்திலும் ‘இத்தனை நாள் எங்கிருந்தாய் பெண்ணே’ என்று கேட்க வைத்திருக்கிறார் இந்துஜா.

பேருந்தில் பயணிக்கையில் கண்ணீரோடு மகாவை நினைத்து அவர் செல்வதும், ‘மகா மரணம்’ என்ற பொய் செய்தியைக் கேட்டவுடனேயே பாழுங்கிணற்றில் பாயும் ஆவேசமும் அவரது கேரக்டருக்கு மிகப் பெரிய வெயிட்டைக் கொடுத்திருக்கிறது.

அப்பாவின் பணக்காரத்தனமான பாசம்.. சாதிப் பற்று.. இதையெல்லாம் பிடிக்காத தற்போதைய தலைமுறை பெண்ணாக மஹிமா நம்பியார். அவருடைய மூக்கில் அணிந்திருந்த ஆபரணமே அழகு. அவருடைய அழகை மேலும் கூட்டியிருக்கிறது.

தன்னை மறைமுகமாகப் பெண் பார்க்க வந்தவனை சீண்டிவிட்டு அனுப்பி’விடுவதிலும், ‘இந்த வீட்டில் இனிமேல் ஒரு நிமிஷம்கூட இருக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு போகும்போது மது பாட்டிலை வாங்கிக் குடித்துவிட்டு அதை உடைக்கும் காட்சியிலும் ‘வாவ்’ என்று சொல்ல வைத்திருக்கிறார். சிறந்த இயக்குநர்கள் கிடைத்தால்தான் நடிப்புகள் வரவழைக்கப்படும் என்பதற்கு இந்தப் படத்தில் மஹிமா நம்பியாரின் நடிப்பும் ஒரு சாட்சி.

இவர்கள் மட்டுமல்ல.. எது நடந்தாலும் அதை அரசியல்தனமாகவே சிந்திக்கும் இளவரசு.. சிந்திக்கத் தெரிந்த மாவட்டச் செயலாளர் பாலாசிங்.. இளவரசுவை கண்டபடி திட்டும் ‘சூப்பர் குட்’ சுப்ரமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் இருக்கும் குள்ள நரியாக சுந்தர்.. என்று இந்தப் படத்தில் இருக்கும் அத்தனை பேருமே தங்களுடைய பங்களிப்பை மிகச் சரியாகவே செய்திருக்கிறார்கள்.

சாதி வெறியைக் காட்டும் ஜெயப்பிரகாஷூடன் இருக்கும் அவருடைய வீட்டு வேலையாள் மஹிமாவிடம் அடி வாங்கிய பின்பும், “நம்ம பாப்பாதான ஐயா.. விடுங்க..” என்று கன்னத்தைத் தடவிவிட்டுப் போகும் பாசமும்.. உண்மையானது.

இளவரசுவின் மனைவியான தீபாவின் நடிப்பு ஒண்டர்புல் என்றுதான் சொல்ல வேண்டும். பி.பி. நோயாளியைப் போல் அவர் படும்பாடும்.. சுப்ரமணியின் பேச்சைக் கேட்டு அவர் குதிக்கும் குதிப்பும்.. இளவரசுவை வார்த்தைகளால் வறுத்தெடுக்கும் காட்சிகளிலும் ம்ஹும்.. இப்படியொரு மனைவி வாய்த்தால் கணவர்களுக்கு எவ்வளவு பெரிய சிக்கல் வரும் என்பதையும் இதில் காட்டியிருக்கிறார்கள். தீபாவின் நடிப்பு மெச்சத் தகுந்தது.

முதுகில் பாய்ந்த கத்தியை எடுப்பதற்காக தனது நண்பனின் ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கும் மகாவிடம் பேரம் பேசும் காளி வெங்கட்டின் பேச்சும், நடிப்பும் மிக மிக யதார்த்தமானவை. யாராக இருந்தாலும் பணம் சம்பாதிப்பது மட்டுமே தனது கொள்கை என்பதை காளி வெங்கட் தெரியாமல் சொல்லிவிடும் காட்சி இது.

கத்துக் குத்தலுடன் குப்புறப் படுத்திருக்கும் மகாவிடம் “இப்பவே ஆயிரம் ரூபாயை கொடுத்திரு..” என்று காளி கேட்கும்போது மனித நேயமெல்லாம் நம்மைவிட்டுப் பிரிந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. பிற்காலத்தில் போலி டாக்டராக இவர் கைது செய்யப்படும்போது இவருடைய முழு பரிமாணமும் தெரிகிறது.

படத்தில் வசனங்களும் ஒரு கதாபாத்திரம் போலவே ஒலித்திருக்கின்றன. கடவுள் மறுப்புக் கொள்கை.. சாதி வன்மத்தில் செய்யப்படும் கொலைகள்.. சாதிய பாகுபாடுகள்.. அரசியல் விளக்கவுரைகள்.. எது அரசியல்.. எது மக்கள் சேவை என்பதை தெள்ளத் தெளிவாக இளவரசு போட்டுக் கொடுக்கும்போது தியேட்டரே அதிர்கிறதே..!!!

“அரசியல்ல இருந்தா சம்பாதிக்கத் தெரியணும். கமிஷன் கரெக்டா வருதான்னு தெரிஞ்சுக்கணும். மத்தபடி ராமாயணத்தை எழுதினது சேக்கிழார்தானான்னு தெரிஞ்சுக்க வேண்டியதில்லை…” என்ற வசனம் இப்போதைய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமானதாகத்தான் இருக்கிறது.

*பணம் இல்லாதவன் ஏங்கிதான் சாவனும்.. பணத்தை வைச்சிக்கிட்டு வெளில காட்டிக்க முடியாமல் கஷ்டபடுற நாமதாண்டா உண்மையான அரசியல்வாதிகள். முட்டையும், ரொட்டியும் குடுத்தா யாருக்கு வேண்ணாலும் நம்ம மக்கள் ஓட்டு போடுவானுங்க..” என்பதெல்லாம் ரொம்பவே சரிதான்..

*எல்லா சேலையும் தேடி, அலசி, கிண்டி, பிதுக்கி பாத்துதான் வாங்குறிங்க. அப்பறம் எப்படி பீரோல ‘புடிச்ச சேலை..’ ‘புடிக்காத சேலை’ன்னு ஒதுக்கி வைச்சி ‘புதுசா சேலை வாங்கணும்’னு அடம் புடிக்கிறிங்க…” என்ற ‘மகா’வின் கேள்விக்கு தியேட்டரில் பலத்த கை தட்டல். உண்மையான வசனமாச்சே..!?

*என்னடா எல்லாமே ரெட் இன்க்கா இருக்கு.. இப்படி படிச்சா என்ஜீனியரிங் தவிர வேற சீட்டே கிடைக்காதுடா…” என்று ஜெயப்பிரகாஷ் தன் மகனின் ரேன்க் கார்டை பார்த்துவிட்டுச் சொல்லுமிடத்திலும் சிரிப்பலை பொங்குகிறது..!

“உன்னை வேறு யாராவது வளர்த்து இருந்தா நீ இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க…” என்று ரோகிணி மருத்துவமனையில் முனிராஜிடம் சொல்லும் காட்சியில் தன்னுடைய ஒட்டு மொத்த பாரத்தையும் அவர் இறக்கி வைக்கிறார்.

“நாமெல்லாம் மிருகமா இருந்தப்போ உணவும், இனப் பெருக்கமும் மட்டுமே நமக்குத் தேவையா இருந்துச்சு. அதுல கொஞ்சம் மிருகங்கள் சிந்திக்க ஆரம்பிச்சது. அப்படிப்பட்ட மிருகங்களுக்கு ‘மனுசங்க’ன்னு அவங்களே பின்னால பேர் வெச்சிக்கிட்டாங்க. அந்த ‘மனுச’ங்களுக்கு ‘மிருகங்கள்’கிட்ட இல்லாத பேராசை, போட்டி, பொறாமை, வஞ்சம்னு நிறைய குணங்கள் சேர்ந்துடுச்சு. அன்னியோட அந்த மனுசங்களோட மனசும் நிம்மதியை இழந்திருச்சு…” என்று மனித குல பரிணாம வளர்ச்சியைப் பற்றி முனிராஜ் பேசுமிடம் கச்சிதமானது.

இதேபோல் “ராணுவ வீரன் செத்தா அவன் சடலத்துக்குக் கொடுக்கிற அதே மரியாதையை, குழியில மலம் அள்ளுறவன் செத்தாலும் கொடுக்கணும்…” என்பது மறுக்கப்பட்ட நீதியை வெளிக்காட்டும் வசனம்.

டுடோரியல் கல்லூரிக்குப் படிக்க வரும் மாணவர்கள் டிக்டாக்கில் மாற்று சாதியினரை வம்பிழுத்திருக்கும் வீடியோவைப் பார்த்துவிட்டு ‘எது வீரம்..?’, ‘எது கோழைத்தனம்..’ ‘எது பாசாங்குத்தனம்..?’ என்று கிளாஸ் எடுப்பதுகூட ஒருவகையில் சிறப்பானதுதான்..!

இப்படி இதுவரையிலும் வெளியில் பேசப்பட்டவைகளையெல்லாம் தியேட்டருக்குள் பேச வைத்து நமக்குள் விதைத்திருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார்.

அருள் பத்மநாபனின் ஒளிப்பதிவில் இத்திரைப்படம் ஒரு காவியத்தைப் படமாக்கியிருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியின் தன்மைக்கேற்பவும் காட்சியின் லைட்டிங்ஸை செட் செய்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

மகாவின் வீடு, அரசியல் பேசும் காட்சிகள்.. கோவிலில் மகாவும், இந்துஜாவும் பேசும் காட்சி, பேருந்தில் பயணிக்கும் காட்சி என்பவற்றில் ஒளிப்பதிவும் உடன் வருவதுபோலவேதான் தோன்றியது. இதேபோல் முனி சம்பந்தப்பட்ட காட்சிகளில் அந்த இயற்கையோடு இயைந்த ஒளியமைப்பில் மிக அழகாகக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இறுதிக் காட்சியில் மகா ஆற்றில் நீந்திச் செல்லும் காட்சியை படமாக்கியிருக்கும்விதம் ‘வாவ்’ என்று ஆச்சரியப்பட வைத்தது. பாராட்டுக்கள்..!

தமனின் இசையில் பாடல்களைவிடவும் பின்னணி இசை அபாரம். ஒரு சின்ன சப்தத்தைக்கூடவிடாமல் பதவி செய்திருக்கிறார்.

படத்தின் துவக்கத்திலேயே ‘மகா முனி’ என்கிற டைட்டில் வரும் இடத்தில் ஒலிக்கும் ஏட்டுச் சுவடிகளைப் புரட்டிப் பார்க்கும் இசையே படம் வித்தியாசமானது என்பதை முரசொலித்துவிட்டது.

‘முனி’யை முதன்முதலாக மஹிமா பார்த்து புகைப்படம் எடுக்கும் காட்சியில் அந்தச் சுற்றுப் புறச் சூழலையும், குருவியின் சப்தத்தையும், பறவைகளின் ஒலியையும் பதிவாக்கி ஒரு ரொமான்ஸ் மூடையும் வரவழைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

முனியின் படகு சவாரி காட்சி.. ஜெயப்பிரகாஷ் கொல்லப்படும் காட்சி.. மகா இந்துஜாவை பிரியும் காட்சி – இவைகளிலெல்லாம் உணர்ச்சிவயமான காட்சிப்படுத்தலுக்கு பின்னணி இசையும் ஒரு காரணமாக இருக்கிறது.

அதே சமயம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த வசனம், சிறந்த இயக்கம் என்றிருந்தாலும் படத்திற்காக இயக்குநர் செய்து கொண்ட சமரசமாக லாஜிக் எல்லை மீறல்களை அவர் செய்திருப்பது  எதிர்பாராத விஷயம்.

மகாவை இத்தனை அப்பாவியாய் இயக்குநர் காட்டியிருப்பது எதற்கு என்றுதான் தெரியவில்லை. கொலை செய்யத் தயங்காதவர் பின் விளைளவுகளைப் பற்றி அறியாதவராகவா இருப்பார்..? மனைவி பிள்ளைகளை வைத்துக் கொண்டு குற்றச்  செயல்களில் ஈடுபடும் அளவுக்கு தைரியமானவர் அதே தைரியத்தோடு காசைக் கொடுண்ணே என்று இளவரசுவிடம் தைரியமாகக் கேட்டிருக்கலாமே.. ஏன் அந்தத் தயக்கம்..?

மேல் தோள்பட்டை அருகே குண்டு பாய்ந்ததோடு ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ‘மகா’ ஓடி வருவதெல்லாம் டூ மச்சானது. அதேபோல் அத்தனை பாதுகாப்பு போட்டிருந்தும் மருத்துவமனைக்குள் சுதந்திரமாக மகாவின் கூட்டாளிகள் வந்து செல்வதும்.. போலீஸ் அதனைக் கண்டும் காணாமல் இருப்பதும் நம்பும்படியாக இல்லையே இயக்குநரே..!?

இதேபோல் மன நல காப்பகத்தில் இருக்கும் ‘மகா’வின் கேஸ் டைரியைப் புரட்டிப் பார்க்கும் அவசியம் மருத்துவர்களுக்கு ஏன் வந்தது என்பதற்கும், ‘மகா’ தெளிவான மன நிலையில்தான் இருக்கிறார் என்பதைச் சொல்லி அவரை வெளியில் தள்ளுவதற்குமான காரணங்களும் மிகச் சரியாக சொல்லப்படவில்லை. மன நல மருத்துவர்கள் ‘மகா’ பற்றிப் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் வலிந்து, திணிக்கப்பட்டவைகளாகவே தோன்றுகிறது.

‘மகா’, ‘முனி’யாக மாட்டிக் கொண்டு, ஜெயப்பிரகாஷை கொலை செய்த குற்றவாளியாகச் சிக்கி, மன நோயால் பாதிக்கப்பட்ட அடையாளத்தில் இங்கே அடைக்கப்பட்டிருப்பதையும் வசனத்தின் மூலம் முன்னமேயே எடுத்துரைத்திருக்கலாம்.

படம் பார்க்கும் சாமான்ய ரசிகர்களுக்கு சில விஷயங்கள் காட்சிகளின் மூலம் தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை. வசனத்தின் மூலம் சொன்னால் மட்டுமே புரியும்.

நான் லீனியர் முறையில் முன்னும், பின்னுமான காட்சியமைப்பில், அடுத்தது என்ன என்று எதிர்பார்க்கப்படும் திரைக்கதையில் மிகச் சிறப்பான இயக்கத்தில் வந்திருக்கும் இத்திரைப்படம் தமிழ்ச் சினிமாவில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

”ஒருத்தன் பொறந்ததுல இருந்து சாகிறவரைக்கும் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தாங்கிறதை வைச்சுதான் அவன் சந்ததி செத்தவங்களோட நல்லது, கெட்டதை தூக்கிச் சுமக்க வேண்டி வரும். அவன் சந்ததி நல்லதை சுமக்கப் போகுதா, கெட்டதைச் சுமக்கப் போகுதாங்கிறதுதான் அந்தக் கணக்கு…” என்ற ஒரு வசனமும் இப்படத்தில் உண்டு.

இந்த உண்மையை இப்போதைய தலைமுறையினர் புரிந்து கொண்டு நடந்து கொண்டால் நாட்டில் அநீதிகளும், குற்றங்களும் குறையும். அவரவர் பாவங்களை அவரவர் குடும்பத்தினர்தான் இப்போது சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மையை நாம் எப்படி நமது தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்..? இந்த சிந்தனையை இத்திரைப்படம் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

இந்த வகையில் இந்த ‘மகா முனி’ நிச்சயமாக நமக்கு வாய்த்த மாமணியான திரைப்படம்தான்..!

Our Score