ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது.
தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநரான ராஜு முருகன் இந்த புதிய படத்திற்கான கதை, வசனத்தை எழுதுகிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலுமகேந்திரா, கமல்ஹாசன், ராஜு முருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் நாயகி ஸ்வேதா திரிபாதி. இசை ஷான் ரோல்டன். கேமரா – ‘மாநகரம்’ செல்வம். கலை இயக்கம் – சதீஷ். சண்டை பயிற்சி – பில்லா ஜெகன். இந்த படத்தின் தலைப்பு, மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை ஏவி.எம்.ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்தத் துவவக்க விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா குடும்பத்தினர், ஆரா மகேஷ் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்படம் குறித்து கதாசிரியர் ராஜு முருகனிடம் பேசிய போது ரங்கா எப்படி இந்த படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தை சுவாரஸ்யமாக சொன்னார்.
“எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வது போலத்தான் நமது வாழ்க்கையிலும் சில ஈரமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. அடர்த்தியான கதை, எளிமையும் அழகியலுமான திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்துவிட்டது.
இதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தோம். பலரையும் பார்த்து எதுவும் சரியாக அமையாமல் சலித்து போன நேரத்தில், நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு நானும், சரவணன் ராஜேந்திரனும் கோவை சென்றிருந்தோம்.
அங்கே திருமண விழாவில் சாப்பாடு நன்றாக இருந்தது. இந்த அற்புதமான உணவுக்கு காரணமான சமையற்கலை நிபுணரான ரங்காவை, நண்பர் ஒருவர் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அவரைப் பார்த்து பேசிய தருணத்தில் சட்டென்று இவர் நமது கதைக்கு சரியாக இருப்பாரோ என்று தோன்ற நான் சரவணன் ராஜேந்திரனைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார்.
எங்கள் இருவருக்கும் பிடித்துப் போக… ரங்காவிடம் ‘சினிமாவில் நடிப்பதற்கு உங்களுக்கு விருப்பமா?’ என்று கேட்டோம். முதலில் தயங்கிய ரங்கா சிறிய மௌனத்திற்கு பின்னர் ஒப்புக் கொண்டார். இப்போது அர்ப்பணிப்போடு எங்களோடு இணைந்திருக்கிறார்…” என்றார் ராஜு முருகன்.