full screen background image

கணவரை வில்லனாக்கிய ‘தொட்ரா’ படத்தின் பெண் தயாரிப்பாளர்..!

கணவரை வில்லனாக்கிய ‘தொட்ரா’ படத்தின் பெண் தயாரிப்பாளர்..!

J.S. அபூர்வா புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள திரைப்படம் ‘தொட்ரா’. 

இந்தப் படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் இயக்கியுள்ளார். இவர் பாபி சிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோ பார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது இயக்கத்தில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்..

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா அறிமுகமாகிறார்.

கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா-2’வுக்கு இசையமைத்த உத்தமராஜா என்கிற இசையமைப்பாளரை இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார் மதுராஜ். 

படத்தின் இசையமைப்பாளர் உத்தமராஜா பேசும்போது, “இந்தப் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். ஒரு தீம் சாங். இதில் ‘பக்கு பக்குங்குது’ என்கிற பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்தப் பாடலை இயக்குநர் மதுராஜ் எழுதியுள்ளார்.

உண்மையிலேயே சிம்பு சாரை பாட வைக்கும்வரை எனக்கு ‘பக்கு பக்கு’ன்னுதான் இருந்தது. ஆனால் ஒரு புது இசையமைப்பாளர் என ஒதுக்காமல், பாடல் பிடித்திருந்ததால் பெருந்தன்மையுடன் பாட ஒப்புக் கொண்டார் சிம்பு” என்கிறார்.

‘போக்கிரி ராஜா’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். பின் அவர் மற்றொரு தெலுங்கு படத்தில் பிஸியாகிவிட பாதி படம் ஒளிப்பதிவாளர் செந்தில்  படமாக்க ‘தொட்ரா’ உருவாகி உள்ளது. 

‘ஆறாது சினம்’ உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிய ராஜேஷ் கண்ணன் என்பவர் படத் தொகுப்பைக் கவனித்துள்ளார். சண்டைக் காட்சிகளை ‘உறியடி’ படத்திற்கு காட்சிகள் அமைத்த விக்கி நந்தகோபால் அமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் எம்.எஸ்.குமார் என்கிற புதுமுகம் அழுத்தமான வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல; தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர்தான்.

இந்தப் படம் பற்றியும், தனது கணவரை வில்லன் கேரக்டரில் நடிக்க வைத்த்து பற்றியும் விரிவாகவே பேசினார் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார்.

Thodraa Stills (9)_1

“எந்நேரமும் பிசினஸ், பிசினஸ் என ஓடிக் கொண்டிருப்பவள் நான். சொன்னால் நம்ப மாட்டீர்கள். என் வாழ்க்கையில் இதுவரை நான் மூன்று படங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட நான் படம் தயாரிக்க முன் வந்ததே என் கணவருக்காகத்தான். 

எங்கள் திருமணத்தின்போதே என் கணவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருப்பது நன்கு தெரியும். ஆனால் தொழிலில் வெற்றி, தோல்வி என மாறி மாறி சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி வந்தவர்கள் என்பதால், சினிமாவுக்குள் நுழைய வேண்டும் என்றதும் ஆரம்பத்தில் தயங்கினேன்..

ஆனால் எனது மாமியார், அவர் இறக்கும் தருவாயில் என்னை அழைத்து எனது கணவரின் சினிமா கனவை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டதுடன், உன் கணவன் நல்ல நடிகனாக வருவான். உன்னால் சினிமாவிலும் சாதிக்க முடியும் என ஊக்கமும் தந்தார். அந்த ஒரு வார்த்தைதான், இதோ இப்போது படத் தயாரிப்பாளராக என்னை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

பணம் போடும் தயாரிப்பாளர் என்பதால் ஹீரோவாகத்தான் நடிக்கவேண்டும் என்று இல்லை. மேலும் அப்படி வந்த கதைகள் எதுவும் எங்களை ஈர்க்கவில்லை. முதலில் வில்லனாக நடித்து உங்களது நடிப்புத் திறமையை நிரூபியுங்கள். உங்களிடம் திறமை இருக்கும்பட்சத்தில் அதுவே உங்களை ஹீரோவாக ஆக்கும்  என கணவரிடம் சொல்லி வந்தேன்.

அந்த சமயத்தில்தான் இயக்குநர் மதுராஜ், இந்த ‘தொட்ரா’ படத்தின் கதையுடன் எங்களை சந்தித்தார். அவர் இந்த கதை சொன்னவிதம், எங்கள் இருவரை மட்டுமல்ல, என் குழந்தையையும் ஈர்த்துவிட்டது.

ஏனெனில் கதை அப்படிப்பட்டது. இன்று காதல் திருமணம் செய்பவர்களின் குடும்பங்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையை இந்தக் கதை சொல்கிறது.

எங்களோடதும் காதல் திருமணம்தான்.  நானே அந்த தப்பை  செய்தவள் என்பதால் பெற்றோரின் அந்த வலியையும், வேதனையையும் நன்றாக அறிவேன். ஆனால் என் வாழ்க்கை அப்படி ஆகவில்லை. இன்றுவரை என் கணவர்தான் முக்கியம் என்று சொல்லும் அளவுக்கு வாழ்க்கை சிறப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. அதுதான் இந்தக் கதையை படமாக தயாரிக்க எங்களை தூண்டியது…” என்றார்.

Thodraa Stills (1) 

படத்தில் வில்லனாக நடித்துள்ள எம்.எஸ்.குமார் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, “வெள்ளித்திரையில் ஒரு நடிகனாக வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு.. அது என் அம்மாவாலும், மனைவியாலும் இன்று சாத்தியமாகி இருக்கிறது.

பல பேரிடம், பல கதைகளை கேட்டாலும், மதுராஜ் சொன்ன கதை மட்டுமே இந்தப் படத்தில் நடிக்கும் முடிவை எடுக்க வைத்து. இந்தப் படத்தில் வில்லன் கேரக்டரில் நன்றாக நடித்திருப்பதாகவே நினைக்கிறேன்.

‘வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுறவரையிலே’ என்கிற அஜித்தின் பாடல் வரிக்கு ஏற்ற மாதிரித்தான் எனது வில்லன் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டிருக்கிறது…” என்றார்.

Thodraa stills (7)

படம் பற்றி இயக்குநர் மதுராஜ் பேசும்போது, “இன்று ரியல் எஸ்டேட் பிஸினஸ் போல சத்தமில்லாமல், வெளியே தெரியாமல் வளர்ந்து வருவதுதான் லவ் பிசினஸ். இவர்களின் டார்கெட்டே காதலர்கள்தான்.. காதலர்களை பிரித்து வைக்க வேண்டுமா, இல்லை சேர்த்து வைக்க வேண்டுமா..? இரண்டுக்குமே பணம் வாங்கிக் கொண்டு ஆபீஸ் போட்டு பஞ்சாயத்து நடத்தும் கும்பல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

நானே இதை பல இடங்களில் கண்கூடாக பார்த்த பின்புதான் இந்தக் கதையை உருவாக்கியுள்ளேன்.. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. கிருஷ்ணகிரியை கதைக் களமாக எடுத்துக் கொண்டாலும், வட மாவட்டங்களில் நடைபெற்ற, தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு பயங்கரமான உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன்.. 

காதலில் ஜாதி பிரச்சனை மட்டும் இல்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை பணக்காரன், என பணத்தை அடிப்படையாக கொண்டு காதல் உருவாகும்போது, அப்படிப்பட்ட காதல் இது போன்ற வியாபாரிகளிடம் சிக்கினால் என்ன ஆகும் என்பதை சொல்லியிருக்கிறேன்.

அப்படிப்பட்ட காதல் பஞ்சாயத்துக்கள் எதுவும் வராவிட்டால், தாங்களே இளைஞர்களுக்கு செல்போன், பணம், விலையுயர்ந்த ஆடைகளை கொடுத்து காதலிக்க தூண்டும் கும்பலும் இருக்கின்றனர். அவர்களில் சிலரையும் இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளோம்.

இந்தக் கதையை நான் உருவாக்கியதுமே இதற்கு பிருத்வி பொருத்தமாக இருப்பார் என்பதையும் தீர்மானித்து விட்டேன். தயாரிப்பாளரிடம் இந்தக் கதையை சொல்வதற்கு முன்பே பிருத்வியிடம் பேசிவிட்டேன்.

அவரும் அன்றிலிருந்து இந்தக் கதையுடன் பயணிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் எல்லாம் இருபது தடவைக்கும் மேலாக ரத்தம் சிந்தி உழைத்திருக்கிறார். பரத்துக்கு ஒரு ‘காதல்’ போல பிருத்விக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமையும்.

actress veena 

மலையாளத்தில் இருந்து வீணா என்பவரை அழைத்து வந்து ஹீரோயினாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.. ஒரு நாள் சீரியஸான காட்சி ஒன்றை படமாக்கிக் கொண்டு இருந்தோம்.. ஆனால் அதன்  சீரியஸ்னெஸ் உணராமல் அவர் சிரித்தபடி ஜாலியாக இருந்ததால் கிட்டத்தட்ட 30 டேக்கிற்கு மேல் போனது. அதனால் ஒருகட்டத்தில் கோபம் வந்து அவரை அடித்தும் விட்டேன். மற்றபடி படம் முழுதும் நன்றாக நடித்துள்ளார் வீணா..” என்றார்.

Thodraa stills (3)

படத்தில் நடித்த அனுபவம் பற்றி கதாநாயகன் பிருத்வி கூறும்போது, “படத்தின் டைட்டிலை பார்த்துவிட்டு ஆக்சன் ஹீரோவாகி விட்டேனா என்று நினைக்க வேண்டாம். அதேசமயம் இந்தப் படத்தில் கதைக்கு தேவையான ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கின்றன. இதற்கு முன் இதே போன்ற சாயலில் சில கதைகள் வந்திருந்தாலும், அதிலிருந்து விலகி இந்த கதையை சொல்லியிருக்கும் விதத்தில் வித்தியாசப்படுத்தி இருக்கிறோம்.. சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறோம்…” என்றார்.

படப்பிடிப்பு பொள்ளாச்சி,  கிருஷ்ணகிரி, பழநி, கரூர் மற்றும்  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Our Score