நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவின் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடனடியாகத் தகவல் பரவி சென்னையில் பல இடங்களில் இருந்தும் அவரது ரசிகர்கள் ஒன்று திரண்டு காவேரி மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். ரஜினியின் குடும்பத்தினரும் ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனைக்கு திரண்டு வர அந்தப் பகுதியே ஒரு மணி நேரத்தில் பரபரப்பானது.
நள்ளிரவில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரஜினிகாந்தின் மனைவி லதா, “ரஜினி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகத்தான் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். இது வருடா வருடம் அவர் செய்யும் பரிசோதனைதான்..” என்று தகவல் தெரிவித்தார்.
ஆனால், இன்று காலையில் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து கிடைத்தத் தகவல்கள் ரஜினிக்கு நிஜமாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவே தெரிவிக்கின்றன.
மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் வட்டாரத்தில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து கூறியுள்ளது இதுதான் :
ரஜினிக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை, மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கும்போது நெக்ரோசிஸ்(necrosis) எனப்படும் இந்த பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தக் குழாய்கள் செல்கின்றன. அவை கழுத்துப் பகுதி வழியாகத்தான் செல்லும். இந்த இடத்தில்தான், ரஜினிக்கு அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, லேசான மயக்கமோ, நினைவு தப்பிப் போவதற்கோ, பக்கவாதம் வருவதற்கோ வாய்ப்புகள் உள்ளன. அது அடைப்பின் தன்மையைப் பொறுத்தது.
அந்த பாதிப்புகள் வராமல் தடுப்பதற்காகவும், சீரான ரத்தம் ஒட்டம் ஏற்படுத்தவும் இன்று Carotid Artery revascularization முறையில் சரி செய்திருக்கிறார்கள்.
இது குறித்து காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்ட பத்திரிகை குறிப்பில் இந்தக் குறைபாட்டை நீக்க ரஜினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழுத்துப் பகுதியில் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட, இரண்டு காரணங்கள் உண்டு. கொலஸ்ட்ரால் போன்ற கொழுப்புகளால் அடைப்பு ஏற்படலாம். அல்லது, அந்த இடத்தில் செல்லும் ரத்தக் குழாய் சுருங்கியிருக்க வாய்ப்பு உண்டு. அதுமாதிரி சந்தர்ப்பங்களில் அடைப்பை சரிசெய்து ஸ்டண்ட் வைத்து ரத்த ஒட்டத்தை சரி செய்யலாம். இந்த சிகிச்சையைத்தான் ரஜினிக்கு அந்த மருத்துவமனையில் அளித்திருப்பார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஏற்கெனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.