full screen background image

ரஜினியின் ‘அண்ணாமலை சைக்கிள்’ திருடு போனதா..?

ரஜினியின் ‘அண்ணாமலை சைக்கிள்’ திருடு போனதா..?

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்துவிட்டார். அடுத்தாண்டு மே மாதம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவர் தனித்து போட்டியிடுவாரா..? அல்லது கூட்டணி வைத்துப் போட்டியிடுவாரா..? கூட்டணி என்றால் யாருடன் கூட்டணி வைப்பார்…? என்றெல்லாம் பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தாலும், ரஜினி ரசிகர்களுக்குள் வேறொரு பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது.

‘தலைவர் கட்சிக்கு என்ன பெயர் வைப்பார்..?’, ‘கட்சியின் சின்னமாக எதைக் கொண்டு வருவார்..?’, ‘அது எப்படியிருக்கும்..?’, ‘யார் அதை டிசைன் செய்வார்கள்..?’ என்கிற அளவுக்கு தங்களுக்குள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

இவர்களில் பெரும்பாலோரின் விருப்பம் ‘சைக்கிள்’ சின்னத்தை ரஜினி தன் கட்சியின் சின்னமாகக் கொண்டு வர வேண்டும் என்பதுதான். ஏனெனில், ரஜினிக்கும், அவரது மன்றத்தினருக்கும், தமிழகத்து மக்களுக்கும் மிகவும் பரிச்சியமான சின்னம், ‘சைக்கிள்’ சின்னம்தான்.

1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திமுக-மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை ரஜினி ஆதரித்தார். இந்தத் தேர்தலின்போது மூப்பனாரின் தலைமையில் ‘தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி’ உதயமாகியிருந்தது. இவர்களின் புதிய கட்சிக்கு சின்னமாக ‘சைக்கிள்’ தரப்பட்டிருந்தது.

அப்போது ரஜினியின் ‘அண்ணாமலை’ திரைப்படம் வெளியாகியிருந்தது. ‘அண்ணாமலை’ படத்தில் ரஜினி சைக்கிளில் சென்று பால் வியாபாரம் செய்வதுபோல பல காட்சிகள் இருக்கும். அந்த சைக்கிளுடன் ரஜினி நிற்பது போன்ற போஸ்டர்களை இந்தத் தேர்தலில் த.மா.க.வினர் பயன்படுத்தினார்கள். ரஜினியும் இதை ஏற்றுக் கொண்டார்.

அந்தத் தேர்தலில் தி.மு.க.-மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது.  அந்த வெற்றிக்கு அடித்தளமிட்டது அந்த ’சைக்கிள்’ சின்னம்தான்.

“மக்களிடையே மிக எளிதாகச் சென்றடைந்த அந்த ‘சைக்கிள்’ சின்னமே இப்போது ரஜினி புதிதாகத் துவங்கவுள்ள கட்சிக்கும் கிடைத்துவிட்டால் வெற்றி நமதே…” என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

இந்த சைக்கிள் விஷயத்தில் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவமும் உண்டு.

‘அண்ணாமலை‘ படத்தைத் தயாரித்தது ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் ‘கவிதாலயா’ நிறுவனம். படத்தில் ரஜினி பயன்படுத்திய அந்த சைக்கிள் சாதாரண சைக்கிள்தான்.

ஆனால், அதை வாங்கிய பிறகு பால் கேன்களைப் பொறுத்தும் அளவுக்கு தனிப்பட்ட பிட்டிங்ஸ்கள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு புதுமையான மாடல் சைக்கிளாக உருமாற்றியிருந்தார் படத்தின் இயக்குநரான சுரேஷ் கிருஷ்ணா.

அந்தப் படம் முடிந்த பின்பு அந்த சைக்கிள் ‘கவிதாலயா’ அலுவலகத்தில்தான் நிறுத்தப்பட்டிருந்தது. ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் கார் ஓட்டுனரான கோவிந்தராஜனின் வீடு ராயப்பேட்டையில் இருந்தது. அவர் அங்கேயிருந்துதான் தினமும் மயிலாப்பூரில் இருக்கும் கே.பாலசந்தரின் வீட்டுக்கு வேலைக்காக சைக்கிளில் வருவார்.

அவருடைய சைக்கிள் பழையதாக இருந்ததால் “இந்த அண்ணாமலை சைக்கிளை என்னிடம் கொடுத்தால் நான் பயன்படுத்திக் கொள்கிறேன்…” என்று கே.பி.யிடம் கேட்டார். கே.பி.யும் உடனேயே அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அந்த ‘அண்ணாமலை’ சைக்கிளை தனது கார் ஓட்டுனரான கோவிந்தராஜனிடம் வழங்கினார்.

அதற்குப் பின்பு கோவிந்தராஜன் தினமும் அந்த சைக்கிளில்தான் தனது சொந்த வேலைகளுக்கும், அலுவலகப் பணிக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தார். ராயப்பேட்டையில் தனது வீட்டின் அக்கம் பக்கம், கடைகளுக்குச் செல்லும்போது தனது சைக்கிளைக் காட்டி “இதுதான் ‘அண்ணாமலை’ படத்தில் ரஜினி ஓட்டிய சைக்கிள்..” என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார் கோவிந்தராஜன்.

இப்படித்தான் ரஜினியின் ‘அண்ணாமலை சைக்கிள்’ ராயப்பேட்டையில் ஒருவரிடம் இருக்கிறது என்பது ராயப்பேட்டை பகுதி முழுவதும்  தெரிந்துவிட்டிருக்கிறது.

இதன் பலன்…?

ஒரு நாள் இரவில் கோவிந்தராஜனின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ரஜினியின் ‘அண்ணாமலை சைக்கிள்’ திருடு போய்விட்டது. மறுநாள் காலையில் விஷயத்தை உணர்ந்த கோவிந்தராஜ் தேடு, தேடு என்று சைக்கிளைத் தேடியிருக்கிறார். கிடைக்கவில்லை. காவல்துறையில் புகார் கொடுத்தார். அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏன்.. இப்போதுவரையிலும் அந்த ரஜினியின் ‘அண்ணாமலை சைக்கிள்’ எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை..!

நிச்சயமாக யாரோ ஒரு ரஜினியின் உண்மை ரசிகன் அதைப் பயன்படுத்திக் கொண்டிருப்பான் என்பதை மட்டும் உணர முடிகிறது..!

Our Score