full screen background image

“ராஜ்குமாரை தவிர வேறு யாரிடமும் நான் ஆட்டோகிராப் வாங்கியது இல்லை” சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு..!

“ராஜ்குமாரை தவிர வேறு யாரிடமும் நான் ஆட்டோகிராப் வாங்கியது இல்லை” சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு..!

பெங்களூரு கன்டீரவா ஸ்டுடியோவில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் சமாதியிருக்கும் இடத்தில் அவருக்காக நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தாரமையா, மத்திய சட்ட மந்திரி சதானந்த கவுடா, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அம்பரீஷ், நடிகை சரோஜாதேவி, நடிகர் ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா ராஜ்குமார், மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், மற்றும் கன்னட திரையுலக நடிகர்கள் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.

கர்நாடக முதல்வர் சித்தாராமையா ராஜ்குமார் நினைவு மண்டபத்தையும், அவரது மார்பளவு சிலையையும் திறந்துவைத்தார். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு ராஜ்குமாரின் புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

rajini-rajkumar-function-2

அவர் பேசியதில் இருந்து சில பகுதிகள் :

1927-ல் பிரம்மா தேன் ஒன்றை உருவாக்கி அதை மேகத்தில் தூவினார். அந்த தேனுக்கு கலைகளின் தலைவி சரஸ்வதி ஆசிர்வாதம் செய்தார்.

அந்த மேகத்தில் இருந்து தேன் மழை எங்கு பெய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தபோது, கர்நாடகாவுக்கு அந்த புண்ணியம் கிடைத்தது. கன்னட மண்ணில் தேன் மழை விழுந்தது.

ரங்கமந்திராவில் நடிப்பு பயிற்சி பெற்று, ஒரு மனிதனாக உருவாகி 1954ல் சினிமா உலகில் குதித்தது அந்த மழை. அந்த தேன் மழையின் பெயர்தான் ராஜ்குமார்பேடர கண்ணப்பா என்ற படத்தில் தொடங்கி ராஜ்குமார் என்ற குதிரை ஓடத் தொடங்கியது.

1954ல் தொடங்கிய ராஜ்குமார் என்ற குதிரையின் சினிமா பயணம் 2008ல் முடிந்தது. 54 வருஷம் திரையுலகில் அவர் இருந்தார். புரந்தரதாசர், கனகதாசர் உள்ளிட்ட பல ஞானிகள்  அந்த குதிரையின் முதுகில் ஏறி பயணித்தனர்.

ராவணன், இரண்யன், மகிஷாசூரன் போன்ற கொடும் அரக்கர்களும் அந்த குதிரையின் முதுகில் பயணித்தனர். கர்நாடகாவில் எந்த மூலைக்கு சென்றாலும் அந்த குதிரைக்கு அபார வரவேற்பு கிடைத்தது.

இந்திய சினிமாவில் இவ்வளவு ஆண்டு காலம் வேறு யாரும் தொடர்ந்து நடித்ததை இதுவரை நான் பார்க்கவில்லை. அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து கன்னட மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில்கூட ராஜ்குமார் நடித்துள்ளார்.

ராஜ்குமார் மறைவுக்கு பிறகு இந்த அசுரர்களும், ஞானிகளும் எந்த ஒரு குதிரை மீதும் ஏறவில்லை. ஏனெனில் அதுபோன்ற கனமான பாத்திரங்களை சுமக்கும் சக்தி ரஜினிகாந்த் உட்பட வேறு எந்த குதிரைக்கும் இல்லை.

ஓடி, ஓடி களைப்படைந்த அந்த குதிரை, தனது தாய் மண்ணில் ஓய்வெடுக்கலாம் என்று சென்றது. ஆனால், அந்த குதிரையை வனதேவதையும் பார்க்க ஆசைப்பட்டாள். எனவேதான் 108 நாள் வனதேவதையுடன் அவர் இருந்தார்.

எனக்கு 11 வயதாக இருக்கும்போது நான் பள்ளிக்கூடம் சென்ற காலகட்டத்தில் ராஜ்குமாரிடம் ஆட்டோகிராப் வாங்கினேன். அதன் பிறகு வாழ்க்கையிலேயே இதுவரை வேறு யாரிடமும் நான், ஆட்டோகிராப் வாங்கியதில்லை.

பெங்களூரு டாடா இன்ஸ்டிடியூட்டிற்கு ஒருமுறை ராஜ்குமாருடன் சென்றிருந்தேன். அப்போது ராஜ்குமாரை பார்த்த மக்கள் அவரிடம் வந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்து சென்றனர். அப்போது என்னை பார்த்து ராஜ்குமார் ஒரு வார்த்தை கேட்டார். ‘ஏன் எனக்கு அவர்கள் வணக்கம் செலுத்துகிறார்கள்… தெரியுமா’ என்றார்..? நான் அதற்கு, ‘உங்களுக்கு மரியாதை கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுப்பார்கள்?’ என்று பதிலுக்கு கேட்டேன்.

அதற்கு ராஜ்குமார் சிரித்துக் கொண்டே, ‘மக்கள் எனக்கு மரியாதை தருகிறார்கள் என்றா நினைத்தாய்..? இல்லையில்லை. எனக்குள் உள்ள சரஸ்வதிக்குதான் அவர்கள் மரியாதை தருகின்றனர். அந்த கலைவாணியால்தான் நடிப்பு நமக்கு சாத்தியப்பட்டுள்ளது. ரசிகர்களை நம்மை பார்த்து கை தட்டுவதை, நமக்குக் கிடைக்கும் மரியாதை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால் நமக்கு அகங்காரம் வந்துவிடும். கலாதேவிக்கே அனைத்து புகழும் சென்றடைய வேண்டும்’ என்றார்.

எந்த ஒரு கட்சியிலும் சேராமல், அரசியலில் குதிக்காமல் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று நிரூபித்தவர் ராஜ்குமார்.

ராஜ்குமார் இறந்ததும் உடனே என்னால் வர முடியவில்லை. அவரது இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். ராஜ்குமார் மறைவின்போது அனைத்து ரசிகர்களும் தங்கள் கையால் அவரது சமாதியில் மண் போட வேண்டும் என்று கலாட்டா செய்தனர். இனியாவது ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.  ராஜ்குமார் நினைவிடத்தில்… இங்கே ஒரு ரிஷி படுத்துள்ளார் என்று நினையுங்கள். மவுனமாக வாருங்கள். போய் அவரிடம் பேசுங்கள். உங்களுக்கு ஆசி வழங்குவார். வருங்காலத்தில் இது ஒரு கோயிலாக மாறி உங்களுக்கு ஆசி வழங்கும்..” என்றார் ரஜினிகாந்த்.

Our Score