இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு திரைப்படத்தின் விளம்பரத்திற்காக விமானத்தை பறக்க விடப் போகிறார்கள்..!
‘ர’ என்ற தமிழ்த் திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி தமிழகத்தில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தைத் தயாரித்தவர்களும், இய்ககியவரும் விமானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா துறையில் இல்லாமல் வெளியில் இருந்து சினமா மீதான ஆர்வத்தில் திரைப்படம் எடுக்க வந்திருக்கும் அவர்கள், தங்களது ர படத்தை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த வித்தியாசமான ஒரு ஐடியாவை செயல்படுத்தவுள்ளார்கள்.
இதன்படி ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் ஒரு சிறிய ரக விமானத்தின் வாலில் ர படத்தின் போஸ்டர் கட்டிவிடப்பட்டு.. அந்த விமானம் பறக்கவிடப்பட்டு சென்னையைச் சுற்றி வரச் செய்கிறார்களாம்.
4.5 அடி நீளமுள்ள அந்த விமானம் 9 CC – 2 Stroke சக்தியுடன் இயங்கக் கூடிய சிறிய ரக விமானமாகும். இதன் இறக்கையின் நீளம் 4.5 அடி. ஆனால் இந்த விமானத்தின் வால் பகுதியில் 8 அடி நீளமுள்ள படத்தின் பெயர் எழுதப்பட்ட பேனர் கட்டிவிடப்பட இருக்கிறது. பேனருக்கும், விமானத்திற்கும் இடையிலான தூரம் 12 அடியாக இருக்குமாம்..
நாளை மாலை 4 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகில் இருந்து இந்த விமானம் பறக்கப்படவிருக்கிறதாம். ஒரு முறை மேலே அனுப்பப்பட்டு 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக பறக்கும் அந்த விமானம் மீண்டும் கீழே வந்த பிறகு மீண்டும் பறக்கவிடப்படுமாம்.. “இதுபோல மொத்தம் 5 முறை விமானம் பறந்து எங்களது படத்தின் பேனரை பரப்பப் போகிறது என்கிறார்கள்..” ‘ர’ படக் குழுவினர்.
இனிமேல் படங்களை தயாரித்து, இயக்கக்கூட யோசிக்க வேண்டியதில்லை.. படத்தை விளம்பரப்படுத்தத்தான் பெரிய அளவுக்கு யோசிக்க வேண்டும் போலிருக்கிறது..!