‘கோச்சடையான்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் நீண்ட நேரம் ஆங்கிலத்தில் பேசியதால் ரசிகர்கள் குரல் எழுப்ப அதனால் ‘ஒன் மினிட் முடிச்சிடறேன்’ என்று சொல்லிவிட்டு வேகமாக பேசி முடித்தார்.
அதனாலேயே தான் பேச வந்தபோது முதலிலேயே “ரொம்ப நேரம் பேசி உங்களை கைதட்ட விடமாட்டேன். சீக்கிரமா முடிச்சிருவேன்..” என்று சொன்ன கவிப்பேரரசு வைரமுத்து, நீண்ட நேரம் பேசிவிட்டுத்தான் ஓய்ந்தார்.
கோச்சடையான் என்ற பெயர்தான் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்த முதல் ஈர்ப்பு. கோச்சடையான் என்ற சொல்லுக்கு பொருள் என்ன..? ‘மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே..’ என்று பதிகம் பாடுவதால் கோச்சடையான் என்ற சொல் சிவபெருமானை குறிக்கிறது. இன்னொருவகையிலும் பொருள் கொள்ளலாம். மாறன், வழுதி, சடையன் என்ற பெயர்கள் பாண்டிய மன்னர்களின் பரம்பரையைக் குறிக்கின்றன. எனவே இதை ஒரு தமிழ் மன்னனின் பெயர் என்றும் கருதலாம். ஆத்திகம், நாத்திகம் என்ற இரண்டுக்கும் பாலம் கட்டும்வகையில் இந்தப் பெயர் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
இந்த 65 வயதிலும் ரஜினிக்கு 25 வயதுடைய ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இது வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காதது.. ரஜினி 4 தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறார். கருப்பு வெள்ளை, வண்ணம், கிராபிக்ஸ் அனிமேஷன்.. இப்போது கேப்சர் மோஷன் டைப் என்று இவர் கடந்து வந்த பாதையை இந்திய அளவில் வேறு எந்த நடிகரும் தொட்டதில்லை. இவரைப் போன்று சிகரம் தொட்டவரும் வேறு எவரும் இல்லை.
ரஜினி கடந்த 40 ஆண்டுகளாக தன் சிம்மானசத்தில் அசைக்க முடியாமல் அமர்ந்திருக்கிறார். இதற்கு இவருடைய உழைப்பு மட்டுமே காரணமில்லை.. இவரைவிட உழைப்பவர்கள் நிறைய பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். உழைப்பு ஒருவனுக்கு வீடு கட்டித் தருகிறது. நல்லெண்ணம்தான் சுற்றுச்சுவர் கட்டித் தருகிறது. அவர் மனிதாபிமானம் மிகுந்தவர். மனிதநேயமிக்கவர்.
உழைப்பையும் தாண்டிய இவருடைய மனித நேயம்தான் இவரை இங்கே இத்தனையாண்டுகளாக நிலைநிறுத்தியிருக்கிறது.. ‘பாபா’ கொஞ்சம் சரியாகப் போகவில்லை. விநியோகஸ்தர்களை அழைத்து என்னால் நீங்கள் நஷ்டமடைய வேண்டாம். இந்தாருங்கள் உங்களுடைய நஷ்டத் தொகை என்று அதைத் திருப்பிக் கொடுத்தார். இது அவரது மனித நேயம்.
ரஜினி சமயோசித புத்தியுடையவர். அறிவுக் கூர்மை மிக்கவர். இதற்கொரு உதாரணம் சொல்கிறேன்.. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற சர்ச்சைகள் கிளம்பிய காலம். அப்போது அவர் ஒரு பேட்டியளிக்கிறார். அதிலே ஒரு நிருபர் கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விக்கு ரஜினி அளித்த பதில் என்னை அசர வைத்தது. அப்படியொரு பதில்.. பத்திரிகையாளர் கேட்ட கேள்வி “ஒரு தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்னு சொல்றாங்களே..?” இது மிகவும் சிக்கலான கேள்வி.. ரஜினியின் பூர்விகம் மகாராஷ்டிரா.. பிறந்தது கர்நாடகாவில்.. ஆனால் புகழ் பெற்றது தமிழ்நாட்டில்.. என்ன பதில் சொல்வார்..? எப்படிச் சொன்னாலும் சிக்கலாச்சே என்று பதைபதைப்புடன் இருந்தேன். ரஜினி சொன்னார்.. “அதுவும் சரிதானே.. நல்லவேளை ஒரு நாடார், ஒரு முதலியார், ஒரு செட்டியார் முதலமைச்சராக வேண்டும் என்று சொல்லாமல் ஒரு தமிழன் முதல்வராக வேண்டும் என்று சொன்னார்களே அதுவரைக்கும் சந்தோஷம்..” என்றார்..
இயக்குநர் ரவிக்குமார் எனக்கு ஒரு பெரிய புகழாரம் சூட்டினார். என்னை ஒரு கணம் அதிர வைத்த புகழாரம் அது. அதை சற்றே நாணத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்.
தமிழ் மக்கள் நெஞ்சில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடியேற என் வரிகளும் உதவின என்ற அந்த புகழாரத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அமரர் எம்.ஜி.ஆரு.க்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் ஒரு அடையாளச் சிக்கல் இருந்தது. எம்.ஜி.ஆர். மலையாளி என்று விமர்சிக்கப்பட்டார். ஆனால் இங்கே தமிழராகவே அவர் வாழ்ந்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் அவர் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது, அதற்கு கண்ணதாசன் தன் பாடல் வரிகள் மூலம் இப்படி பதில் அளித்தார்…
பாடுவது கவியா
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா… –
என்று எழுதினார்.
எம்.ஜி.ஆர். தமிழர் என்று அழுத்தமாகப் பதிய அந்த வரிகள் உதவின. அப்படி ஒரு அடையாளச் சிக்கல் ரஜினிக்கும் வந்தது. அவர் மராட்டியரா, கன்னடரா, தமிழரா என்ற கேள்வி எழுந்தபோது,
அன்னை வாரிக் கொடுத்தது தாய்ப்பாலு…
என்னை வாழ வைத்தது தமிழ்ப் பாலு…
என்றெழுதினேன்.
என் ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது
தமிழலல்லவா..!
என் உடல் பொருள் ஆவியை
தமிழுக்கும் தமிழர்க்கும்
கொடுப்பது முறையல்லவா…
என நான் எழுதியவை ரஜினியின் அடையாளப் பிரச்சினை தீர உதவியதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.
ரஜினிக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.. உங்களுடைய ரசிகர்களை நீங்கள் அதிகம் காக்க வைக்காதீர்கள்.. வருடத்திற்கொரு படம் கொடுங்கள். இந்தப் படத்தை முதலில் சிறுவர்களிடத்தில் கொண்டு போங்கள்.. அதற்குப் பின்பு ரசிகர்கள் பார்த்துக் கொள்ளலாம். சிறுவர்கள் அதிகம் பார்க்க வேண்டிய படம் அது. அந்த வகையில் இதனை முன்னிறுத்துவதுதான் சிறந்தது…” என்றார்.