full screen background image

“வாங்க.. சூரியன் பக்கத்துல உக்காருங்க..” – ரஜினியை கிண்டல் செய்த கலைஞர்..!

“வாங்க.. சூரியன் பக்கத்துல உக்காருங்க..” – ரஜினியை கிண்டல் செய்த கலைஞர்..!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்தாண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும்விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என்று திரையுலகில் இருக்கும் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று நடத்தினார்கள்.

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், வடிவேலு, நயன்தாரா, நடிகை சாக்‌ஷி அகர்வால், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் மகேந்திரன், சரவணன், நடிகை ரோஹிணி, நடிகர் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகைகளும், முன்னணி தயாரிப்பாளர்களும், திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “கலைஞர் குறித்துப் பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்பது எனக்கே தெரியாது. அந்த அளவுக்கு கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான். கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்திருந்தால், எத்தனையோ சிவாஜி, எம்.ஜி.ஆரை. உருவாக்கியிருப்பார்.

எப்போதுமே ஒருவருக்கு பேச்சாற்றல் இருந்தால் எழுத்தாற்றல் இருக்காது. எழுத்தாற்றல் இருந்தால் பேச்சாற்றல் இருக்காது. ஆனால், கலைஞருக்கு இந்த இரண்டுமே கிடைத்திருந்தது.

சில பேர் அவங்களோட அறிவைக் காண்பிக்கிறதுக்காக மேடைல பேசுவாங்க. மத்தவங்களுக்குப் புரியுதான்னு யோசிக்க மாட்டாங்க. ஆனால் கலைஞர் அறிஞர்கள் நிறைந்த சபையில் அறிஞராகவும், கவிஞர்கள் நிறைந்த சபையில் கவிஞராகவும், பாமரர்கள் இருக்கும் அவையில் பாமரனாகவும் பேசுவார்.

வழக்கமாக கலைஞர் ஒரு நடிகருடன் அமர்ந்துதான் பிரிவியூ ஷோவில் படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அந்த நடிகர் ஓட்டுப் போட்டுவிட்டு வெளியில் வந்தபோது பத்திரிகையாளர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டீங்க என்று கேட்டபோது, அந்த நடிகர் “இரட்டை இலைக்கு” என்று சொல்லிவிட்டார். அது அன்றைக்கே டிரெண்டாகிவிட்டது.

ஆனால், அன்று மாலையே அந்த நடிகர் கலைஞருடன் அமர்ந்து படம் பார்த்தாக வேண்டும். இப்படி இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டதை பகிரங்கமா சொல்லிட்டோமே என்று தயங்கிய அந்த நடிகர் கலைஞரை சந்திப்பதைத் தவிர்க்க விரும்பி “தனக்குக் குளிர் காய்ச்சல்” என்று தகவல் சொல்லியனுப்பினார்.

ஆனால் கலைஞரோ அந்த நடிகரை வந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். அந்த நடிகரும் வேறு வழியில்லாமல் தியேட்டருக்குப் போனபோது, கலைஞர் அவரை வரவேற்று “என்ன காய்ச்சல்ன்னு சொன்னீங்களாமே.. வாங்க சூரியன் பக்கத்துல உக்காருங்க..” என்று கிண்டல் செய்தார். அந்த நடிகர் சாட்சாத் நான்தான்..! சூரியன் பக்கத்தில் அமர்ந்தால் குளிர் ஜூரம் போய்விடும் என்று நகைச்சுவையாக அவர் அன்று பேசியதை என்னால் மறக்கவே முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது என் பாக்கியம்.

“உங்களுக்கு ஆண்டவனைப் பிடிக்காது. ஆனால் ஆண்டவனுக்கு உங்களைப் பிடிக்கும்” என்று நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன்.

1955-ம் ஆண்டில் ‘மலைக்கள்ளன்’, ‘மந்திரிகுமாரி’ ஆகிய படங்களில் எழுதி சம்பாதித்த பணத்தில் அந்தக் கோபாலபுரம் வீட்டை வாங்கினார்.  அதே கோபாலபுரம் வீட்டில் கடைசி வரையிலும் மிக எளிமையாக வாழ்ந்தவர் கலைஞர். எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருத்துவச் செலவுகள் முழுவதையும் ஏற்றுக் கொண்டவர் கலைஞர். தன்னை மிக மோசமாக விமர்சனம் செய்த பத்திரிக்கையாளரை நலம் விசாரித்தே, தலை வணங்கச் செய்தவர் கருணாநிதி. அந்த பத்திரிகையாளர் பெயர் சோ ராமசாமி.

கலைஞரின் எழுத்தில் உருவாகும் தொண்டர்களின் கடிதத்தைப் படித்தால் சிலவை கண்ணீரை வரவழைக்கும். சிலவை நெருப்பை வரவழைக்கும். கலைஞரின் பேச்சில் தெனாலிராமனின் நகைச்சுவை இருக்கும். சாணக்கியனின் தந்திரம் இருக்கும். பாரதியாரின் கோபம் இருக்கும்..” என்று பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

 

Our Score