full screen background image

“இசைக்கே சாமி எம்.எஸ்.வி.தான்…” – சூப்பர் ஸ்டார் ரஜினி புகழாரம்..!

“இசைக்கே சாமி எம்.எஸ்.வி.தான்…” – சூப்பர் ஸ்டார் ரஜினி புகழாரம்..!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’ என்ற தலைப்பில் நேற்று மாலை காமராஜர் அரங்கத்தில் இசை கச்சேரியை நடத்தினார் ‘இசைஞானி’ இளையராஜா.

எம்.எஸ்.வி.யின சாகாவரம் பெற்ற பாடல்களை பாட வைத்து, அதில் இருக்கும் இசை நுணுக்கங்கள் பற்றியும், சிறப்புகள் பற்றியும் எடுத்துரைத்தார் இளையராஜா. 

இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின்போது மேடையேறிய ரஜினியிடம் இசைஞானி இளையராஜா எம்.எஸ்.வி. பற்றி சில கேள்விகளைக் கேட்க, அதற்கு ரஜினி பதில் சொன்னார். 

ரஜினி பேசும்போது, “எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு சாமி. பெரிய மகான், அவர் நினைவை கொண்டாடும்விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் என்னைப் போன்றவர்கள் கலந்து கொள்வதே பெரிய ஆசீர்வாதம். அதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.

இளையராஜா இசைஞானி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை சாமி. அந்தக் கடவுளை பற்றி ஒரு ஞானிக்குத்தான் தெரியும். அவரைப் பற்றி பாமர மக்களுக்கு நமது இசைஞானிதான் உணர்த்த வேண்டும்.

திறமை என்பது கடவுள் கொடுப்பது. பெற்ற தாய், தந்தையிடம் இருந்து அது வருவதில்லை. ஜென்மம், ஜென்மமாக வரக் கூடியது. அது ஒரு பிராப்தாம். சரஸ்வதி கடாட்சம். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அது கிடைத்து இருக்கிறது. 

பணம், பெயர், புகழ் போன்றவை வரும்போது மனிதர்களுக்கு தலை, கால் நிற்காது. ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிறு கடுகளவுகூட தலைக்கனம் இல்லை. அதனால்தான் அவர் ஒரு இசை கடவுளாகவே இருந்தார்.

1960 மற்றும் 70 கால கட்டத்தில் ஜாம்பவான்களாக நடிகர்கள், டைரக்டர்கள், பாடகர்கள் பலர் இருந்தனர்.  எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், பாலசந்தர், ஸ்ரீதர், டி.எம்.சவுந்தரராஜன், சீனிவாஸ், பி.சுசீலா என எல்லோரையும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ராமருக்கு உதவிய அனுமன் போல் அவர் இருந்தாலும் உண்மையில் ஒரு அணில் மாதிரியே வாழ்ந்தார். அப்படிப்பட்ட ஒரு மகானை நான் திரையுலகில் பார்த்தது இல்லை. இனியும் பார்க்கப் போவதுமில்லை…” என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் அன்றைய நிகழ்ச்சியின் மூலம் வசூலான தொகையை எம்.எஸ்.வி.யின் அறக்கட்டளைக்கு நன்கொடையாக இசைஞானி இளையராஜா சார்பில் எம்.எஸ்.வி. குடும்பத்தினரிடம் வழங்கினார் ரஜினி. 

Our Score