மலையாளத்தில் விமர்சன ரீதியாக வெகுவாகப் பலராலும் பாராட்டப்பட்ட ‘ஷட்டர்’ திரைப்படம் தமிழில் ‘நைட் ஷோ’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
மலையாளத்தில் ஜாய் மேத்யூவின் எழுத்து-இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் லால், ஸ்ரீநிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். 2013-ம் ஆண்டு வெளியான இந்த ‘ஷட்டர்’ திரைப்படம், Silver Crow Pheasant விருது மற்றும் 2012 International Film Festival of Kerala’-வில் திரையிடப்பட்டது. மேலும் மலையாள திரையுலகில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வசூல் சாதனை படைத்தது.
இந்த ‘ஷட்டர்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நைட் ஷோ’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக சத்யராஜ் நடித்திருக்கிறார். மேலும் யூகிசேது, அறிமுக நாயகன் வருண், அனுமோல், R.சுந்தர்ராஜன், கல்யாணி நடராஜன், திக்ஷித்தா ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவு – எம்.எஸ்.பிரபு, இசை – நவின் ஐயர், பாடல்கள் நா.முத்துக்குமார், கலை – ஏ.ராஜேஷ், நடனம் – சதீஷ், உடைகள் – ரமணா, ஒப்பனை – வேணு, புகைப்படம் – ஆர்.எஸ்.ராஜா, மக்கள் தொடர்பு – நிகில், வசனம் – யூகிசேது, கதை – ஜாய் மேத்யூ, படத்தொகுப்பு, திரைக்கதை, இயக்கம் – ஆண்டனி, தயாரிப்பு – ஏ.எல்.அழகப்பன், சாம்பால்.
இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘தின்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் 2013-ம் ஆண்டு துவங்கப்பட்டது. Creative Development, Production, Marketing, Distribution and Merchandising என்று பல கிளைகளைப் பரப்பி தமிழ் சினிமாவில் வேர் ஊன்றியுள்ளது.
‘தின்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான A.L.அழகப்பன், 1978-ம் ஆண்டு முதலே தமிழ்த் திரைப்படத் துறையில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருக்கிறார். இதுவரையிலும் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகம் செய்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களை தயாரித்துள்ளார். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 2010-ம் ஆண்டு வெளியான ‘ஈசன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த குணச்சித்திர நடிகர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இயக்குநர் விஜய் இயக்கிய ‘சைவம்’ திரைப்படம். இத்திரைப்படம், நாசர் மற்றும் பேபி சாராவின் நடிப்பில் ஜூன் 2014-ம் ஆண்டு திரைக்கு வந்தது. சிறந்த பின்னனி பாடகி மற்றும் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வென்றது இத்திரைப்படம். மேலும் விமர்சன ரீதியாகவும் பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்த ‘நைட் ஷோ’ படத்தை இயக்கியிருக்கும் ஆண்டனி 50-க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் படத் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இயக்குநர்கள் ஷங்கர், A.R.முருகதாஸ், கெளதம் வாசுதேவ் மேனன், விஜய், லிங்குசாமி மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோரிடம் தொடர்ந்து படத் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்தப் படத்தில் ஆட்டோ ஓட்டுனரான சூரி என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கும் நடிகர் வருண், பாரம்பரியமிக்க கலைக் குடும்பத்தில் பிறந்தவர். முன்னாள் தமிழ் திரைப்பட நடிகர் ஐசரிவேலனின் பேரன்தான் இவர். சிறு வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வமும், பற்றும் கொண்டிருந்த வருண், தனது முதல் படத்திலேயே, தன் நடிப்பாற்றலை திறம்பட வெளிபடுத்தியுள்ளார்.
இந்த ‘நைட் ஷோ’ படத்தின் கதை மிக மிக வித்தியாசமான, அதே சமயம் நமக்கு மிகவும் நெருக்கமான கதையுமாகும்.
சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருக்கும் சத்யராஜ், தன் சொந்த ஊரான சென்னைக்கு விடுமுறையில் வருகிறார். தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் தனக்கு சொந்தமான கடைகளில் ஷட்டர் மூடிய ஒரு கடையை தவிர, மற்ற அனைத்து கடைகளையும் வாடகைக்குவிட்டிருக்கிறார் சத்யராஜ்.
விடுமுறையில் வந்திருக்கும் சத்யராஜ் தன் நண்பர்களுடன், தினமும் இரவில் அந்த ஷட்டர் மூடிய கடையில் மது அருந்துவதை பழக்கமாக வைத்திருக்கிறார். ஒரு நாள் சத்யராஜின் நண்பனான ஆட்டோ டிரைவர் வருண், அந்தப் பகுதியில் பாலியல் தொழில் செய்யும் அனுமோலை சத்யராஜிடம் அழைத்து வருகிறான். அவர்கள் இருவரும் அன்றைய இரவை அங்கேயே கழிக்கட்டுமே என்றெண்ணி ஒரு பாதுகாப்புக்காக கடையின் ஷட்டரை வெளிப்புறமாக மூடிவிட்டுச் செல்கிறான்.
அதிகாலையில் வந்து திறந்து விடுகிறேன் என்று சொன்ன வருணால் மறுநாள் காலையில் சொன்ன நேரத்துக்கு வர முடியவில்லை. வருண் வராததால், சத்யராஜும், அனுமோலும் மூடப்பட்ட அந்தக் கடையில் மேலும் இரண்டு நாட்களை கழிக்க நேரிடுகிறது. இந்த சம்பவத்தால் தனக்கிருக்கும் நல்ல பெயரையும், குடும்ப பெருமையையும் இழந்துவிட நேரிடுமோ என்று சத்யராஜ் அச்சம் கொள்கிறார்.
அதே இடத்திற்கு எதிர்பாரதவிதமாக திரைப்பட இயக்குநரான யூகிசேதுவும் வருகிறார். தனது திரைப்பட கதை ஸ்கிரிப்ட் புத்தகத்தை அங்கு தொலைத்துவிட்டதாகச் சொல்லி அடைக்கப்பட்டிருக்கும் கடையைத் திறக்கச் சொல்கிறார். கடையின் ஷட்டர் திறக்கப்பட்டால் சத்யராஜின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறும். ஆனால், அதே சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் யூகிசேதுவின் வாழ்க்கையோ சந்தோஷமாய் மாற நேரிடும். இறுதியாக கடையின் ஷட்டர் திறக்கப்பட்டதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
இந்த ‘நைட் ஷோ’ திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகவுள்ளது.