full screen background image

ரஜினி தமிழ்நாட்டிற்குள் முதன்முதலாக கால் வைத்த கதை..!

ரஜினி தமிழ்நாட்டிற்குள் முதன்முதலாக கால் வைத்த கதை..!

‘லைகா புரொடெக்சன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று மாலை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் ‘லைகா’ நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை நிவேதா தாமஸ், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், கவிஞர் விவேக், இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் விவேக், யோகிபாபு மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது முதன்முதலாக தமிழ்நாட்டிற்கு அவர் வந்தக் கதையைச் சொன்னார்.

அது இங்கே :

“இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத இரண்டு விஷயங்களை இந்த விழாவில் சொல்கிறேன். முதல் விஷயம் நான் சென்னைக்கு வந்ததை பற்றி..

நான் பெங்களூரில் கன்னடா மீடியத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நல்ல மாணவனாக, நன்றாக படிக்கும் மாணவனாக இருந்தேன். ஆனால் என்னை திடீரென பத்தாம் வகுப்பில் ஆங்கில மீடியம் பள்ளியில் சேர்த்து விட்டார்கள். அதனால் நான் கொஞ்சம் திணறிப் போய் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தேன். அதன் பின் அடுத்த வருடம் மீண்டும் தேர்வு எழுதி, நான் பத்தாம் வகுப்பு பாஸ் ஆனேன். 

அதன் பின்னர் நான் எனது அண்ணன்களிடம், ‘என்னை ஏதாவது வேலையில் சேர்த்து விடுங்கள். எனக்கு படிப்பு எல்லாம் சரியாக வராது’ என்று சொன்னேன். ஆனால் எனது அண்ணனோ, ‘இல்லை… நீ கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும். நம் வீட்டில் வேறு யாரும் படிக்கவில்லை. அதனால் நீ ஒரு டாக்டர் அல்லது ஐ.பி.எஸ். போன்ற பெரிய படிப்பை படிக்க வேண்டும்’ என்று முடிவு செய்து என்னுடைய விருப்பத்திற்கு மாறாக என்னை பெரிய பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் சேர்த்து விட்டனர்.

darbar-audio-function-stills-43

அந்தப் பள்ளியில் படிக்கும்போது எனக்கு சுத்தமாக படிப்பில் நாட்டமே இல்லை. பணக்கார பசங்களுடன் சேர்ந்து கொண்டு ஊரைச் சுற்றுவது, திரைப்படங்கள் பார்ப்பது என்று நான் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது தேர்வு வந்தது. தேர்வுக் கட்டணமாக 170 ரூபாயை எனது சகோதரர் மிகவும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி என்னிடம் கொடுத்துக் கட்ட சொன்னார்.

அந்தப் பணத்தை கட்டி தேர்வு எழுதினால் நிச்சயம் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்று எனக்கு நன்றாக தெரியும். அதனால் நான் ஒரு முடிவு செய்தேன்.

அன்று இரவு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூர் ரயில் நிலையம் வந்தேன். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ரயில் எங்கே செல்கிறது என்று கேட்டேன்.. ‘அது தமிழ்நாட்டுக்கு… மெட்ராஸ் போகுது’ என்றார்கள். உடனே நான் அந்த ரயிலில் டிக்கெட் எடுத்து ஏறி படுத்து தூங்கிவிட்டேன்.

காலையில் விழித்து பார்க்கும்போது நான் இந்தச் சென்னையில் இருந்தேன். சென்னை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி நான் வெளியே செல்ல முயன்றேன். அப்போது டிக்கெட் கலெக்டர் என்னிடம் டிக்கெட் கேட்டார்.

அப்போ டிக்கெட் என்னிடம் இல்லை. எங்கயோ தொலைச்சிட்டேன். ‘டிக்கெட்டை தொலைத்து விட்டேன். ஆனால் நான் கண்டிப்பாக டிக்கெட் எடுத்தேன்’ என்று டிக்கெட் கலெக்டரிடம் கூறினேன். அவர் என்னை ஒரு ஓரமாக நிற்க வைத்துவிட்டு மற்ற பயணிகள் அனைவரும் சென்ற பிறகு என்னிடம் திரும்பவும் விசாரித்தார். ‘நீ டிக்கெட் வாங்கவே இல்லை; பொய் சொல்கிறாய்’ என்றார் அவர்.

darbar-audio-function-stills-15

அதற்கு நான் உறுதியாக ’நான் பொய் சொல்லவில்லை; டிக்கெட் வாங்கினேன் ஆனால் தொலைந்துவிட்டது’ என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொள்ளாமல் ‘அபராதம் கட்டினால்தான் உன்னை விடுவேன்’ என்றார்.

அப்போது அங்கு வந்த கூலித் தொழிலாளிகள் டிக்கெட் கலெக்டரிடம் ’அந்த பையனின் முகத்தை பாருங்கள்.. அவன் பொய் சொல்றவன் மாதிரியா இருக்கான்.. அவனை அபராதம் கட்ட சொல்கிறீர்களே. இது நியாயமா…?’ என்று கேட்டு அவர்கள் தங்களிடம் இருந்த காசை எடுத்து எனக்காக அந்த அபராதத் தொகையைக் கட்டினார்கள். அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன். இதுதான் எனது ஊர் என்று..!!!

இப்படி முதன்முதலாக நான் தமிழகம் வந்தபோது டிக்கெட் கலெக்டரும், ரயில்வே ஸ்டேஷன் கூலி தொழிலாளிகளும் என் போல் நம்பிக்கை வைத்ததுபோல் என் மீது அடுத்ததாக நம்பிக்கை வைத்தவர் இயக்குநர் கே.பாலச்சந்தர் அவர்கள்.

‘ரஜினிகாந்த்’ என்ற பெயரை அவர் தேர்வு செய்து ஒரு மிகச் சிறந்த நடிகருக்கு மட்டுமே இந்த பெயரை வைக்க வேண்டும் என்று நான்கு வருடங்களாக காத்திருந்தார். அவர் கடைசியாக என் மேல் நம்பிக்கை வைத்து அந்த பெயரை எனக்கு வைத்தார். அவர் வைத்த நம்பிக்கை வீணாகவில்லை.

kb-rajini

பாலசந்தர் அவர்களை அடுத்து என்னை ஹீரோவாக்கிய கலைஞானம் அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கை.  கலைஞானம் அவர்களிடம் சென்று ‘ரஜினியை ஹீரோவாக போட வேண்டாம்’ என்று பலரும் கூறினார்கள். ஆனால் அவர் என்மேல் நம்பிக்கை வைத்து ‘பைரவி’ என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கி என்னை ஒரு ஹீரோவாக உருவாக்கினார். அவருடைய நம்பிக்கையும் வீண் போகவில்லை. அந்த படம் ஹிட்டானது.

அதன் பிறகு என் மேல் நம்பிக்கை வைத்து பல தயாரிப்பாளர்கள் படம் எடுத்தார்கள். இதுவரை நான் நடித்த 160 படங்களில் சுமார் 100 தயாரிப்பாளர்களுக்கு மேல் என்னை நம்பி பணம் முதலீடு செய்தார்கள். ரஜினி படத்தில் முதலீடு செய்தால் நஷ்டம் வராது என்று அவர்கள் வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. அதேபோல் நீங்களும் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை என்றுமே வீண் போகாது…” என்றார்.

Our Score