“அட்வான்ஸ் பணம் கேட்டதால் அவமானப்படுத்திய தயாரிப்பாளர்…” – ரஜினி வெளிப்படுத்திய உண்மை..!

“அட்வான்ஸ் பணம் கேட்டதால் அவமானப்படுத்திய தயாரிப்பாளர்…” – ரஜினி வெளிப்படுத்திய உண்மை..!

‘லைகா புரொடெக்சன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியிட்டு விழா, நேற்று மாலை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் ‘லைகா’ நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை நிவேதா தாமஸ், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், கவிஞர் விவேக், இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் விவேக், யோகிபாபு மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது அவரை துவக்கக் காலத்தில் அவமானப்படுத்திய ஒரு தயாரிப்பாளரைப் பற்றிக் கூறினார்.

அது இங்கே :

“பைரவி’ படத்திற்கு பின்னர் நான் ஒரு சில படங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும்போதே என்னை பட்டிதொட்டியெங்கும் கொண்டு போய்ச் சேர்த்த ஒரு படம் ‘16 வயதினிலே’தான். அந்த படத்தில் நான் நடித்த ‘பரட்டை’ என்ற கேரக்டர், எனக்கு பல கோடி ரசிகர்களை பெற்றுத் தந்தது.

‘16 வயதினிலே’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு மிகப் பெரிய தயாரிப்பாளர் என்னை அணுகி, தான் ஒரு படத்தை தயாரித்து கொண்டிருப்பதாகவும் அந்த படத்தில் ஒரு மிகப் பெரிய ஹீரோ நடித்துக் கொண்டிருப்பதாகவும், ‘அந்த படத்தில் உங்களுக்கு ஒரு முக்கிய கேரக்டர்’ என்றும், ‘அந்த கேரக்டரில் நீங்கள் நடிக்க வேண்டும்’ என்றும் கூறினார்.

darbar-audio-function-stills-09

நானும் அதற்கு ஒப்புக்கொண்டு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கேட்டேன். அவர் ஆறாராயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டார். அதன் பிறகு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டபோது ‘நீங்கள் படப்பிடிப்புக்கு வரும்போது ஆயிரம் ரூபாய் தருகிறேன்..’ என்று கூறினார்.

மறுநாள் அந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகி என்னைப் பார்க்க வந்தார். அவரிடத்திலும் ஆயிரம் ரூபாயை கேட்டேன். அவரும் கொண்டு வரவில்லை. ஆனால் டிரெஸ் தைக்கணும் என்று சொல்லி அளவு மட்டும் எடுத்துக் கொண்டு சென்றார்கள்.

ஷூட்டிங் துவங்கிய நாளன்று காலையில் காருக்காகக் காத்திருந்தேன். 9 மணிக்குத்தான் கார் வந்தது. அதில் ஏறி ஏவி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்றேன். அங்கே நான் போய் இறங்கியவுடன் ‘ஹீரோவே 7 மணிக்கு வந்துட்டாரு. நீங்க 9 மணிக்கு வர்றீங்களே’ன்னு கேட்டாரு தயாரிப்பாளர்.

அப்போதும் அந்தத் தயாரிப்பாளரிடம் அந்த ஆயிரம் ரூபாய் அட்வான்ஸை கேட்டேன். அவர் கொடுக்கவில்லை. ‘ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் நானும் நடிக்க முடியாது’ என்றேன். அந்தத் தயாரிப்பாளர் என் மேல் கோபப்பட்டு, ‘உனக்கு என் படத்தில் வாய்ப்பு இல்லை; வெளியே போ’ என்றார்.

அதனால் நான் மிகுந்த மன வருத்தத்துடன் ஏவி.எம். ஸ்டூடியோவில் இருந்து நடந்தே என் வீட்டுக்கு வந்தேன். வரும வழியெங்கும் ’16 வயதினிலே’ படத்தின் போஸ்டர்களை ஒட்டியிருந்தார்கள். நான் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பலர் என்னைப் பார்த்துவிட்டு.. ’இது எப்படி இருக்கு’ ’இது எப்படி இருக்கு’ என்று கேலி செய்தார்கள். ‘பரட்டை எப்படி இருக்கே..?’ என்று என்னைக் கேட்டார்கள்.

darbar-audio-function-stills-43

ஏற்கனவே மன வெறுப்பில் இருந்த நான், அவர்களது கேள்வியால் மனம் புண்பட்டு அப்பொழுதுதான் ஒரு சபதம் எடுத்தேன். ‘இதே கோடம்பாக்கத்தில் இதே சாலையில், இதே ஏவி.எம். ஸ்டூடியோவில் நான் ஒரு மிகப் பெரிய ஸ்டாராக ஒரு நாள் உள்ளே நுழைவேன்’ என்று எனக்குள் சபதம் எடுத்தேன்.

அதேபோல் இரண்டே வருடங்களில் ஒரு வெளிநாட்டுக் காரை வாங்கி, அந்தக் காருக்கு ஒரு வெளிநாட்டு டிரைவரை வேலைக்கு போட்டு, அதே ஏவி.எம். ஸ்டூடியோவில் நான் அவமானப்பட்ட அதே இடத்தில் காரை நிறுத்திவிட்டு… 555 சிகரெட்டை ஸ்டைலாக ஊதினேன். அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்னை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

அதன் பின்னர் அதே காரில் நான் பாலசந்தர் அவர்களின் அலுவலகத்திற்கு சென்றேன். பாலசந்தரிடம் சென்று நான் என்னுடைய காரைக் காண்பித்து ஆசீர்வதிக்க சொன்னேன். அவர் என்னுடைய காரையும், என் கார் டிரைவரையும் ஒரு மாதிரியாக பார்த்து ஒன்றுமே பேசாமல் சென்று விட்டார்.

அதன் பிறகுதான் எனக்கே நான் செய்த தவறு புரிந்தது. அதன் பின்னர் திரும்பவும் வீட்டிற்கு வந்து நடந்ததை யோசித்து பார்த்தேன்.

அந்த இரண்டு வருடத்தில் நான் பெற்ற வெற்றி என்னுடைய உழைப்பினால் மட்டும் கிடைத்த வெற்றி அல்ல என்பதை புரிந்து கொண்டேன். நம்மால்தான் வெற்றி என்றால் 10%தான். எனக்கு வாய்த்த தயாரிப்பாளர்கள், என்னை இயக்கிய இயக்குநர்கள், எனக்கு கிடைத்த கேரக்டர்கள் மற்றும் அனைத்து நான் நடித்த படங்கள் ரிலீஸான நேரம்… ஆகியவைதான் என்னை அந்த அளவுக்கு பெரிய ஆளாக  ஆக்கியது என்பதைப் புரிந்து கொண்டேன்…” என்றார் ரஜினி.

Our Score