மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் ரஜினி முருகன்..?

மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் ரஜினி முருகன்..?

அதோ வருது.. இதோ வருது.. இந்தா வந்திருச்சுல்ல என்று அலுத்துப் போய் சொல்லும் அளவுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வருகிறது ‘ரஜினி முருகன்’ திரைப்படம்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் எப்போதோ தயாராகிவிட்டாலும் திருப்பதி பிரதர்ஸின் கடன் தொல்லையில் சிக்கி இப்போதுவரையிலும் திரைக்கு வர மறுக்கிறது.

கடந்த வாரம் அனைத்து பிரச்சினைகளும் ஓவர்.. டிசம்பர் 4-ம் தேதி 'ரஜினி முருகன்' ரிலீஸ் உறுதி என்றார்கள். வந்துவிடும் என்றே சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.  ஆனால் அதற்கு முன்பாகவே மழை கொட்டித் தீர்த்துவிட்டது.

இந்த மழையில் மக்கள் அடித்துப் பிடித்து படம் பார்க்க தியேட்டருக்கு ஓடி வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதால் படத்தை மீண்டும் தள்ளி வைப்பதாக அறிவித்தார் தயாரிப்பாளர் லிங்குசாமி.

படத்தின் தள்ளி வைப்புக்கு மழை மட்டும்தான் காரணமோ என்று நினைத்தால் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால் அதுக்கும் மேல என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

படம் 4-ம் தேதி திரைக்கு வராததற்கு மழைதான் உண்மையான காரணம் என்றால் அடுத்த வாரமான 11-ம் தேதி திரைக்கு வந்திருக்கலாம்.. அல்லது 18-ல் கொண்டு வந்திருக்கலாம். 24-ல்கூட வரலாம்..

ஆனால் இதெல்லாம் இல்லாமல் இப்போது 'ரஜினி முருகன்' படம் ஜனவரியையும் தாண்டி பிப்ரவரி ரிலீஸ் என்று பேச்சு அடிபடும்போது, கடன் பிரச்சினை இன்னமும் தீரவில்லையோ என்கிற சந்தேகமும் எழுகிறது.

பாவம் சிவகார்த்திகேயன்.. ஒரு படத்திற்கு 50 கோடிகள் பிஸினஸ் உள்ள நடிகரான சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் சம்பளம் வாங்காமலேயே ப்ரீயாக நடித்துக் கொடுத்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தன் படம் ரிலீஸாக வேண்டுமே என்பதற்காக தனக்குக் கொடுத்த 1 கோடி ரூபாய் சம்பளத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டாராம்.. இன்னும் எப்படி இந்தப் பட ரிலீஸிற்கு உதவுவது என்கிற சிந்தினையில் இருக்கிறார் ஹீரோ..!

தயாரிப்பாளர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ யாருக்குத் தெரியும்..?

பேய் மழை தமிழகத்தைப் புரட்டிப் போட்டதில் பல பெரிய படங்களும் வரலாமா? வேண்டாமா? என்கிற தவிப்பில் த்த்தளித்துக் கொண்டிருக்கின்றன.

தனுஷ் நடித்த ‘தங்க மகன்’ முன்பே சொன்னதுபோல 18-ம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ‘அஞ்சல’ படம் 24-ம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. 24-ம் தேதி ரிலீஸாகவிருந்த ‘கெத்து’ படம் ஜனவரிக்கு ஒத்திப் போடப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளரும், ஹீரோவுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆக.. இந்த வருடம் தயாரித்து காத்திருப்பில் இருக்கும் பல பெரிய படங்களும் அடுத்த மாதத் துவக்கத்தில் மல்லுக் கட்டப் போகின்றன.

இந்த வருடம் தயாரிக்கப்பட்ட சின்ன பட்ஜெட் படங்களும், மீடியம் பட்ஜெட் படங்களும் என்னவாகுமோ..?