சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்’ படத்திற்கு எந்தப் படத்திற்கும் கிடைக்காத ஒரு பெருமிதம் கிடைத்திருக்கிறது. இப்படத்தின் பெயரிலேயே, புதிய பிராண்ட் செல்போன் வெளியிடப்பட்டுள்ளது.
carbonn என்ற செல்போன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த கோச்சடையான் செல்போனின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. கோச்சடையான் படத்தின் இயக்குநரும், சூப்பர் ஸ்டாரின் மகளுமான சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொண்டு செல்போனை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “கோச்சடையான் படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு மிகப் பெரிய பட்ஜெட் படம்.. அதற்கேற்றாற்போல படத்தின் தரமும் உயரமாகத்தான் இருக்கும்..
படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 9-ம் தேதி நடக்கவுள்ளது. படம் வெளியாகும் தேதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஆடியோ ரிலீஸுக்கு பிறகே அது முடிவாகும்..
என்னோட அப்பா இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நான் இயக்குநராக இருந்ததினால், படப்பிடிப்பு தளத்தில் அவர் ஒரு நடிகராக மட்டுமே நடந்து கொண்டது என்னை ஆச்சரியப்பட வைத்தது. அதுவுமில்லாமல், ஹீரோயின் தீபிகாபடுகோனேயுடன் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்கும்போதுதான் கொஞ்சம் சங்கடப்பட்டார்.
இப்படத்தில் மறைந்த நடிகர் நாகேஷை நவீன முறையில், அனிமேஷனில் நடிக்க வைத்திருக்கிறோம். இது கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்னு உறுதியாக நம்புகிறேன்..” என்றார்.
வரும் மார்ச்-9-ம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெறவுள்ள ‘கோச்சடையான்’ இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்ள இருக்கிறார். “இதே விழாவில் இந்த கோச்சடையான் செல்போனை ரஜினியே வெளியிடுவார்..” என்றும் சவுந்தர்யா தெரிவித்தார்.