full screen background image

ரஜினி-அழகிரி சந்திப்புக்கு காரணம் என்ன..?

ரஜினி-அழகிரி சந்திப்புக்கு காரணம் என்ன..?

அரசியல் ஆட்டமாகவே இருந்தாலும் அதில் தன்னுடைய நிழல் படாமல் இருக்க முடியாது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்திருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி..

இன்று காலை அவரை தன்னுடைய மகனும், தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரியுடன் சந்தித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி.

தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மாநிலம்தோறும் சுற்றுப்பயணம் செய்து கட்சியில் இருக்கும் தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்தித்து வரும் அழகிரி, திடீரென்று ரஜினியைச் சந்திக்கக் காரணம் என்ன என்று அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம்.

நேற்றுத்தான் அழகிரி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசியுள்ளார். பேசிய கையோடு மறுநாள் ரஜினியை சந்தித்திருக்கிறார்.. “காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல் போனதால் வருத்தம் தெரிவிக்க பிரதமரைச் சந்தித்தேன்..” என்றார். ஆனால் ரஜினியை “மன அமைதிக்காக சந்தித்தேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

இப்போது அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் உடனடியாக அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் விருப்பம் அதன் தலைவருக்கும், இளைய தலைவருக்கும் இல்லையாம். இதனை உணர்ந்து கொண்டுதான் தனிக்கட்சி என்ற பூதத்தைக் காட்டி அவர்களை பயமுறுத்தி வருகிறார் அழகிரி.

ஏற்கெனவே வைகோ பிரிந்து சென்றதால் தென் மாவட்டங்களில் தி.மு.க.வுக்கு சிறிதளவு சேதாரம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அழகிரி தனிக்கட்சி கண்டால் பெரிய அளவுக்கு கட்சியில் சேதம் ஏற்படும் என்று கட்சித் தலைமை பயப்படும் என்று கணக்கு போடுகிறார் அழகிரி. அதனால்தான் இந்த பயமுறுத்தல் என்கிறார்கள்..

இதற்கு பிரதமர் ஓகே.. ரஜினி எதற்கு..? இதுதான் உண்மையான மிரட்டல் என்கிறார்கள் அரசியல் பத்திரிகையாளர்கள். மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் ரஜினி ரசிகர் மன்றங்களுக்கு ஒரு காலத்தில் மெயின் ஸ்பான்ஸரே அழகிரிதான். இள வயசுப் பசங்களைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே ரசிகர்களை வளைத்துப் பிடித்து வைத்திருந்தார் அழகிரி. இப்போதும் அவர்களுடன் அவருக்குத் தொடர்பு உண்டு. இ்ப்போது ஒருவேளை தனிக்கட்சி காணும் வாய்ப்பு வந்தால், அவர்களது தயவு வேண்டுமே என்பதற்காக இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம் என்கிறார்கள்.

ஏனெனில் ரஜினியின் ரசிகர்கள் மட்டுமே எப்போதும் தேர்தலில் நிற்க தயாராகவே இருப்பவர்கள். தேர்தல் வேலைகளுக்கு இப்போதும் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள்.. அவர்களை பரிந்துணர்வோடு அணுகினால், நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று அழகிரி நினைத்திருக்கலாம்.

“அரசியல் பேசவில்லை.. தயாநிதியின் அடுத்த படம் சம்பந்தமா பேச வந்தேன்..” என்றும் சொல்லியிருக்கிறார் அழகிரி. சமீப காலமாக ஒரு வதந்தி பரவிக் கொண்டிருந்தது. தயாநிதியின் திருமணம் மதுரையில் நடந்தபோது ரஜினி நேரில் சென்று திருமணத்தில் கலந்து கொண்டார்.  அந்த உரிமை இருப்பதால், தயாநிதி அடுத்து ரஜினியிடம் கால்ஷீட் கேட்கப் போகிறார் என்று சொன்னார்கள்.

சமீபத்திய அழகிரியின் கட்சி நீக்கம் சம்பந்தமான பிரச்சினையில் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கும், தயாநிதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேச்சுவார்த்தை முறிந்து போனது. அதுவரையிலும் அண்ணன், தம்பிகள் டிவிட்டரில் அனைத்து விஷயங்களையும் பரிமாறிக் கொண்டிருந்தவர்கள்.. ஒரே நாளில் பரஸ்பரம் பாலோயர்ஸ் லிஸ்ட்டில் இருந்து விலகிக் கொண்டார்கள்.

இப்போது உதயநிதி ஸ்டாலினையும் தாண்டிய அளவுக்கு தனது சினிமா பட தொழிலை விரிவுபடுத்த தயாநிதி எண்ணியுள்ளார். தமிழ்ச் சினிமாவில் மெகா தயாரிப்பாளர் என்று பெயரெடுக்க இப்போதைக்கு ஒரே வழி, ரஜினியை வைத்து படமெடுப்பதுதான். அதை மனதில் வைத்துதான் தயாநிதி இன்றைய சந்திப்புக்கு தன் அப்பாவிடம் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்..

ஒருவேளை அதுதான் இப்போது நடந்திருக்கலாம் என்றால் அது நடக்க வாய்ப்பில்லைதான்.. ரஜினி இதற்கு ஒத்துக் கொள்ளமாட்டார் என்பது சினிமாவுலகில் அனைவருக்குமே தெரியும். கலைஞரின் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கு தன்னை வைத்து நாடகம் ஆடுவதை அவர் விரும்ப மாட்டார். அதிலும் கருணாநிதி மீது அவர் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்.

ஆக.. என்ன பதில் வந்தாலும் பரவாயில்லை.. அரசியல், சினிமா இரண்டுக்குமாக ஒரு வெளிச்சத்தை வீசிவிட்டுப் போகலாமே என்ற அழகிரியின் எ்ண்ணத்திற்காக இன்றைய சந்திப்பு நடந்திருக்கிறது எனலாம்.

இதெல்லாம் ரஜினியின் வாழ்க்கையில் மிக சகஜம்தான்..! 2006 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவராக ஆன நேரத்தில் ‘சிவாஜி’ படத்தை ஏவி.எம். பிரிவியூ தியேட்டருக்கே தனது தோழியுடன் வந்து படம் பார்த்துவிட்டு ‘வெரி நைஸ்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார் ஜெயலலிதா. அது இயல்பாக ஜெயலலிதா செய்ய நினைக்காதது. ஆனால் செய்தார்.. காரணம் அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர். அவருக்கு ரஜினி ரசிகர்கள் அப்போது தேவையாக இருந்தனர்…!

இப்போதும் அதுதான்.. யானைக்கு அதன் பலம் தெரியாது என்பார்கள். ஆனால் ரஜினிக்கு தன் பலம் தெரியும். எதனால் இந்தப் பலம் கிடைத்திருக்கிறது எ்ன்பதும் தெரியும். அதனால்தான் அமைதி காக்கிறார்..!

Our Score