full screen background image

ஆயிரத்தில் ஒருவன் போஸ்டர்களுக்குக்கூட தடையா..?

ஆயிரத்தில் ஒருவன் போஸ்டர்களுக்குக்கூட தடையா..?

டி.என்.சேஷன் ஆரம்பித்துவைத்த வானாளாவிய அதிகாரத்தினால் தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை கண்டு ரொம்பவே பயப்பட வேண்டியிருக்கிறது. இதுவரையில் கட்சிகளின் சுவரொட்டிகளை மட்டுமே தடை செய்து வந்த தேர்தல் ஆணையம், இப்போது சினிமா பக்கமும் கையை நீட்டியுள்ளது.

2014, பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் எம்.ஜி.ஆர்.-ஜெயல்லிதா நடிப்பில் 1965-ம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் டிஜிட்டலில் அழகுபடுத்தப்பட்டு இன்றைக்கு ரிலீஸாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதலே திரையிட தயாரான நிலையில் இருந்தும் சரியான சமயம் கிடைக்காமல் இன்றைக்குத்தான் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

இதற்காக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் இப்படத்தினை வரவேற்கும்விதமாக இப்படம் ரிலீஸாகும் ஊர்களிலெல்லாம் பெரிய சைஸ் போஸ்டர்களை ஒட்டி வரவேற்றிருக்கிறார்கள். இப்படி எம்.ஜி.ஆரும், ஜெயல்லிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற சுவரொட்டிகள் தேர்தலுக்கும் பயன்படுகிறதே என்கிற கவலையை எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

பத்திரிகையாளர்கள் இது குறித்து மாநில தலைமைத் தேர்தல் ஆணையரிடம் கேட்டதற்கு, “படத்தை வெளியிடுவதை நாங்கள் தடை செய்ய முடியாது. ஆனால், தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் ஒரு கட்சித் தலைவரின் போட்டோவை போஸ்டர்களாக ஒட்டுவதை மட்டுமே எங்களால் தடை செய்ய முடியும்…” எனத் தெரிவித்துள்ளார். “வேண்டுமானால் இந்தப் படத்தின் போஸ்டர்களை தியேட்டர் வளாகத்தின் உட்பகுதியில் பேனர் வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் முடியும்வரை வெளியில் போஸ்டர்கள் ஒட்டாதீர்கள்..” என்று அட்வைஸ் செய்துள்ளார்.

ஆனால் இதையெல்லாம் கேட்கின்ற நிலைமையிலா இருக்கிறது தமிழ்ச் சினிமாவின் நிலைமை..? இந்தப் படம் தமிழகமெங்கும் 110 தியேட்டர்களில்தான் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதிகம் போனால் நகரங்களில் ஏழு நாட்களும், சின்ன நகரங்களில் 2 வாரங்களும் ஓட வாய்ப்புண்டு. தேர்தல் காலமோ அடுத்த மாத மே மாத இறுதிவரையிலும் உண்டு.. இதனால் என்ன பாதிப்பு வந்துவிட போகிறது..? சினிமாவை சினிமாவாக பார்க்கிறவர்கள் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள்..

ஓட்டெடுப்பு வாரத்தில் படம் ரிலீஸானால்கூட இதன் பாதிப்பைச் சொல்ல்லாம்.. இப்போது எதற்கு.. அதுவும் 10 நாட்களில் தூக்கப்படப் போகின்ற படத்திற்கு..? அதிகாரத்தைக் காட்டுவதற்கு வேறு இடம் கிடைக்கலீங்களா துரைசாமிகளா..?

Our Score