ராஜா ரங்குஸ்கி – சினிமா விமர்சனம்

ராஜா ரங்குஸ்கி – சினிமா விமர்சனம்

வாசன் புரொடெக்சன்ஸ் மற்றும பர்மா டாக்கீஸ் நிறுவனத்தினர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தில் நாயகனாக மெட்ரோ சிரிஷும், நாயகியாக சாந்தினியும் நடித்துள்ளனர். மேலும் கல்லூரி வினோத், ஜெயக்குமார், அனுபமா குமார், விஜய் சத்யா, மது ரகுராம், வாசன் சக்திவாசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – தரணிதரன், ஒளிப்பதிவு – யுவா, இசை – யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – ஷாபிக் முகம்மது அலி, கலை இயக்கம் – டி.என்.கபிலன், சண்டை இயக்கம் – விமல் ராம்போ, நடன இயக்கம் – ராபர்ட், பூபதி, பாடல்கள் – கபிலன், மோகன்ராஜன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா.

சென்னை காவல்துறையில் சாதாரண கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார் ஹீரோ சிரிஷ். ரங்குஸ்கி என்னும் சாந்தினியை பார்த்தவுடன் லவ்வாகிறார். ரங்குஸ்கி தான் ஒரு எழுத்தாளர் என்றும், கிரைம் கதைகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவள் என்றும் சொல்ல.. சிரிஷ் காவல்துறையில் நடைபெற்ற சில கிரைம் கதைகளை ரங்குஸ்கியிடம் சொல்லி அவளைக் கவர நினைக்கிறார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

அடையாறு வில்லா பகுதியில் தனித்து இருக்கும் ஒரு குடியிருப்பில் ரங்குஸ்கி தனியே குடியிருக்கிறாள். அதே குடியிருப்பில் மரியா அனுபமா குமாரும் குடியிருக்கிறார். அவரது வீட்டில் ரவுண்ட்ஸ் அப் நோட் இருப்பதால் கையெழுத்திட வேண்டி அங்கே தினமும் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது சிரிஷுக்கு.

ரங்குஸ்கியை காதலிக்க வைக்க அனுபமா குமார் ஒரு ஐடியா சொல்லிக் கொடுக்கிறார். “செய்யாதே என்றால் செய்வாள்.. நிறுத்து என்றால் நிறுத்தமாட்டாள் என்கிற குணமுடையவள் ரங்குஸ்கி என்பதால் நிச்சயமாக உன்னை அவள் காதலிக்கத் துவங்குவாள்…” என்கிறார் அனுபமா குமார்.

இதன்படி யாரோ ஒருவரை போல போனில் ரங்குஸ்கியிடம் பேசும் சிரிஷ், “நீ அந்தப் போலீஸ்காரனோட சுத்துறதை இத்தோட நிறுத்திக்க…” என்று எச்சரிக்கிறார். ஆனால் ரங்குஸ்கி இதனை ஒரு பொருட்டாகவே கருதாமல் சிரிஷுடன் நெருங்குகிறாள். ஒரு கட்டத்தில் சிரிஷை காதலிக்கவும் செய்கிறாள்.

சிரிஷின் காதல் ஓகே ஆன நாளில் திடீரென்று வேறொரு போனில் இருந்து ஒரு அழைப்பு ரங்குஸ்கிக்கு வருகிறது. அவளது காதல் தவறானது என்று எச்சரிக்கிறது. இதே போன் குரல்.. சிரிஷின் வாய்ஸிலேயே சிரிஷிடமே பேசி அவனை மிரட்டுகிறது. சிரிஷ் குழம்பிப் போகிறார்.

இந்த ஒரு குழப்பமான காலத்தில் அனுபமா குமார் திடீரென்று கொல்லப்படுகிறார். இந்த வழக்கில் லோக்கல் போலீஸ் சரியாக புலனாய்வு செய்யாமல் போக.. வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு போகிறது.

சி.பி.சி.ஐ.டி.யில் இருந்து வரும் இன்ஸ்பெக்டர் கே.கே. இந்த வழக்கை விசாரிக்க வருகிறார். அவர் வழக்கினை விசாரிக்கும்போது சந்தேகப் பார்வை சிரிஷ் மீது விழுகிறது. சிரிஷ்தான் இதனை செய்திருப்பார் என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே கிடைக்கின்றன.

அனைவரும் தன்னைக் குறி வைப்பதை உணரும் சிரிஷ் போலீஸிருந்து தப்பிக்கிறார். தானே தனியாய் போராடி அந்தக் கொலையைச் செய்தவனைக் கண்டறிய முனைகிறார். ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் கொலைகளிலும் சிரிஷ் சம்பந்தப்பட.. போலீஸ் உறுதியாக சிரிஷ்தான் தொடர் கொலையாளி என்று முடிவு செய்கிறது.

சிரிஷ் ஓடத் துவங்க.. போலீஸ் விரட்டத் துவங்க.. இந்த ஓட்டம் எங்கே, எப்படி நிற்கிறது.. உண்மையான குற்றவாளி யார் என்பதுதான் இத்திரைப்படத்தின் சுவையான திரைக்கதை.

கிரைம், திரில்லர் என்கிற கதையின் ஊடே கதைப் பரப்பில் புதுமையாக பழமையான பொருட்கள் மீதான சந்தை மதிப்பு, தேடுதல் வேட்டை, அந்த வேட்டையைத் தொடர்ந்து நடக்கும் படுகொலைகள் என்று சமூகத்தில் பணத்தினால் நடைபெறும் அவலங்களைத் தொட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

யார் கொலையாளி என்கிற சஸ்பென்ஸை கடைசிவரையிலும் மெயின்டெயின் செய்து குட்டை உடைக்கும் இடம் எதிர்பாராதது என்றாலும், அதனைப் படமாக்கியவிதம் மிக சாதாரணமாக இருப்பதால் பார்வையாளர்களின் மனதில் அது பெரிய இம்பாக்ட்டை கொடுக்கவில்லை என்பது மிகப் பெரிய குறை.

அந்தக் காட்சியை வேறு மாதிரி ஷூட் செய்திருக்கலாம். மேரி-மரியா ஆள் மாறாட்டம் கதையும் சுவாரஸ்யமானது. இப்படி அடிக்கடி நிகழும் டிவிஸ்ட்டுகளே படத்தை கடைசிவரையிலும் பரபரப்பாகவே பார்க்க வைக்கிறது.

நாயகன் சிரிஷால் இத்தனை பெரிய வெயிட்டான கேரக்டரை செய்ய முடியாமல் போனது வருத்தத்திற்குரியது. தேவைப்படும் இடத்தில் அவருடைய பெர்பார்மென்ஸ் அந்தக் கேரக்டருக்கு உரித்தானதாக இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானது. இன்னும் நிறையவே அவரை நடிக்க வைத்திருக்கலாம்.

சாந்தினிதான் படத்தின் பல இடங்களில் தொய்வு ஏற்படாமல் தாங்கிப் பிடித்திருக்கிறார். அவர் மீதே சந்தேகம் வரும் அளவுக்கான காட்சிகளில்கூட அதை துளிகூட தன் மீது விழுகாத வண்ணம் தனது நடிப்பால் திசை திருப்பியிருக்கிறார். சின்னதான அழகுடன், நிறைய நடிப்புடனும் வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறார் சாந்தினி.

படத்தில் ஒரு திருப்பு முனையைத் தரும் கேரக்டரை நிறைவாகவே செய்திருக்கிறார் அனுபமா குமார். மரியா கேரக்டரில் அவரது சிற்சில ஆக்ஷன்கள் அழகு. கல்லூரி வினோத் படம் நெடுகிலும் சில காமெடிக்கும், சந்தேகப்படும் திரைக்கதைக்கும் பெரிதும் உதவியிருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜெயக்குமார் ஏதாவது புதுமையாக செய்து குற்றவாளியைத் தேடுவார் என்று பார்த்தால் அதுவும் வழமையான தேடுதல் வேட்டையாக இருப்பது கொஞ்சம் புஸ்ஸாகிவிட்டது. ஆனாலும் அந்த இன்ஸ்பெக்டர் வேடத்திற்கு சற்று கூடுதல் கவனத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதேபோல் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் லோக்கல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான விஜய் சத்யாவும் ஒரு மாறுதலான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.

படம் தேடுதல் வேட்டையுடன் பாயந்தோடும் திரைப்படமாக இருந்தபோதிலும் படத்தில் இரண்டு முக்கியமான காட்சியமைப்புகளில் இயக்கம் சாதாரணமாக இருந்ததினால் படத்தின் முடிவு பார்வையாளனுக்குள் அமரவில்லை. மேரி, மரியா இரண்டு கேரக்டர்கள் பற்றி சிரிஷ் மரியாவிடம் சொல்லுமிடமும், மரியா ரங்குஸ்கி பற்றிய உண்மையை சிரிஷிடம் சொல்லுமிடத்திலும் ஒரு பெரிய இயக்குதல் இல்லாமல் சாதாரணமாகவே போய்விட்டதால் படத்தின் முடிவு சப்பென்றாகிவிட்டது.

கூடுதலாக ‘B12 Bible’ பற்றிய புதிய தகவலை இப்படம் நமக்குச் சொல்லியிருக்கிறது. உலகத்தில் இருக்கும் பழமையான பைபிள்களில் ஒன்றான இது இன்றைக்கும் அதிக விலை போகும் அளவுக்கான மதிப்புடையது என்பதால் இதனைத் தேடும் பணியில் இருக்கும் குற்றத்தை இந்தப் படத்தின் கதைக் கருவாக்கியிருக்கிறார் இயக்குநர். ஒரு தெரியாத விஷயத்தை தெரிந்து கொண்ட திருப்தியும், இப்படத்தின் மூலம் கிடைக்கிறது.

நாயகி சாந்தினி தாங்கியிருக்கும் பெயரான ‘ரங்குஸ்கி’ என்பது எழுத்தாளர் சுஜாதாவின் புனைப் பெயர். அவருடைய ஒரு புத்தகத்தில் ஒரு கேரக்டருக்கு வைத்திருந்த பெயர். தன் வீட்டில் தன்னை இந்தப் பெயரில்தான் அனைவரும் அழைப்பார்கள் என்றும் சுஜாதா சொல்லியிருந்தார். ‘ஈ’ படத்தில் விரட்டி விரட்டி தொல்லை செய்யும் அந்த ஈ-யின் பெயரும் ‘ரங்குஸ்கி’தான்.

இப்படியொரு பெயரை ச்சும்மா காரணமே இல்லாமல் நாயகிக்கு வைக்கவில்லை. காரணத்தோடுதான் வைத்திருக்கிறார் இயக்குநர். அது என்ன என்பதை படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வது நலம்.

யுவாவின் வண்ணமயமான ஒளிப்பதிவில் படம் நெடுகிலும் இரவு நேரக் காட்சிகளில் பயமுறுத்தலும், காட்சிப்படுத்துதலும் அருமையாக வந்திருக்கிறது. மிகவும் அதிகமான லைட்டிங்கை வைக்காமல் குறைவான ஒளியிலேயே படம் முழுவதையும் முடித்திருக்கிறார். இந்தப் படத்தின் கதைத் தன்மைக்கேற்ற கலர் டோனை படம் முழுவதிலும் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவா. பாராட்டுக்கள்.

படத்திற்கு இன்னொரு பக்கம் உயிரூட்டியிருக்கிறது யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை. வில்லாவில் இருந்து சிரிஷ் தப்பித்து ஓடும் காட்சியில் ஒரு நொடிகூட கண்களை அகலவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலமாக இசை அமைந்துவிட்டது.

திரைக்கதையை கச்சிதமாக அமைத்திருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள். வரிசைக்கிரமமாக சம்பவங்களைத் தொகுத்து ஒரு சிறிய இடறல்கூட இல்லாமல் திரைக்கதையை அமைத்து படமாக்கியிருக்கிறார். இந்த வரிசையை கலைக்காமல் அப்படியே படத் தொகுப்பு செய்திருக்கும் படத் தொகுப்பாளர் ஷாபிக் முகம்மது அலிக்கும் நமது பாராட்டுக்கள்..!

இன்னும் கொஞ்சம் முனைப்புடனும், இயக்குதல் திறனுடனும் இப்படத்தை உருவாக்கியிருந்தால் இந்தப் படம் நிச்சயம் அதீதமாக பேசப்பட்டிருக்கும்..! எப்படியிருந்தாலும் ஒரு திரில்லிங் அனுபவத்தை உணரும்வகையிலான திரைப்படமாகத்தான் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..!