‘கருப்பி’யால் கவரப்பட்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்..!

‘கருப்பி’யால் கவரப்பட்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்..!

பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதை சினிமா ரசிகர்களிடமும், மக்களிடமும் கொண்டு சேர்க்க பலவகையான விளம்பர உத்திகளை மேற்கொள்வார்கள். அதில் அந்தந்த படங்களில் நடித்த, நடிகர் நடிகையர் கலந்து கொள்வார்கள். அல்லது நடிகர், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களை வைத்து புதுமையான விளம்பரங்கள் செய்வார்கள். ஆனால் பலவகையான க்யூட்டான செல்லப் பிராணிகளால் வைரலாகிக் கொண்டிருக்கிறது, ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கதிர், ‘கயல்’ ஆனந்தி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

படத்தின் டிரெயிலரை வெளியிட்ட பின்பு படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் படம் இது என்பதால் கூடுதல் கவனமும் கிடைத்திருக்கிறது.

இப்படத்தில் ‘கருப்பி’ என்னும் ஒரு நாயும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த நாயை மையமாக வைத்து ‘கருப்பி’ என்றொரு பாடலும் படத்தில் உண்டு. இந்தப் பாடலை தனி திரையிடலில் பார்த்த திரையுலக பிரபலங்களும், பத்திரிகையாளர்களும் இயக்குநரை இதற்காக மனதாரப் பாராட்டியுள்ளார்கள். அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக மனதை உருக்கும்வகையில் அந்த ‘கருப்பி’ என்னும் பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதையொட்டி ‘பரியேறும் பெருமாள் பெட்’ (#PariyerumPerumalPet) என்ற ஹேஷ்டேக்குடன் உங்கள் வீட்டு செல்லப் பிராணிகளை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றுங்கள் என்று ‘பரியேறும் பெருமாள்’ படக் குழுவினர் அழைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் உள்பட உலகமெங்கிலும் உள்ள பலர் தங்கள் வீட்டு செல்லப் பிராணிகளுடன் புகைப்படம் எடுத்து அந்த செல்லப் பிராணிகளுக்கும் அவர்களுக்கும் உள்ள சுவாரஸ்யமான உறவையும் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கையும் தாண்டிய சுவராஸ்யமான செய்தியாக உலா வந்து கொண்டிருக்கிறது..!

Our Score