‘சூரரைப் போற்று’ படம் அமேஸானில் வெளியாவதற்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு..!

‘சூரரைப் போற்று’ படம் அமேஸானில் வெளியாவதற்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு..!

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பை அடுத்து தமிழ்த் திரைப்பட உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யாவின் இந்த முடிவினை தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஏற்கெனவே ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை ஓடிடியில் கொடுத்தபோதே அடுத்தடுத்த சூர்யா குடும்பத்தின் படங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பினை தர மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் நிலையிலும் சூர்யா தைரியமாக தனது அடுத்த படத்தையும் ஓடிடியில் விற்பனை செய்திருப்பது அவர்களது கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

இந்த நிலைமையில் சூர்யாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருக்கிறார் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநருமான பாரதிராஜா.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

வணக்கம்

அன்பார்ந்த திரைத் துறையினருக்கு..

ஒவ்வொரு கலைஞனும், இயக்குநர்களும்,  தயாரிப்பாளர்களும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச் சென்று பாராட்டுகளைப் பெற தங்களது வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக  உழைக்கிறார்கள்.

ஆனால், சமீபகாலமாக ஒரு திரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிடத் தேவையில்லை. மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். ஒருவரை ஒருவர் குற்றம் சாற்றிக்கொண்டு தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை இழந்ததுதான் மிச்சம்.

எல்லாவற்றிற்கும் நாம்தான் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான். பாதிக்கப்பட்ட தயாரிப்பளர்களுக்கு கிடைத்த மாற்று வழிதான் OTT தளம்.

வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது போன்ற மாற்றுத் தளங்களை தவிர்க்க முடியாது. வேண்டாம் என்றாலும் காலப்போக்கில் நாமும் அந்த இடத்துக்குத் தள்ளப்படுவோம். இதற்கு நாம் கடந்த காலங்களில் Video piracy-க்கு எதிரான போராட்டம், தனியார் தொலைக்காட்சிகளுக்கு எதிரான போராட்டம், கேபிள் Tv-க்கு எதிரான போராட்டம், DTH-க்கு எதிரான போராட்டம்... என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இறுதியில் அவைகள் எல்லாவற்றையும் பின் வாசல் வழியே நாம் வரவேற்றுக் கொண்டதுதான் நிதர்சனம். என் பார்வையில் தியேட்டருக்கு மக்கள் வரத் தயக்கம் காட்டுவதில் முதல் பிரச்சினை தியேட்டரில் டிக்கெட் விலையைவிட கேண்டீனில் விற்கப்படும் Popcorn போன்ற தின்பண்டங்கள் மற்றும் வாகன நிறுத்தக் கட்டணங்கள்தான் அதிகம்.

ஒரு சாமானிய மனிதன் எப்படி ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து படம் பார்க்க முடியும்..?

அதனால்தான் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத் தள அயோக்கியர்களை நோக்கி மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.  இதற்கு நாமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

இந்தக் கொரனா காலக்கட்டத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்  நுட்பக் கலைஞர்கள், பெப்சி தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவருமே கடந்த ஐந்து மாத காலமாக வேலையின்றி எவ்வளவு பொருளாதர நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம் என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

இப்பொழுதுதான் மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்கள்.  தியேட்டர்களை திறக்க தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. எடப்பாடிபழனிச்சாமி அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர் இது குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்துவிட்டு விரைவில் சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிப்பார் என்று நம்புகிறோம்.

ஆனால் அதற்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்நோக்க இருக்கும் சில பிரச்சினைகளை பேசி தீர்ப்பது நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.

குறிப்பாக, மக்கள் நலனில் அக்கறை கொண்டு தியேட்டர்களில் 35 சதவிகிதம் முதல் 50 சதவீதத்திற்குள் சமூக இடைவெளியுடன் மக்களை அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவு இருக்கும் என அறிகிறோம்.

தியேட்டர்களில் 50 சதவீதம் மக்களை அனுமதித்தால்கூட  ஒரு திரைப்படம் தியேட்டரில் எத்தனை வாரங்கள் திரையிடப்படும்..?

ஏற்கனேவே நல்ல திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை, அப்படியே தியேட்டர்கள் கிடைத்தாலும் முதல் இரண்டு வாரத்திலேயே தூக்கிவிடுவார்கள். அதே நிலையில் இன்றைய சூழ்நிலையில் படங்கள் வெளியிடப்பட்டால் தயாரிப்பாளர்கள் மிகவும் நொடித்துப் போவார்கள். குறைந்தது, ஒரு திரைப்படம் வெளியாகி நான்கு வாரங்களாவது தியேட்டர்களில் ஓடியாக வேண்டும்.

பிறகு தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளருக்கும் டிக்கெட் விலையில் உள்ள சதவீதம் இன்றைய சூழ்நிலையில் மாற்றி அமைக்கப்படவேண்டும்.

தயாரிப்பாளர்களின் எங்களது நீண்ட நாள் கோரிக்கையான VPF (virtual print fee)  தொகை திரைப்படம் வெளியிடும் சமயத்தில் பெரும் சுமையாக இருக்கிறது. இதை vpf சேவை வழங்கும் நிறுவனங்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பேசித் தீர்த்துக் கொண்டு எங்களுக்கான சுமையை கருத்தில் கொண்டு  பேசித் தீர்க்க முன் வர வேண்டும்.

தயாரிப்பாளர்களின் மற்றொரு கோரிக்கையான  டிக்கெட் விற்பனையை  தயாரிப்புளார்கள் அறிந்து கொள்ளும் வகையில் தியேட்டர் டிக்கெட் விற்பனையை இணைய தளம் கொண்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.

எடுத்து முடிக்கப்பட்டு திரைக்கு வராமல் பல திரைப்படங்கள் முடக்கப்பட்ட நிலையில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்தால்தான் அடுத்தடுத்து அந்த தயாரிப்பாளர் படம் எடுக்க முடியும் என்பதை நாம் அனைவருமே கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். நாமும் நன்றாக இருப்போம்.

ஆகையால், இந்த நேரத்தில் தமிழ் திரைத்துறை நலிந்துக் கொண்டிருப்பதற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட வேண்டும். அவைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் வாழ வழி செய்யப்பட வேண்டும் என்பதே சரியாக இருக்கும். சிறப்பாகவும் இருக்கும்.

இவ்வளவு பிரச்சினைகள் இப்படி இருக்கும்போது அதைவிடுத்து, பிரச்சினையை வேறு பக்கம் திருப்புவது சரியாக தோன்றவில்லை.

சமீப நாட்களில் OTT-க்கு எதிரான பிரச்சினை திரு.சூர்யாவுக்கு எதிரான தனி நபர் பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக்குரிய விசயமாகும்.

இதற்கு பின்னணியில் உள்ள அரசியலை நானும் அறிவேன். நீங்களும் அறிவீர்கள். திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத் துறையிலே முதலீடு செய்வது  ஒரு சிலரே. அதில் திரு.சூர்யாவும் ஒருவர்.

திரு.சூர்யா மற்றும் அவரைப் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் OTT-யில் வெளியாகக் கூடாது. திரையில்தான் வெளிவர வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் வரவேற்க கூடிய ஒன்றுதான்.

அதே நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் வெளியாகாமல் முடக்கப்பட்டுள்ளன. அவற்றை திரையில் கொண்டு வர முன் வருவீர்களா..? போராடுவீர்களா..? படைப்புகளிலும், தயாரிப்புகளிலும் தொழில் சுதந்திரம் வேண்டும். கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது.

என் நண்பர் திரு.சிவக்குமார் அவர்களின் பிள்ளைகள் வளர்ப்பும், அவர்களது குடும்ப வாழ்வியல் முறையையும் பார்த்து நான் கர்வப்பட்டுள்ளேன். திரு.சூர்யா, திரு.கார்த்தி இருவரும் என் வீட்டு  முற்றத்தில் வளர்ந்தவர்கள். அவர்களின் மனித நேயப் பண்பும், நேர்மையையும், ஒழுக்கத்தையும் நான் நன்கு அறிவேன். இவர்கள் தமிழ் திரையுலகிற்குக் கிடைத்த பொக்கிஷங்கள். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். இவர்களை நினைத்துப் பெருமைப்படுங்கள்.

இவர்களை மட்டுமில்லை. எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள். மனம் வலிக்கிறது. இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம்.

தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால்தான், இதை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வும் செழிக்கும்.

தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே… வாருங்கள்.. பேசித் தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம்.

கொரனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண OTT சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ணதில் திரு.சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கக் கூடியதாகும்.

திரு.G.v.பிரகாஷ்குமார் இசை அமைத்து சுதா கொங்குரா இயக்கத்தில் திரு.சூர்யா மிரட்டியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தின் திரை முன்னோட்டத்தை பார்த்து வியந்தேன்.. இந்தத் திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ‘சூரரைப் போற்று’ம். முத்திரை பதிக்கும் தமிழனைப் போற்றும்.

வாழ்த்துக்கள்

அன்புடன்

பாரதிராஜா.