full screen background image

1 கோடி நிதியுடன் புதிய சமூக நலத் திட்டத்தைத் துவக்குகிறார் இயக்குநர் ராகவா லாரன்ஸ்

1 கோடி நிதியுடன் புதிய சமூக நலத் திட்டத்தைத் துவக்குகிறார் இயக்குநர் ராகவா லாரன்ஸ்

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் வேந்தர் மூவிஸிற்காக இரண்டு புதிய படங்களில் நடித்து, இயக்கவுள்ளார்.

இந்தப் படங்களின் துவக்க விழா நேற்று இரவு 8 மணிக்கு கிரீன்பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவரான பாரிவேந்தர் முதல் படமான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’வை அறிமுகப்படுத்தி வைத்தார். தயாரிப்பாளர் சங்கத் தலைவரான தாணு இரண்டாவது படமான ‘நாகா’வை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதன் பின்பு இந்த இரண்டு படங்கள் பற்றி பேச வந்த இயக்குநர் லாரன்ஸ் யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை சொன்னார்.

அந்த மேடையிலேயே இந்த இரண்டு படங்களுக்காக தனக்கு தரப்பட்ட 1 கோடி ரூபாய் செக்கினை சமூக சேவைகளுக்காக பயன்படுத்தப் போவதாக அறிவித்தார் லாரன்ஸ். இதற்காக ‘கலாமின் காலடிச்சுவட்டில்’ என்கிற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

இது பற்றிய லாரன்ஸின் விரிவான பேச்சு இது :

IMG_1906

“என்னுடைய படங்கள் ரிலீஸாகும் நேரத்தில் நான் தியேட்டர்களுக்கு போய் கார்லேயே உட்கார்ந்து கொண்டு படம் பார்த்துவிட்டு வருபவர்களின் கமெண்ட்டுகளை  காது கொடுத்துக் கேட்பேன்.

அப்படித்தான் ‘காஞ்சனா’ படம் ரிலீஸாகியிருந்த நேரத்தில்.. ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டர் வாசலில் இருட்டில் காரை நிறுத்திவிட்டு அதில் உட்கார்ந்திருந்தேன்,

அப்போது ஒரு தாய் தன் இரு குழந்தைகளுடன் வந்தார். தியேட்டர் ஹவுஸ்புல். டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் பிளாக்கில் விற்றுக் கொண்டிருந்தார்கள். அந்த குழந்தைகள் படம் பார்த்தே ஆகணும்னு தரையில விழுந்து அழுதார்கள்.

வேற வழியில்லாமல் அந்த தாய் தன் இடுப்பில முடிஞ்சு வச்சுருந்த காசையெல்லாம் தேடி, தேடி எடுத்து எண்ணிக்கிட்டு இருந்தாங்க. அவங்க கைல காசில்லைன்னு மட்டும் எனக்குத் தெரிஞ்சது. சட்டுன்னு நான் காரை விட்டு இறங்கி அவங்ககிட்ட போய் 100 ரூபாய் கொடுத்து ‘பிளாக்ல டிக்கெட் வாங்கிட்டு போங்க’ன்னு சொன்னேன்.

அப்புறம்தான் நினைத்துப் பார்த்தேன். என்னை வாழ வைத்த, வாழ வைக்கின்ற.. இந்த தாய்மார்களுக்காக.. ரசிகர்களுக்காக.. நான் என்ன செஞ்சேன்.. என்று..!. ஒண்ணுமே செய்யலைன்னு தோணுச்சு. ஏதாவது செய்யணும்னு தோன்றியது.  அந்த படம் பெரிய வெற்றியடைஞ்சுது. அப்பவே ஒரு கோடியை இந்த ரசிகர்களுக்குத் திருப்பிக் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனால் வெவ்வேறு காரணங்களால் முடியல.

வீட்ல பிரச்சினை.. மாமன், மச்சான், பங்காளி, தம்பி.. இப்படி பல பிரச்சினைகள். இதுல ஒரு கோடியை அள்ளிக் கொடுக்கும்போது எல்லாருமே யோசிப்பாங்கள்ல. நானும் மனுஷன்தானே..? எனக்கும் ஒரு சுயநலம் இருக்குமில்லை.. அப்ப முடியாமல் போய்விட்டது.

சரி.. இந்தப் படத்துலயாவது செய்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். இந்த படம் பண்ணுறதுக்காக எனக்கு அட்வான்ஸ் தர்றேன்னு வேந்தர் மூவிஸ் சொன்னப்போ, ‘இங்க தராதீங்க. இந்த படத்தோட பர்ஸ்ட் லுக் பங்ஷன் அன்னைக்கு கொடுங்க’ன்னு சொன்னேன். எல்லார் முன்னிலையிலும் அதை வாங்கி அப்படியே ஏழைகளுக்கு கொடுத்துடணும்னு நினைச்சேன். இப்போ அதைக் கொடுக்குறேன்..

எங்கம்மாகிட்ட இன்னிக்கு காலைலதான் இதைப் பத்தி சொன்னேன். ‘ஒரு கோடியையுமா..?’ என்றார். ‘ஆமாம்மா..’ என்றார். ‘நல்லா யோசிச்சுக்கப்பா’ன்னு சொன்னாங்க. ‘யோசிச்சுதாம்மா முடிவெடுத்திருக்கேன்..’ என்றேன். கடைசீல அவங்களும் இதுக்கு ஒத்துக்கிட்டாங்க.

இந்த 1 கோடியை எப்படி ரசிகர்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்க்குறதுன்னு யோசிச்சேன். அதுக்கு ஒரு திட்டத்தையும் உருவாக்கியிருக்கேன். சுமார் 100 நல்ல நண்பர்களைத் தேடிப் பிடிக்கப் போகிறேன். அவங்க கைல ஆளுக்கு 1 லட்சம்ன்னு கொடுத்து அவங்க மூலமா ஏழை மக்களின் படிப்பு, மருத்துவ உதவிகளுக்கு அவங்களுக்குத் தெரிஞ்சவங்க.. சொந்தக்காரங்க.. உண்மையா கஷ்டப்படுறவங்களுக்கு உதவி பண்ண வைக்கப் போறேன்.

கூடவே மரம் நடுவதை.. முக்கியமாக பசுமைத் திட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப் போறேன். இப்போ சமீபத்தில் கேரளாவுக்கு போயிட்டு வந்தேன். அங்க எங்க பார்த்தாலும் வீட்டுக்கு வீடு மரம், செடி, கொடிகளா இருக்கு. மரங்களுக்கு இடையேதான் அவங்க வீடே கட்டியிருக்காங்க. ஆனா இங்க.. திரும்பி சென்னைக்கு வந்ததும் ரொம்பவே யோசிச்சேன். பசுமைத் திட்டத்தை துவக்கினால் அதனால் இந்த சமூகமும் வளரும், நமக்கும் ஆரோக்கியமா இருக்கும்னு நினைச்சேன்.

இந்தத் திட்டத்தை முதலாவதாக சென்னை ராணி அண்ணா நகர்லதான் செய்யப் போறோம். ஏன்னா இப்போதைக்கு சினிமாலகூட பொட்டல் வெளிய காட்டணும்ன்னா அங்கதான் ஷூட் பண்ணுவாங்க. அந்த அளவுக்கு அந்த ஏரியால ஒரு மரம்கூட இல்லை. வெற்றிடமா இருக்கு. ஸோ.. அந்த இடத்துலதான் பசுமைத் திட்டத்தைத் துவக்கப் போறோம்.

நான் இந்தத் திட்டத்தை துவக்கறதுக்கு முன்னாடியே ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்புவை சந்தித்து பேசினேன். அவர்கிட்ட என்னுடைய இந்த்த் திட்டத்தைப் பத்தி சொல்லி ஆலோசனை கேட்டேன். அவரும் 2 மணி நேரம் என்னிடம் பேசி இதற்கான வழிமுறைகளையெல்லாம் வகுத்துக் கொடுத்தார். நிறைய அறிவுரைகளையும் சொல்லியிருக்கார். அதையெல்லாம் கேட்டுக்கிட்டேன். அதையும் செயல்படுத்தப் போறேன்.

இப்போ 1 கோடில ஆரம்பிக்கிற இந்த ‘கலாமின் காலடிச்சுவட்டில்’ திட்டம் மென்மேலும் வளரணும்னா நீங்களும் இதுல பங்கெடுத்துக்கணும். உங்களால் ஆன ஒரு குறிப்பிட்ட தொகையை அன்பளிப்பா இத்திட்டத்திற்குக் கொடுத்து இத்திட்டத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கணும்னு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.

வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்ண்ணே..!

Our Score