“வரி விலக்கு பற்றி 5 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு

“வரி விலக்கு பற்றி 5 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு

திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு கேட்டு விண்ணப்பித்தால்,  5 வாரங்களுக்குள் தமிழக அரசு முடிவை சொல்லவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் ஏழாம் அறிவு திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படம் ‘யு’ சான்றிதழ் பெற்றபோதும், அதற்கு தமிழக அரசு கேளிக்கை வரி அளிக்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘வரிவிலக்கு குழுவில் உள்ளவர்கள் திரைப்படத் துறையின் பல்வேறு பிரிவில் இருந்து வருபவர்கள். அவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினர் என்று கூறுவதற்கு இல்லை’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் முன்னிலையான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அரசு வக்கீல்கள் சுப்பிரமணிய பிரசாத், ராகேஷ் சர்மா ஆகியோர் ஆஜராகி வாதாடினர். ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் வக்கீல் விவேக் சிங் ஆஜரானார்.

கடந்த ஜூலை 1–ம் தேதி நடைபெற்ற இது தொடர்பான விசாரணையில் கேளிக்கை வரி விலக்கு குறித்த முடிவுகளை தணிக்கைக் குழு சம்பந்தப்பட்ட திரைப்படத்தை பார்வையிட்ட 30 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக ஒவ்வொரு கட்டத்திலும் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்ற காலப் பிரமாண விவரத்தை அறிக்கையாக மாநில அரசு கோர்ட்டுக்கு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் விரிவான அறிக்கை ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தயாரிப்பாளர்கள் விண்ணப்பம் தாக்கல் செய்த நாளில் இருந்து 4 வாரங்கள் என்பதற்கு பதிலாக திரைப்படத்தை திரையிட்ட நான்கு வாரங்களுக்குள் வரி விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு வக்கீல் சுப்பிரமணிய பிரசாத் வாதங்களை முன் வைத்தார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரி விலக்கு கோரி விண்ணப்பம் தாக்கல் செய்த 2 வாரங்களுக்குள் பார்வையிடும் குழுவினர் படத்தை திரையிடும் தேதியை அரசு சார்பில் தயாரிப்பாளருக்கு தெரிவிக்கவேண்டும்.

அந்த தேதியில் இருந்து அடுத்த 2 வாரங்களுக்குள் தயாரிப்பாளர் பார்வையிடும் குழுவுக்கு படத்தை திரையிடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். பின்னர் படத்தை பார்த்த தேதியில் இருந்து சம்பந்தப்பட்ட படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதா..? இல்லையா..? என்பதை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு தயாரிப்பாளருக்கு அறிவிக்கவேண்டும்..” என்று உத்தரவிட்டுள்ளனர்.

Our Score