“சின்னத்திரை படப்பிடிப்பு துவங்குவது எப்போது..?” – குஷ்பூ-ராதிகா திடீர் மோதல்..!

“சின்னத்திரை படப்பிடிப்பு துவங்குவது எப்போது..?” – குஷ்பூ-ராதிகா திடீர் மோதல்..!

தமிழ்நாடு சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளரான நடிகை குஷ்பூ சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பை எப்போது துவக்குவது என்பது பற்றி நேற்றைக்கு ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.

"டிவி சேனல்கள் வரும் மே 5-ம் தேதி ஷூட்டிங்கை துவக்கி மே 11-ம் தேதி அனைத்து சீரியல்களும் ஒளிபரப்பாக வேண்டும் என்று கேட்டுள்ளன. ஆனால், தமிழக அரசு ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில்தான் மே மாத நிலைமையை உறுதிப்படுத்திச் சொல்ல முடியும் என்று சொல்லியிருப்பதால் நாம் காத்திருப்போம்..." என்று அந்த ஆடியோ பதிவில் குஷ்பூ கூறியிருந்தார்.

அதனை இந்தப் பதிவில் நாம் முன்பேயே குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் இன்று காலையில் அதே சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில் "டிவி சேனல்கள் சீரியல்களின் ஷூட்டிங்கை துவங்கச் சொல்லவே இல்லை..." என்று குஷ்பூவின் கருத்தை முற்றிலும் மறுத்திருக்கிறார்.

ராதிகா சரத்குமார் தன் பேச்சில், "நான் சுஜாதா விஜய்குமார்கிட்ட காலைலதான் பேசினேன். அப்புறம் சேனல்ஸ்கிட்டேயும் பேசினேன். அமைச்சர்கள் மற்றும் சில தயாரிப்பாளர்களிடமும் பேசியுள்ளேன். குஷ்பு பேசினதையும் கேட்டேன். அதுல ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தணும்ன்னு நினைக்கிறேன்.

சேனல்கள், ‘ஷூட்டிங்கை தொடங்க வேண்டும்’ என்று சொல்லவில்லை.. ‘ஷூட்டிங்கை தொடங்க தயாராக இருங்கள்; ஸ்கிரிப்ட் எல்லாம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்’ என்றுதான் சொல்லியுள்ளன. நான் அதை மீண்டும் உறுதி செய்து கொண்டேன்.

‘சூட்டிங் போகணும்’னு நாம சொல்ல முடியாது. அதை அரசுதான் சொல்லணும். நாம் இன்னும் ரெட் சோனில்தான் உள்ளோம். சென்னையை பொறுத்தவரை, குறிப்பாக கோடம்பக்கம் இன்னும் ஹாட் ஸ்பாட்டில்தான் உள்ளது. ஆள் நடமாட்டமே அங்கு இருக்கக் கூடாது என்கிற நிலை இருக்கிறது. அதனால், இப்போது ஷூட்டிங் தொடங்குவதைப் பற்றி நாம் யோசிக்கவே முடியாது.

இதெல்லாம் மாறட்டும், அதன் பிறகு எப்படி ஷூட்டிங்கை தொடங்குவது அனைத்து தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து எப்படி செயல்படுவது என செல்வமணியிடமும் தெரிவித்துள்ளோம்.

நாம்  ஒரு தருணத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அதற்கு தகுந்த மாதிரிதான் வேலை செய்ய முடியும்.. அது மனசுல வச்சிக்கிட்டு நாம செயல்படுவோம் என்று சொல்லி இருக்கேன்.. இத மனசில வச்சிகிட்டு எப்படி பிளான் பண்ணி எப்படி ஒர்க் பண்ணனும்னு பார்க்கணும்.

ரொம்ப முக்கியமா சேனல்கள் இப்போ ஷூட்டிங்கை தொடங்கணும்னு சொல்லல.. அவங்க தயாராக இருங்கன்னுதான் சொல்லியிருக்காங்க. இதை மறுபடியும் கன்பார்ம் பண்றேன்..." என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகைகள் குஷ்பூ, ராதிகா இருவரின் வித்தியாசமான கருத்துக்களும், பேச்சுக்களுமே அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு மோதல் இருப்பதையே உணர்த்துகிறது.