சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்குவது எப்போது..? – நடிகை குஷ்பூ தகவல்

சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்குவது எப்போது..? – நடிகை குஷ்பூ தகவல்

உலகம் தழுவிய கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சீரியல்கள் எடுக்கப்பட்ட வரையிலும் ஒளிபரப்பாகின. அதன் பின்பு அதே நேரத்தில் அந்தத் தொலைக்காட்சியில் முன்பு ஒளிபரப்பாகி புகழ் பெற்ற சீரியல்களையே தற்போது திரும்பவும் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

இதனால் தொலைக்காட்சிகளுக்கு விளம்பர வருவாய் பெரிதும் குறைந்துவிட்டது. இது இப்படியே தொடர்ந்தால் பெருத்த நஷ்டத்தை தொலைக்காட்சிகள் சந்திக்க நேரிடும்.

இந்த நிலையில் அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் நாடு தழுவிய வகையில் ஊரடங்கு சட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

இதையொட்டி இப்போதே சீரியல்களின் ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகளை செய்யும்படி தொலைக்காட்சி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சீரியல் தயாரிப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளன.

தமிழ்நாடு சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான நடிகை குஷ்பூவிடமும் இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

குஷ்பூவும் பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணியிடமும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் இது குறித்து பேசியிருக்கிறார்.

இது பற்றிய ஒரு ஆடியோ பதிவை நடிகை குஷ்பூ இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில் குஷ்பூ பேசியது இதுதான் :

“வரும் மே 5-ம் தேதியன்று ஷூட்டிங்கை ஆரம்பித்து மே 11-ம் தேதி முதல் மீண்டும் சீரியல்களை டெலிகாஸ்ட் செய்ய வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் சொல்லி வருகிறார்கள்.

இது குறித்து நான் பெப்சியின் தலைவரான செல்வமணி ஸாரிடம் பேசினேன். “கொஞ்சம் யோசித்து சொல்கிறேன்…” என்று சொன்னார். இதேபோல் அரசுத் தரப்பில் சுகாதாரத் துறை அமைச்சரிடம் பேசினேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்.. “இப்போதுதான் ரேபிட் டெஸ்ட் ஆரம்பிக்கப் போறோம். ரேண்டமா பார்க்கப் போனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுதலாகத்தான் இருக்கும். இதனால் வரும் ஏப்ரல் 24, 25 ஆகிய தேதிகளின்போதுதான் எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்.

அதேபோல் பழைய மாதிரி எல்லாரையும் கூப்பிட்டு நீங்கள் ஷூட்டிங் நடத்துவது சாத்தியமே இல்லை. அதிகமாக கூட்டத்தைக் கூப்பிடாமல்.. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை அதிகம் சேர்க்காமல்.. அவுட்டோர் ஷூட்டிங் வைக்காமல்.. தேவைக்கு மட்டும் கொஞ்சம் பேர்களை வைத்துதான் ஷூட்டிங் நடத்த முடியும்.

படப்பிடிப்பின்போது அங்கேயிருக்கும் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். அப்படி அணியவில்லையெனில் நீங்களே பைன் போட்டு நிலைமையை சீராக்க வேண்டும்.

எப்படியிருந்தாலும் இதனை உறுதியாக இப்போது எங்களால் சொல்ல முடியாது. ஏப்ரல் 25, 26 தேதிகளில் மட்டும்தான் உறுதிப்படுத்த முடியும்” என்று சொன்னார்கள். செல்வமணி ஸாரும் இதையேதான் சொன்னார். இப்போதைய சூழலில் மே 11-க்குப் பிறகும் ஒரு வாரம் கழித்து தள்ளிப் போனால்கூட இது பரவாயில்லைதான்.  அதனால் நாமும் அதுவரையிலும் காத்திருப்போம்.

தயாரிப்பாளர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். தயவு செய்து ஒரே நாளில் எப்படியாவது ஒன்றரை எபிசோடாவது எடுத்துவிடுங்கள். அதுதான் நமக்கு நல்லது. நான் ஒவ்வொரு மீட்டிங்கிலேயும் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன். நீங்களும் ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள்.

‘அது வரலை..’, ‘இது வரலை..’, ‘ஆர்ட்டிஸ்ட் வரலை’ என்கிறீர்கள். இனி இதுபோல் சொல்ல வேண்டாம். எல்லாத்தையும் கூடுதலாவே எடுத்து வைச்சுக்குங்க. காலை ஏழு மணி முதல் இரவு 9 மணிவரை ஒன்றரை கால்ஷீட்டில்தான் நாம் ஏற்கெனவே ஷூட் செய்து கொண்டிருக்கிறோம். இப்போது இருக்கின்ற சூழலில் நாம் அதிகப்படியாக படப்பிடிப்பினை முன்கூட்டியே நடத்தி தயாராக இருப்பதுதான் நமக்கு நல்லது. எல்லாருக்கும் இது இப்போ புரிஞ்சிருக்கும். நாம் எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறோம் என்பதும் தெரிந்திருக்கும். அதனால் தயவு செய்து அனைவரும் பட்ஜெட்டை பார்த்து வொர்க் செய்யுங்கள்…” என்று  சொல்லியிருக்கிறார் நடிகை குஷ்பூ.

Our Score