ஜோதிகாவை குறை சொல்வது நியாயமா..?

ஜோதிகாவை குறை சொல்வது நியாயமா..?

நேற்றில் இருந்து சமூக வலைத்தளங்களுக்கு நிறைய தீனி போட்டுக் கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகாதான்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக விஜய் டிவியில் ஒரு தனியார் நிறுவனம் வழங்கிய விருது விழாவினை ஒளிபரப்பியது. அந்த விழாவில் விருதினைப் பெற்றுக் கொண்டு மேடையில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலை தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்லி பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

உண்மையில் அந்த மேடையில் நடிகை ஜோதிகா பேசியது இதுதான் :

‘’படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் போயிருந்தபோது பிரகதீஸ்வரர் கோயிலை பார்க்காமல் போயிராதீங்க. அவ்வளவு அழகா இருக்கும். போய்_பாருங்க என்று சொன்னார்கள். ஏற்கனவே பார்த்திருக்கேன். ரொம்ப சிம்ப்பிளா, கியூட்டா... உதய்ப்பூர் பேலஸ் போல இருக்கும்.

மறுநாள் எனக்கு அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு இருந்தது.. அங்கே நான் பார்த்ததையெல்லாம் வாயால் சொல்ல முடியாது.. அவ்வளவு மோசமான பராமரிப்பு. அன்று நான் மருத்துவமனையை பார்த்துவிட்டு நான் கோவிலுக்கு செல்லவில்லை.

கோவில்களை பராமரிக்க, பெயிண்ட் அடிக்க லட்சக்கணக்கில் செலவு பண்றீங்க. கோவில் உண்டியலில் அவ்வளவு காசு போடுறீங்க.

என்னுடைய வேண்டுகோள். அதே அளவு பணத்தை அரசு பள்ளிக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்பது மட்டுமே. பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் அவ்வளவு முக்கியம்...’’

இதுதான் ஜோதிகா பேசியது..

இதில் என்ன அவமரியாதை இருக்கிறது.. கோவில்களை பராமரிக்க நாம் செலவு செய்யும் தொகைகளை போலவே அதே அளவுக்கு அரசு மருத்துவமனைகளை பராமரிக்கவும், அரசுப் பள்ளிகளை பராமரிக்கவும் செலவிடுங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார்.

இதிலென்ன தவறு இருக்கிறது.. குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே பேச்சினை திரித்து அர்த்தம் கண்டுபிடித்து பேசுபவர்களும், எழுதுபவர்களும் நாட்டில் பெருகிக் கொண்டே போகிறார்கள்.

அது போன்ற வேலைவெட்டி இல்லாதவர்களின் வெட்டிப் பேச்சுதான் இந்த ஜோதிகா எதிர்ப்புப் பிரச்சாரம்..!