விஷாலுடன் ‘மருது’ படத்தில் நடிக்கிறார் ராதாரவி..!

விஷாலுடன் ‘மருது’ படத்தில் நடிக்கிறார் ராதாரவி..!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘கதகளி’ படம் பொங்கலுக்கு வரவிருக்கும் சூழலில் அடுத்து தான் நடிக்கும் ‘மருது’ படத்தில் தீவிரமாக உள்ளார் நடிகர் விஷால்.

கடந்த மாதக் கடைசியில் ராஜபாளையத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஷால் தற்போது சென்னையில் பெய்துள்ள கன மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் ‘மருது’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். உடன் பங்காளி சூரியும் உண்டு. மேலும் விஷாலின் பரம எதிரியாகிப் போன நடிகர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாரவியும் இந்தப் படத்தில் நடிக்கப் போவது ஒரு சந்தோஷமான செய்தி. சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.கே.சுரேஷ், கோலப்புள்ளி, லீலா ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய.. டி.இமான் இசையமைக்கிறார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜி.அன்புச்செழியன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கொம்பன் படத்தை இயக்கிய முத்தையாதான் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இந்த மருது திரைப்படம் கிராமத்து பின்னணியில் அதிரடி மற்றும் குடும்ப்ப் பாங்கான கதையம்சம் கொண்ட படமாகத் தயாராகிறதாம். ராஜபாளையத்தில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அடுத்து வெளிமாநிலங்களிலும் நடைபெறவுள்ளதாம்.