full screen background image

“ரஜினி, கமல் ஆதரவு எங்களுக்கே..!” – மார் தட்டுகிறார் நடிகர் ராதாரவி..!

“ரஜினி, கமல் ஆதரவு எங்களுக்கே..!” – மார் தட்டுகிறார் நடிகர் ராதாரவி..!

“தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினி, கமல் ஆதரவு எங்களுக்குத்தான் கிடைக்கும்..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ராதாரவி.

கோவையில் சினிமா – நாடக நடிகர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தின் தொடக்க விழா நேற்று ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நடிகர் ராதாரவி சங்கத்தைத் தொடங்கி வைத்தார்.

பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்து நடிகர் சங்கத் தேர்தல் குறித்து பேசினார்.

அப்போது, “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளர்ச்சியில் கோவைக்கு மிக முக்கிய பங்குண்டு. அதனால் கோவையில் புதிய சங்கத்தைத் துவக்கியுள்ளனர். இதை தென்னிந்திய நடிகர்கள் சங்கத்துடன் இணைக்க முடியுமா என்று கேட்டனர். இப்போதைக்கு முடியாது. தேர்தலுக்கு பிறகு இணைக்கலாம் என்று கூறியிருக்கிறேன்.

நடிகர் சங்கத் தேர்தல் எந்தத் தேதியில் நடத்தப்படும் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. அதை நீதிபதிதான் சொல்ல வேண்டும். அதேபோல் எதிரணியில் யார் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் என்பதும் தெரியாது. தேர்தல் நடைபெறும்போது எங்களது அணிக்கு ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்.

நடிகர் விஷால் அணியில் இளைஞர்கள் போட்டியிடுவதாகவும், இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர். இளைஞர்களுக்கு வழிவிடுவதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக அவர்கள் வழி கேட்கும் விதம் சரியாக இருக்க வேண்டும். எங்களுடனேயே இருந்து கொண்டு, அனைத்து நடவடிக்கைகளையும் கைதட்டி வரவேற்றுவிட்டு, கட்டடம் இடிக்கப்பட்டு ஓராண்டு கழித்து பிரச்னையை கிளப்புவது நியாயமில்லை.

தேர்தலில் எங்களது அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச் செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுகிறோம். நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.  ஆனால் என்ன பதவிக்கு என்பது இப்போதைக்கு முடிவாகவில்லை. பின்னர் அறிவிக்கப்படும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாக்களிக்கும் உரிமையை நான் பறித்தவிட்டதாகச் சொல்கிறார் விஷால். கருணாநிதி சங்கத்தில் கெளரவ உறுப்பினர் மட்டுமே.. அதனால்தான் அவருக்கு ஓட்டு உரிமை கிடையாது. இதேபோல நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்று விஷால் குற்றம்சாட்டுகிறார். அதுவும் தவறான தகவல். இப்படி விஷால் என்றாலே குற்றம் என்றாகிவிட்டது. நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவுக்கு வராதவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது..” என்று காட்டமாகவே பேட்டியளித்தார்.

Our Score