‘வாலு’ படம் எத்தனையோ தடைகளைக் கடந்து ரிலீஸாகி ஓடி முடிவடைந்த நிலையில், அடுத்த பஞ்சாயத்து ‘இது நம்ம ஆளு’ படத்தில் துவங்கியிருக்கிறது.
சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்க, பாண்டிராஜ் டைரக்ஷனில் டி.ராஜேந்தர் தயாரித்து வரும் படம் இது, இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கியாம். இதனை படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரிலீஸும் தாமதமாகியுள்ளது. வருகிறது. அந்த பாடல் காட்சிகளில் ஹீரோயின் நயன்தாரா நடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் சம்பளப் பாக்கி காரணமாக நயன்தார கால்ஷீட் தர மறுக்கிறாராம்.
இதனால் இந்தப் படத்தில் பாக்கியுள்ள இரண்டு பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத் தர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் செய்து இருக்கிறார்.
அவர் அளித்துள்ள புகாரில், “‘என் மகன் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவிகிதத் தொகையை கொடுத்து விட்டேன். மீதி 25 சதவிகித சம்பளம் மட்டுமே அவருக்கு பாக்கி இருக்கிறது.
இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நயன்தாராவின் மானேஜரிடம் பேசினோம். இம்மாதம் (செப்டம்பர்) ஐந்து நாட்களும், அடுத்த மாதம் (அக்டோபர்) ஐந்து நாட்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டுக் கொண்டோம். இதற்கு நயன்தாரா மறுக்கிறார்.
பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்ததும், அவருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து விடுகிறோம். நயன்தாரா ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துத் தர தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும்…” என்று கோரியிருக்கிறார். இந்த புகாரின் நகலை, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் அனுப்பியிருக்கிறார் டி.ராஜேந்தர்.
ஆனால் நயன்தாரா தரப்போ முன்னர் கொடுத்த கால்ஷீட்டுகள் அனைத்தையும் வீணாக்கிவிட்டதால் இவர்களால் எனக்குத்தான் பெரும் தொகை நஷ்டமாகியுள்ளது. இதனால் கூடுதல் தொகையை தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் கொடுத்தால் கால்ஷீட் தரத் தயார் என்று சொல்லியிருக்கிறாராம்..!
சிம்பு என்றாலே வம்பு என்றாகிவிட்டது..! இந்த சர்ச்சையை எந்த பெரிய ஹீரோ முடித்து வைத்து புண்ணியத்தைச் சேர்க்கப் போகிறாரோ தெரியவில்லை..!