இன்றைய தினம் பாலிவுட்டிற்கு கிடைத்திருக்கும் திடீர் இனிய அதிர்ச்சியான செய்தி நடிகை ராணி முகர்ஜியின் திருமணம்தான்..
ராணி முகர்ஜி தனது நீண்ட நாள் காதலரான இயக்குநர், தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ராவை இத்தாலியில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இந்த நிகழ்வில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து ராணி முகர்ஜி இத்தாலியில் இருந்து தெரிவித்திருக்கும் செய்தியில், இந்த மகிழ்ச்சிகரமான நாளில் இந்த நல்ல செய்தியை உலகம் முழுவதிலும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கு நான் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.. அவர்களுடைய ஆசீர்வாதங்களும், வாழ்த்துகளும் என்றும் எனக்குக் கிடைத்திருக்க வேண்டும். என்னுடைய நலனில் அக்கறை கொண்ட அனைவருமே இந்த இனிய நாளை எனக்காக எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
இந்தத் திருமண நிகழ்ச்சி இத்தாலியின் ஒரு சிறிய ஊரில் எங்களது மிக நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் நடைபெற்றது. யாஷ் சோப்ரா அங்கிளின் ஆசீர்வாதங்கள் எனக்கும் ஆதித்யாவுக்கும் நிச்சயம் கிடைத்திருக்கிறது.
கடவுள் தரும் இனிமையான கனவுலக வாழ்க்கையை நான் நிறைய முறை எதிர்பார்த்திருக்கிறேன். இப்போது அது எனக்குக் கிடைத்திருக்கிறது. இது எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி என்பதை நான் பெரிதும் உணர்ந்திருக்கிறேன்..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
38 வயதான ராணி முகர்ஜி, 1997-ம் ஆண்டு Raja Ki Aayegi Baraat என்ற படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். 1998-ல் அவர் நடித்து வெளிவந்த குச் குச் கோத்தா ஹை என்ற படம் ஹிந்தியில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே சக்கை போடு போட்டது. அதில் இருந்து பல ஆண்டுகள் பாலிவுட்டில் மிகப் பெரும் நடிகையை வலம் வந்தார்.
ஆதித்யா சோப்ரா பழம் பெரும் தயாரிப்பாளர் இயக்குநரான யாஷ் சோப்ராவின் இளைய மகன். பாலிவுட்டில் மிகப் பெரிய தயாரிப்பாளர். 2 படங்களை இயக்கியிருக்கிறார். இந்தியாவில் மூலை முடுக்கெல்லாம் சக்கைப் போடு போட்ட Dilwale Dulhania Le Jayenge படத்தை இயக்கியது இவர்தான்..
நீண்ட வருடங்களாகவே ராணி முகர்ஜியும், ஆதித்ய சோப்ராவும் காதலித்து வந்தனர். பத்திரிகைகளில் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளாத காதலர்கள். டிவிக்களில் மட்டுமே வெளிப்படையாக பேசி வந்தார்கள். ராணி முகர்ஜி தமிழில் கமல்ஹாசனுடன் ஹே ராம் படத்தில் மட்டுமே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பதிகளுக்கு எமது வாழ்த்துகள்..!