full screen background image

கோச்சடையானே லேட் விற்பனைதான்..! – தயாரிப்பாளர் கேயார் பேச்சு

கோச்சடையானே லேட் விற்பனைதான்..! – தயாரிப்பாளர் கேயார் பேச்சு

சில நேரங்களில் மேடைப் பேச்சின்போது வாய் தவறி உண்மைகள் வெளியே வந்துவிடும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல..!

இன்றைக்கு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற நாங்கெல்லாம் ஏடாகூடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கேயாருக்கும் இதுதான் நடந்தது.

பேச்சின் துவக்கத்தில் படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டிவிட்டு பாயிண்ட்டிற்கு வந்தார். “தயாரிப்பாளருக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன்.. அவர் இப்பத்தான் ஆடியோ பங்ஷனை முடிக்கிறார். இன்னமும் படத்தை ரிலீஸ் செய்யணும்.. அதுக்கு முன்ன படம் விக்கணும்.. படம் விக்கலையேன்னு வருத்தப்பட வேண்டாம். இப்போ ரஜினி நடிச்ச ‘கோச்சடையான்’ படமே ஆடியோ ரிலீஸ் ஆகுறவரைக்கும் விக்கலை. அதுக்கப்புறம்தான் வித்துச்சு.. இங்க நல்ல படம், கெட்ட படம்ன்னெல்லாம் இல்லை. சின்ன படம், பெரிய பட்ஜெட் படம்ன்னு மட்டும்தான் இருக்கு. அதுனால தயாரிப்பாளர் பயப்படாம இருக்கணும். இனிமே நிச்சயமா இந்தப் படம் வித்திரும்..” என்றார்.

‘கோச்சடையான்’ விற்பனை குறித்து கேயார் இப்படிச் சொன்னாலும், அதன் அதிக விலை.. மற்றும் அதன் தயாரிப்பாளர்களின் முந்தைய கடன் பாக்கி என்று இரண்டு விஷயங்களால் அதன் ஒட்டு மொத்த விற்பனையில் இன்னமும் தடங்கல்கள் இருக்கின்றன என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்.

அனிமேஷன் படம் என்பதால் அந்த அளவுக்கு ரசிகர்கள் திரண்டு வருவார்களா என்று தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் பயப்படுகிறார்கள். அதிக விலைக்கு வாங்கிவிட்டு கூட்டம் வராமல் நஷ்டப்பட்டால் நஷ்டத்தை நாமதானே சுமக்க வேண்டும் என்ற யோசனையில் நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இதே நேரத்தில் ரஜினியோ, “இந்தப் படத்தில் நஷ்டம் என்று சொல்லி யாரும் என்னிடம் திரும்பி வரக் கூடாது.. வந்தால் நான் எதையும் செ்யய மாட்டேன். இந்த மாதிரி கண்டிஷனோட படத்தை விற்பனை செய்யுங்கள்…” என்று சொல்லியிருக்கிறார்.

மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி மாதிரி, தயாரிப்பாளர்கள் இப்போது ரஜினிக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிக முதலீட்டில் படம் தயாரித்தால் இதுதான் சிக்கல். வரவுக்கேற்ற செலவுகளைத்தான் செய்ய வேண்டுமென்று பெரியவர்களுக்கே தெரியாதா என்ன..?

Our Score