இந்தாண்டு வெளியான பேய்ப் பட வரிசையில் இது அடுத்தப் படம். சைக்காலஜிக்கல் திரில்லர் என்றார் இயக்குநர். படத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை. ஆனால் ஏதோ சம்திங் சஸ்பென்ஸ் திரில்லர் படம்..!
ஹீரோ அஜய்யும், ஹீரோயின் ரென்யாவும் காதலர்கள். ரென்யாவின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணம் முடிந்து தனது வீடு திரும்பும் அஜய்யை அன்றைய இரவான முதல் இரவினை கோலாகலமாகக் கொண்டாட எண்ணுகிறார். அந்த நேரத்தில் அவரது காதலுக்கு உதவிய நண்பர்கள் கையில் பாட்டிலோடு வந்து அவருடைய பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள்.
அஜய்யும் பார்ட்டியில் கலந்து கொண்டு மப்பாகி தூங்கி விடுகிறார். காலையில் அவரது மனைவி படுக்கையில் இறந்து கிடக்கிறார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அது ஹார்ட் அட்டாக் என்கிறது. இதனால் போலீஸ் விசாரணையில் இருந்து தப்பித்தாலும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் அஜய்.
வேலையிலும் கவனத்தைச் செலுத்த முடியாமல்.. அன்றாட வாழ்விலும் நகர முடியாமல் தவிக்கிறார். இந்த நேரத்தில் அந்த வீட்டில் நடக்கும் சில சம்பவங்கள் யாரோ அவரது அருகில் இருப்பது போலவும் கூடவே நடமாடுவது போலவும் தெரிய வர.. பயப்படத் துவங்குகிறார்.
சில பயமுறுத்தல்களுக்கு பிறகு அது அவரது காதல் மனைவி ரென்யா என்றே அவருக்குத் தெரிய வர ரென்யா அந்த வீட்டில் பேயாக உலாவுவதாக நம்பத் துவங்குகிறார். அஜய்யின் நண்பர்களும், அம்மாவும், அக்காவும் இதை நம்ப மறுக்கிறார்கள். சாமியாரை வைத்து பூஜையெல்லாம் செய்கிறார்கள்.
பேய் எதற்கும் அடங்காமல் இருக்க.. பேயோடு பேசும் அனுபவம் வாய்ந்த ஒரு மருத்துவரை சந்தித்து தனது குறையைச் சொல்கிறான் அஜய். அந்த மருத்துவரும் ஒரு நாளில் மர்மமான முறையில் இறந்து போக.. திக்கென்றாகிறது.. மரணம் அடுத்து அஜய்யின் அக்காவையும் தொற்றிக் கொள்ள.. ஏதோ தப்பு நடக்கிறதோ என்று அஜய் நினைக்கிறார்.
அந்த நேரத்தில் அக்காவின் கணவர் வந்து சில விஷயங்களை பேச.. பொறி தட்டுகிறது அஜய்க்கு.. அஜய் நினைத்தது போலவே அவரது சந்தேகத்தில் விடை கிடைக்க.. உண்மையான குற்றவாளி கிடைக்கிறான்.. அது யார் என்பது சஸ்பென்ஸ்..!
உண்மையில் விமானிகளாகப் பணியாற்றி வரும் தயாரிப்பாளரும், நடிகரும் கோடம்பாக்கத்தை ஒரு வழி செய்வது என்று நினைத்து தைரியமாக களத்தில் குதித்திருக்கிறார்கள். முதற்கண் அவர்களது தைரியத்திற்கு நமது பாராட்டுக்கள்.
அஜய்யாக நடித்திருக்கும் கதாநாயகன் அஷ்ரப்.. தானும் தேர்வு செய்த கதை என்பதால் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். முழு படமுமே இவரை சுற்றியேதான் நகர்கிறது என்பதால் ஷாட் பை ஷாட் இவரேதான் வருகிறார்.. புதுமுகம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு கச்சிதமான நடிப்பு.. திகிலூட்டும் இசை.. கேமிரா எதைக் காட்டப் போகிறதோ என்கிற சின்ன பயம்.. இதற்கு நடுவில் தானும் அதற்குச் சரிசமமாக நடித்திருக்கிறார். அலுவலகத்தில் கோபப்பட்டு, பின்பு தானே சமாதானமாகும் காட்சியில் அசத்தல்.. அந்த பேயை பார்த்து பயப்படும் ஒவ்வொரு பிரேமிலும் கூடவே நம்மையும் பயமறுத்த வைக்கிறார்.. வெல்டன் ஸார்..
ஹீரோயின் அதிதி செங்கப்பா. அதிகம் வேலையில்லை. கொஞ்ச நேரம்தான் ஸ்கிரீனில் தென்படுகிறார். பின்பு அவ்வப்போது பாடல் காட்சிகளிலும், மாண்டேஜ் ஷாட்டுகளிலும் வந்து போனாலும் ரசிக்க வைத்திருக்கிறார். இவருடைய நண்பனாக வருபவர் அதிகம் சிகரெட் பாக்கெட்டுகளை ஊதித் தள்ளினாலும் ஒருவேளை இவராக இருக்குமோ என்கிற சந்தேகத்தை பார்வையாளர்களிடத்தில் திணிப்பது போன்ற காட்சியமைப்பில் நடித்திருக்கிறார்.
சரவணனின் ஒளிப்பதிவை எவ்வளவு வேண்டுமானாலம் பாராட்டலாம். இது போன்ற திரில்லர் படங்களில் கேமிராவின் பங்களிப்பு மிக அதிகமாக தேவை. அது அத்தனையும் இந்தப் படத்தில் இருக்கிறது. பேய் இருக்கா.. இல்லையா.. என்று நாம் கவலைப்படும் அளவுக்கு படத்தின் முற்பாதியில் பேயின் அட்டகாசங்களைக் காட்டி அமர்க்களம் செய்திருக்கிறார்.
இவருக்கு தோதான ஜால்ரா இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன்.. கூட்டி, குறைத்து காட்சிகளுக்கேற்றபடியே இசையைக் கொடுத்திருக்கிறார். அந்தக் குழந்தை வாசலில் விளையாடும்போது இசையே இல்லாமல் செய்து கவனத்தை ஈர்த்து அந்தக் காட்சியில் ஏதோ நடக்கப் போகிறதோ என்றெண்ண வைத்து ஏமாற்றியிருக்கிறார்கள்.
பிரபு யுவராஜ் என்பவர் இயக்கியிருக்கிறார். கொஞ்சம் லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் அது திரில்லர் படங்களில் கவனிக்கப்படாது என்கிற கொள்கையுடன் கதையைத் தயார் செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
மகனின் முதல் இரவு அன்றே தாயும், தமக்கையும் மகனின் பிரைவசிக்காக வீட்டில் இருந்து வெளியேறுவார்களா..? அதுவும் அவ்வளவு பெரிய பிரமாண்டமான வீட்டில்..?
தாங்களே முன் வந்து சேர்த்து வைத்த காதலரின் முதல் இரவைக் கலைக்கும் வகையில் எந்த நண்பர்களாவது பாட்டிலோடு இரவு நேரத்தில் வீடு தேடி வருவார்களா..?
அந்த வீட்டில் பேய் இல்லை என்பது கிளைமாக்ஸில் நிரூபணமானாலும், பேய் இருப்பது போன்ற காட்சிகளை வைத்தது ஏனோ..? பின்பு பேய் இல்லையென்றால் அவையெல்லாம் எப்படி நடந்தன..?
ஒரு கட்டத்தில் இறந்து போன தனது மனைவியை பேயாக பார்த்து பயப்படுகிறார் ஹீரோ. இந்தக் காட்சியிலேயே ஹீரோ மனதளவில் பேயோடு செட்டாகிவிட்டார் என்றே தெரிகிறது. பின்பு எப்படி அவருக்கு அந்த பேய் இல்லாத சந்தேகம் ஏற்படுகிறது..?
கிளைமாக்ஸில் வில்லனையும் காட்டிவிட்டு, பின்பு பேயையும் காட்டி ‘தொடரும்’ என்று சொன்னால் இப்போது எதை நம்புவது..? எதை நம்பாமல் விடுவது என்கிற குழப்பம்தான் வருகிறது..
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. பட்.. நமக்குத் தேவை சஸ்பென்ஸ்.. திரில்லர்.. அது போதுமான அளவு இதில் இருக்கிறது..
பேய்ப் பட ரசிகர்கள் பார்க்கலாம்..!