“தற்போதைய இளம் இயக்குநர்கள் ‘பீஸ்ட்’ பட இயக்குநரான நெல்சன் திலீப்குமாரைப் போல தலைக்கனம் இல்லாமல் இருக்க வேண்டும்..” என்று மூத்த இயக்குநரான ஆர்.வி.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் ஒரு திரைப்படம் வெளியானால் மட்டுமே அது பான் இந்தியா படமல்ல.. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அதை ரசித்திருக்க வேண்டும். அதுதான் பான் இந்தியா படம்…” என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற ‘கற்றது மற’ என்ற திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் பேசும்போது, “இன்றைக்கு பல மொழிப் படங்களும் ‘பான் இந்தியா’ என்ற பெயரில் வெளியாகின்றன. ஒரு திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டாலே அது ‘பான் இந்தியா’ படமாகிவிடாது. மாறாக, நாடு முழுவதும் ரசிக்கப்பட்டால்தான் அது ‘பான் இந்தியா’ திரைப்படம்.
எனவே கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலகம் முழுவதும் ரசிக்கும்படியான திரைப்படங்களை உருவாக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் முக்கியம் கிடையாது; கதைதான் முக்கியம். எனவே, கதையில் இயக்குநர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், வெற்றி பெற, வெற்றி பெற பணிவும் வர வேண்டும். தலைக்கனம் இருக்கக் கூடாது. தற்போது வெளிவரவிருக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப்குமார் நெல்சன் எப்படிப்பட்டவர் தெரியுமா..?
நான் இந்த விழாவுக்கு கிளம்பி வரும்போது ஒருத்தர் போன் பண்ணினார். எடுத்தேன். “அண்ணே வணக்கம்னே.. நம்ம டைரக்டர் யூனியன்ல கார்டு வாங்கிட்டேன்ணே.. கார்டு நல்லா, சூப்பரா நயத்துடன் இருக்கு”ன்னு சொன்னாரு.. “சரி.. தம்பி நீ யாருப்பா?”ன்னு கேட்டேன்.. “நான்தான் சார் நெல்சன்.. இப்போதான் விஜய் ஸார் படம்… ‘பீஸ்ட்’ பண்ணியிருக்கேன்”னு சொன்னாரு..
எவ்வளவு பணிவா இருக்காங்க பாருங்க..? நெல்சனை மாதிரி இயக்குநர்களை நான் போற்றவும், பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன். எந்த இடத்துக்குப் போனாலும், வந்த இடத்தை மறந்துடக் கூடாது.
இன்றைக்கு திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து பணத்தை பெறுவது தயாரிப்பாளர்களுக்கு கடினமாக உள்ளது. இன்று திரைப்படங்களை செல்போனில் பார்க்கும் வசதி வந்துவிட்டது.
அடுத்தக் கட்டமாக க்யூ ஆர் கோடினை பயன்படுத்தி 25 ரூபாய் செலவில் ஒரு படத்தை பார்க்கும் வசதியை கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன…” என்றார்.