விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் வெளியீட்டால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள், திரையுலகத்தினர் மட்டுமன்றி அகில இந்தியாவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை நடத்தி வரும் இரண்டு நிறுவனங்களும் லாபம் சம்பாதித்திருப்பதாக விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை நடத்தி வருபவை ‘பி.வி.ஆர்.’ மற்றும் ‘ஐநாக்ஸ்’ நிறுவனங்கள்.
இந்தக் கொரோனா லாக் டவுனில் இந்த இரண்டு நிறுவனங்களும் மிகப் பெரிய நஷ்டத்தைச் சம்பாதித்தன. தியேட்டர்களை மூடியதாலும், மூடிய தியேட்டர்களுக்கு வாடகை கட்ட வேண்டியிருந்ததாலும்… ச்சும்மாவே பல கோடிகளை இந்தக் கொரோனா லாக் டவுன் காலத்தில் இழந்திருக்கின்றன இந்த இரண்டு நிறுவனங்களும்.
தற்போது மறுபடியும் தியேட்டர்கள் கிடைக்க உத்தரவு கிடைத்திருந்தபோதிலும் எந்தத் தியேட்டரிலுமே அன்றாட மின் கட்டணத்தைச் செலுத்தும் அளவுக்குக்கூட கூட்டம் வராததால் கடும் நஷ்டத்தில் இருந்து வந்தன.

இந்த இரண்டு நிறுவனங்களுமே பங்குச் சந்தை வர்க்கத்தில் ஈடுபட்டிருந்ததால் அந்தச் சந்தை மதிப்பும் வெகுவாக குறைந்தது. இதனால், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த பலருக்கும் பல கோடிகளில் இழப்பு ஏற்பட்டிருந்தது.
தற்போது ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி என்ற செய்தியும், முதல்முறையாக வட இந்தியாவில் மாஸ்டர் படம் 1000 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகப் போகும் செய்தியும், சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித டிக்கெட்டுகளுக்கு அனுமதி என்ற செய்தியும் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய லாபத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
இன்றைக்கு பங்குச் சந்தையில் இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கு விலை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது.
பி.வி.ஆர். நிறுவனத்தின் பங்கு விலை தோராயமாக 4.44 சதவிகிதமும், ஐநாக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 6.33 சதிவிகிதமும் உயர்ந்துள்ளது. இதனால் இந்த நிறுவனப் பங்குகளை வாங்கியுள்ளவர்கள் பெருமூச்சுவிட்டுள்ளனர்.
பொங்கல் வெளியீட்டுக்குப் பின்பு பெரிய வசூல் கிடைக்கும்பட்சத்தில் இந்தப் பங்குகளின் விலை மென்மேலும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் அதிகமான மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் வட இந்தியாவில்தான் இருக்கின்றன. இவைகளில் ‘மாஸ்டர்’ வெளியாகும்போது ஒரு பரபரப்பு ஏற்படும். முதல் 4 நாட்களிலேயே ஓரளவு கூட்டம் வந்தாலே தியேட்டருக்கு ரெகுலராக கூட்டம் வர ஆரம்பித்துவிடும் என்று தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை ‘மாஸ்டர்’ படம் நிச்சயமாக நிறைவேற்றும் என்பது அவர்களது கணிப்பு.
இந்த 4 நாட்கள் கூட்டத்திற்குப் பிறகு நிச்சயமாக பங்குச் சந்தையில் இந்த இரண்டு நிறுவனப் பங்குகளின் விலை மென்மேலும் உயரும் என்று அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
“இப்படி எங்க தளபதி விஜய் மறைமுகமாக பங்கு மார்க்கெட்டிலேயே புகுந்து விளையாடுகிறார். பங்குகளின் விலை உயர்வுக்கும், கம்பெனிகளின் லாபத்திற்கும் காரணகர்த்தவாக இருக்கிறார்…” என்று அவரது ரசிகர்கள் புளகாங்கிதப்பட்டு முகநூலிலும், டிவிட்டரிலும் எழுதி வருகிறார்கள்.