full screen background image

‘மாஸ்டர்’ படத்தின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை..!

‘மாஸ்டர்’ படத்தின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை..!

‘மாஸ்டர்’ படத்தின் வரவுக்காக நடிகர் விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல.. தமிழ்த் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

‘மாஸ்டர்’ படத்திற்கு எவ்வளவு கூட்டம் வரும்..? எவ்வளவு வசூல் கிடைக்கும்..? ‘திரும்பவும் மக்கள் குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு வருவார்களா…?’ என்கிற பல கேள்விகளுக்கு ‘மாஸ்டர்’ படம்தான் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

இந்த நேரத்தில் ‘மாஸ்டர்’ இந்த படத்திற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் பிரச்சினை எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

‘மாஸ்டர்’ படத்தின் விநியோக உரிமை சில மாதங்களுக்கு முன்பே முழுமையாக விற்பனை செய்யப்பட்டுவிட்டது. ஆனால், தற்போதைய கொரோனா பய சூழலில் ஒருவேளை மக்கள் தியேட்டருக்கு வரவில்லையென்றால் என்னாவது என்கிற பயம் விநியோகஸ்தர்களுக்கு லேசாக எட்டிப் பார்த்துள்ளது.

காரணம் ‘மாஸ்டர்’ படத்திற்காக அவர்கள் கொடுத்திருக்கும் தொகை மிகப் பெரிய தொகை. இதுவரையிலும் எந்தவொரு விஜய் படத்துக்கும் கொடுக்காத தொகையை விநியோகஸ்தர்கள் இந்த ‘மாஸ்டர்’ படத்துக்காகக் கொடுத்திருக்கிறார்கள். தியேட்டர்களில் மட்டும் மொத்தமாக 200 கோடியை இந்தப் படம் வசூல் செய்தால் மட்டும்தான், விநியோகஸ்தர்கள் போட்டிருக்கும் முதலீட்டுத் தொகையே திரும்ப வரும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

பொங்கல் பண்டிகையொட்டி வரும் ஜனவரி 13-ம் தேதியன்று மாஸ்டர் படம் வெளிவருவதால், அடுத்த 4 நாட்கள் ஜனவரி 17-ம் தேதி வரையிலும் கூட்டம் வரலாம். ஆனால், அதன் பின்பும் தியேட்டர்களுக்குக் கூட்டம் வருவது குடும்பத்தினரின் கைகளில்தான் உள்ளது.

விஜய் ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக தங்களது நீண்ட நாள் ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக முதல் 4 நாட்களிலேயே படத்தைப் பார்த்து முடித்துவிடுவார்கள். ஆனால் 5-வது நாளிலிருந்து கூட்டம் வந்தால் ஒழிய போட்ட காசை முழுமையாக எடுக்க முடியாது என்கிற நிஜத்தை விநியோகஸ்தர்கள் தரப்பினர் தற்போது உணர்ந்திருக்கிறார்கள்.

இதனால் சென்னை, செங்கல்பட்டு ஏரியாவை வாங்கியிருந்த விநியோகஸ்தரும், கோவை ஏரியாவை வாங்கிய விநியோகஸ்தரும் விநியோகத் தொகையைக் குறைத்துக் கொள்ளும்படி தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்டுள்ளனர். ஆனால், லலித்குமார் இதற்கு உடன்படாததால் அந்த இரண்டு ஏரியாக்களின் விநியோக உரிமையை அந்த விநியோகஸ்தர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

இதனால் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஏரியாக்களில் தயாரிப்பாளர் லலித்குமார் தானே ‘மாஸ்டர்’ படத்தை வெளியிடுவதாக உள்ளார். இதற்காக, அவருடைய அலுவலகத்தினர் தியேட்டர்களை புக்கிங் செய்யும் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

தியேட்டர்கள் மூலம் கிடைக்கும் வசூலில் முதல் வாரம் 80 சதவிகிதம் தயாரிப்பாளருக்கு, 20 சதவிகிதம் விநியோகஸ்தருக்கு என்று முதலிலேயே எப்போதும் இல்லாத அளவுக்கு ஒப்பந்தம் செய்திருந்தார் தயாரிப்பாளர். ஆனால், இப்போது தனித்தனியாக தியேட்டர்களை புக்கிங் செய்யும்போது பல தியேட்டர் அதிபர்கள் இதனை ஏற்க மறுத்து சதவிகிதக் கணக்கை குறைக்கச் சொல்கிறார்களாம்.

“இதனால் பல ஊர்களில் தியேட்டர்களை புக்கிங் செய்யும் வேலை இழுத்துக் கொண்டே செல்கிறது..” என்கிறார்கள் தியேட்டர்கள் தரப்பினர்.

“கோவை, திருப்பூர் பகுதியில் இருக்கும் தியேட்டர்களில் பெரும்பாலோர் இதுவரையிலும் தயாரிப்பாளரிடம் எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. அது போடப்பட்ட பின்புதான் படத்துக்கான முன் பதிவு துவங்கும். ஜனவரி 10-ம் தேதிக்கு பின்பு அது நடக்கலாம்…” என்று திருப்பூர் பகுதியைச் சேர்ந்த தியேட்டர் அதிபர்கள் தங்களது டிவிட்டர் தளத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளார்கள்.

நடிகர் விஜய் நடித்த ‘தலைவா’ படத்தில் இருந்து அதன் பின்பு வெளிவந்த அனைத்து படங்களுமே ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கித் தவித்த பின்புதான் வெளியாகின்றன.

இதில், இப்போதைய ‘மாஸ்டர்’ படமும் தப்பவில்லை..!

Our Score