‘புலி’ படத்தின் விமர்சனங்களைவிடவும் அந்தப் படம் திரைக்கு வருவதற்கு பட்டபாடுதான் இப்போது அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் வாங்கிய இந்தப் படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கவில்லை. கிடைக்காது என்பது தமிழ்த் திரையுலகில் இருக்கும் அனைவருக்குமே முன்பே தெரிந்த விஷயம்தான். ஏன் விஜய்க்கே இது நன்கு தெரியும்.
தங்களது ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் சம்பந்தப்பட்ட படங்களுக்கு வரிவிலக்கு மட்டுமல்ல, எந்தவித அரசு உதவியும் கிடைக்கக் கூடாது என்பதில் இப்போதைய அ.தி.மு.க. அரசு ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது.
இதனால்தான் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த 4 படங்களுக்கும் வரிவிலக்கு கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது. இதை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்த ‘புலி’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ கிடைத்தவுடன் வரி விலக்கு கேட்டு விண்ணப்பித்தார்கள். அரசின் வரி விலக்கு குழுவினர், ‘புலி’ படத்தை பார்த்துவிட்டு, ‘படத்தில் ஆபாசமும் வன்முறையும் அதிகமாக இருக்கிறது’ என்று சொல்லி ‘வரி விலக்கு தர முடியாது’ என மறுத்துவிட்டார்கள்.
அரசின் இந்த வரி விலக்கு குழுவில் சென்னை தெற்கு வருவாய்த் துறை இணை ஆணையர் சி.பழனி, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் துணை இயக்குநரான ம.சி.தியாகராஜன், இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், பிரபல பின்னணிப் பாடகர் டி.எல்.மகாராஜன், பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன், இவரது மனைவியும் பழம் பெரும் நடிகையுமான திருமதி எம்.என்.ராஜம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் ‘புலி’ படத்தை பார்த்துவிட்டு, ‘வரி விலக்கு அளிக்க முடியாது’ என்பதற்கு அவரவர் தரப்பு காரணங்களைக் கூறி மறுத்திருக்கிறார்கள்.
*திரைப்படத்தில் மூட நம்பிக்கைகளை உண்மையாக காட்டப்படும் காட்சிகள் தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் உள்ளன.
* படத்தின் பாடல் காட்சிகளில் மகளிரின் ஆடைகள் ஆபாச காட்சிகளாக சில இடங்களில் அமைந்துள்ளன.
* படத்தில் குழந்தையின் கழுத்து அறுபடுவது, சண்டைக் காட்சியில் வன்முறை, கொலைக் காட்சிகள் நேரிடையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
* மனித உயிர்களுக்கு மதிப்பளிக்கவில்லை. குழந்தைகளையும், பெண்களையும் வெட்டிக் கொல்வது ஏற்புடையதாக இல்லை. அதிகமான வன்முறை காட்சிகள் உள்ளது.
* திரைப்படம் முழுக்க வன்முறை அதிகரித்துள்ளது. ஆரம்பித்திலே இரட்டை அர்த்த வசனங்கள், 12 வயது குழந்தை கழுத்து வெட்டப்படுவதாக காட்டப்படுகிறது. மேலும், படம் முழுவதும் மூட நம்பிக்கைக்கு உயிர் ஊட்ட முளைத்திருப்பதால் வரி விலக்கிற்கு தகுதியானது அல்ல.”
இப்படி அனைவருமே ஒன்றுக்கொன்று தொடர்புடைய வார்த்தைகளை பயன்படுத்தியே வரி விலக்குக்கு அனுமதி மறுத்திருக்கிறார்கள்.
“இப்படி இவர்கள் சொல்லியிருக்கும் பலவித ஆபாசங்களுடன் பல திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. அதற்கெல்லாம் எப்படி வரிவிலக்கு அளித்தார்கள் என்று தெரியவில்லை. இது முழுக்க முழுக்க விஜய் மீதான காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் மறுக்கப்பட்டதுதான்..” என்கிறார்கள் திரையுலகத்தினர்.
படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவிக்கு விற்கப்பட்டிருப்பதும், படத்தில் வரும் சில வசனங்கள் ஜெயலலிதாவை நோக்கி பேசப்படுவதுபோல தோன்றுவதும்தான் இந்த வரி விலக்கு பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்று காதைக் கடிக்கிறார்கள் சில திரையுலகப் புள்ளிகள்..!
‘புலி’ படத்தில் ஸ்ரீதேவியிடம் விஜய் கேட்கும் சில கேள்விகள் நியாயமானவையாகவே இப்போது தோன்றுகின்றன..!










